ஆப்கானிஸ்தான் டு டெல்லி: 94 நிமிடம் விமானத்தின் சக்கரத்தில் பயணித்த 13 வயது சிறுவன் - என்ன நடந்தது?
Vikatan September 24, 2025 02:48 PM

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள குண்டுஸ் என்ற இடத்தைச் சேர்ந்த 13 சிறுவன் ஈரானுக்கு பயணம் செய்ய நினைத்து, யாருக்கும் தெரியாமல் காபூல் விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார்.

அங்கே பயணிகளுடன் கலந்து, விமானம் அருகே சென்றதும் அடியில் உள்ள லேண்டிங் கியர் இருக்கும் அறையில் பதுங்கியுள்ளார். விமானமும் பறக்கத்தொடங்கியுள்ளது. ஆனால் அது அவர் எண்ணியதுபோல தெஹ்ரானுக்கு செல்லும் விமானம் அல்ல, டெல்லிக்கு வருவது!

ஆப்கானிஸ்தான் டூ டெல்லி: 94 நிமிடம் விமானத்தின் சக்கரத்தில பயணித்த 13 வயது சிறுவன்

அதிர்ஷ்டவசமாக எந்தவித காயமுமின்றி 90 நிமிடங்களுக்கும் மேலாக விமானத்தின் சக்கரங்களுக்கு இடையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார்.

இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் சுற்றித்திரிந்த சிறுவனை விமான நிலைய ஊழியர்கள் பார்த்துள்ளனர். மாலையிலேயே காபூல் செல்லும் விமானத்தில் ஏற்றி அனுப்பிவைக்கப்பட்டார். ஒரு சாகசமான நாள் முடிவுக்கு வந்தது.

மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (CISF) அதிகாரி கூறுவதன்படி, செப்டம்பர் 22ம் தேதி காலை 10:30 மணியளவில் கேஏஎம் ஏர் காபூல்-டெல்லி விமானத்தில் (RQ4401) வந்திறங்கியிருக்கிறார் அந்த சிறுவன். அவரை விசாரித்ததில் விமானத்தின் பின்புறமுள்ள சக்கரங்களுக்கு நடுவே அமைர்ந்து வந்தது தெரியவர, விமானத்தில் பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டது.

அந்த சிறுவன் ஆப்கானில் இருந்து வரும்போது ஒரு சிகப்பு நிற ஸ்பீக்கரை மட்டும் எடுத்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. அவரை குடியேற்ற அதிகாரிகளிடம் அனுப்பி, விரிவான விசாரணை மேற்கொண்டனர்.

மாலை 4 மணிக்கு கேஏஎம் ஏர் ஃப்ளைட் RQ4402 விமானத்தில் காபூலுக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

ஒரு கமர்ஷியல் விமானம் 30,000 முதல் 40,000 அடி உயரத்தில் பறக்கும். குளிர் -50 டிகிரி வரைக் கூட செல்லும், விமானத்துக்குள் இல்லாவிட்டால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறக்க நேரிடும்.

விமான சக்கரப் பகுதியில் (landing gear compartment) உட்கார்ந்து பாதுகாப்பாகப் பறப்பது இயல்பாகவே மிக அபாயகரமானதும், பெரும்பாலும் சாத்தியமற்றதும் தான் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். சக்கரத்தில் அமர்ந்து பறப்பவர்கள் 77% மரணிக்கின்றனர்.

ஜெய்பூரில் நின்ற உக்ரைன் அதிபர் மனைவியின் விமானம் - காரணம் தெரியுமா?
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.