ஆன்லைனில் போலி கேரளா லாட்டரி டிக்கெட் வாங்கி அதில் அதிக பணத்தை இழக்கும் பொது மக்கள் நிலை ஏற்பட்டுள்ளது என்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆன்லைனில் பொது மக்கள் பணம் இழப்பது வாடிக்கையாகி விட்டது. நாள்தோறும் புது புது வழிகளில் பொது மக்கள் பணத்தை இழந்து வருகின்றனர். குறிப்பாக குறுகிய காலத்தில் வீட்டில் இருந்த படியே பெரிய லாபம் ஈட்ட வேண்டும் என்ற நோக்கில் ஆன்லைன் ஷேர் மார்க்கெட் டிரேடிங், ஆன்லைன் சூது விளையாட்டுகள், ஆன்லைன் லாட்டரி போன்றவற்றில் எதிர் முனையில் இருப்பவர் யார் அவர் எங்கிருந்து பேசுகிறார் அவருடைய முழு விபரங்களை சிறிதளவு கூட சோதித்து பார்க்காமல் எதிராளி கேட்கும் பணத்தை கண்மூடி தனமாக முதலீடு செய்கின்றனர். வசதிப்படைத்தவர், ஏழை எளியவர் என்ற பேதம் பார்க்காமல் அவர்களின் அறியாமையை பயன்படுத்தி பணமோசடி செய்கின்றனர்.
அந்த வகையில் தற்போது புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் லாட்டரியில் பணம் இழந்து வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த இரு வாரங்களில் மட்டும் ஐம்பதுக்கும் மேற்பட்ட நபர்கள் பத்து லட்சத்திற்கு மேல் பணம் இழந்துள்ளதாக புகார்கள் இணைய வழி காவல் நிலையத்திற்கு வந்த வண்ணம் உள்ளன. மோசடிக்காரர்கள் கேரளா அரசின் லாட்டரி போல பல கணக்குகளை சமூக வலைதள கணக்குகளை உருவாக்கி மக்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண் பெறுவதற்கு லிங்க் உடன் கூடிய விளம்பரங்களை பதிவிடுகின்றனர் அதில் பதிவு செய்யும் நபர்களை வாட்ஸாப் மூலம் தொடர்பு கொண்டு லாட்டரியின் விலை இருநூறு ரூபாய்க்கும் கீழ் இருப்பது போல் ஆசை ஏற்படுத்தி வாங்க வைக்கின்றனர். பிறகு மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ போலி லாட்டரி டிக்கட்டை அனுப்புகின்றனர். பிறகு ஒரு குறிப்பிட்ட நாளில் மோசடி காரர்கள் லாட்டரி வாங்கிய நபரை மீண்டும் வாட்சப்பில் தொடர்பு கொண்டு அவர் பெயரில் பெரிய அளவிலான லாட்டரி தொகை விழுந்திருப்பதாகவும் அதை பெறுவதற்கு GST வரி, கையாளுதல் கட்டணம் மற்றும் பிற சம்பிரதாயங்களை ஈடுகட்ட பல வங்கிக் கணக்குகளுக்கு பணத்தை மாற்றுமாறு அறிவுறுத்துகின்றனர். இவ்வாறாக ஆயிரம் ரூபாயில் இருந்து சில லட்சங்கள் வரை லாட்டரி வாங்கிய நபர்களிடம் மோசடி செய்கின்றனர். ஒரு கட்டத்தில் மீண்டும் மீண்டும் கூடுதல் பணம் செலுத்தியும் , உண்மையான பரிசுத் தொகை எதுவும் இல்லாத பிறகுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை பொது மக்கள் உணர்கின்றனர். மேலும் சில சமயங்களில் மோசடி காரர்கள் பொது மக்களின் தகவல்களை மறைமுகமாக திருடி அவர்களை தொடர்பு கொண்டு குலுக்கல் முறையில் தங்களுக்கு லாட்டரியில் பரிசு தொகை விழுந்திருப்பதாக ஆசை வார்த்தை கூறியும் பண மோசடியில் ஈடுபடுகின்றனர்.
போலி ஆவணங்கள், போலி வலைத்தளங்கள் மற்றும் ஆள்மாறாட்டம் போன்ற தந்திரங்களைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களை ஏமாற்றும் இத்தகைய லாட்டரி மோசடிகளுக்கு இரையாக வேண்டாம். எந்தவொரு சட்டப்பூர்வமான லாட்டரி நிறுவனமும் பரிசுத் தொகையை வெளியிடுவதற்கு எந்த விதமான பணத்தையும் கோருவதில்லை. மேலும் இதுபோன்ற எந்தவொரு கூற்றுகளையும் அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் இல்லாமல் பணத்தை செலுத்த வேண்டாம் எனவும் நமது புதுச்சேரியில் லாட்டரி முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது ஆகையினால் லாட்டரி என்ற பெயரில் பணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என புதுச்சேரி இணைய வழி காவல்துறை பொது மக்களை அறிவுறுத்துகின்றனர்.
மேலும் இணைய வழி குற்றம் சம்பந்தமாக புகார் கொடுக்கவும் அல்லது ஏதேனும் சந்தேகம் இருந்தால் இணைய வழி காவல் நிலையத்தில் இலவச தொலைபேசி எண்: 1930 மற்றும் 0413-2276144/9489205246 மற்றும் மின்னஞ்சல்: cybercell-police@py.gov.in தொடர்பு கொள்ளலாம். இணையத்தில் புகார் அளிக்க www.cybercrime.gov.in