இருமல் மருந்து மீதான இந்தியர்களின் அதீத நம்பிக்கை எப்படி உயிரையே பறிக்கிறது?
BBC Tamil October 09, 2025 06:48 AM
Reuters ஜம்முவில் ஐந்து வயதுக்குட்பட்ட 12 குழந்தைகளின் மரணத்துக்கு அவர்கள் எடுத்துக்கொண்ட இருமல் மருந்தே காரணமாக இருந்ததாக கூறப்படுகிறது. அந்த குழந்தைகளில் ஒருவரின் தந்தை தனது குழந்தையின் புகைப்படத்தைக் காட்டுகிறார்

செப்டம்பர் மாத தொடக்கத்தில், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு சிறிய நகரில், பல குழந்தைகள் திடீரென மரணமடைந்தனர். பதற்றமடைந்த உள்ளூர் சுகாதார ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கத் தொடங்கினர்.

ஒன்று முதல் ஆறு வயதுக்குள் உள்ள குறைந்தது 11 குழந்தைகள், இருமல் மருந்தை குடித்த சில நாட்களுக்குள் இறந்தனர்.

இறப்புக்கான காரணத்தை அறிய குடிநீர், கொசுக்கள் என அதிகாரிகள் பல விஷயங்களை ஆராயத் தொடங்கினர். இறுதியில், அந்தக் குழந்தைகளின் சிறுநீரகங்கள் செயலிழந்திருந்தது தெரியவந்தது.

இச்சம்பவம் நடந்து சில வாரங்களுக்கு பிறகு, சென்னையில் உள்ள அரசு ஆய்வகம் அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டது.

அதாவது, அந்த இருமல் மருந்தில் 48.6% டைதிலீன் கிளைகோல் இருந்துள்ளது. தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் நச்சு திரவமான இது, மருந்துகளில் ஒருபோதும் இருக்கக் கூடாது. ஏனென்றால் இதனை உட்கொள்ளும்போது சிறுநீரகங்கள் செயலிழந்துவிடும்.

இந்த துயரம் மத்திய பிரதேசத்தில் மட்டும் இல்லாமல், அண்டை மாநிலமான ராஜஸ்தானிலும் நடந்தது. அங்கு உள்ளூர் நிறுவனமொன்று தயாரித்த டெக்ஸ்ட்ரோமெத்தோர்பான் என்ற இருமல் மருந்தை குடித்த இரண்டு சிறிய குழந்தைகள் இறந்தனர். இந்த மருந்து சிறிய குழந்தைகளுக்கு பாதுகாப்பற்றது.

இந்தச் சம்பவம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதையடுத்து, அரசாங்கம் விசாரணையைத் தொடங்கியது.

இந்தியாவுக்கு இது பழைய துயர நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்தியது.

கடந்த ஆண்டுகளில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளில் டைதிலீன் கிளைகோல் கலந்ததால் பல குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

2023-இல், இதே நச்சு கலந்த இந்திய மருந்துகள் காம்பியாவில் 70 குழந்தைகளும், உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகளும் உயிரிழப்பதற்கும் காரணமாக இருந்தன.

2019-ஆம்ஆண்டு டிசம்பர் முதல் 2020-ஆம்ஆண்டு ஜனவரி வரை ஜம்மு, காஷ்மீரில், ஐந்து வயதுக்குட்பட்ட 12 குழந்தைகள் இருமல் மருந்தை உட்கொண்ட பிறகு இறந்தனர்.

ஆனால், உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என்று ஆர்வலர்கள் கூறினர்.

கோடீன் என்ற பொருள் உள்ள இருமல் மருந்துகள் இதற்கு முன்பும் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இது ஒரு லேசான போதை மருந்து (ஓபியாய்டு). அதை அதிக அளவில் எடுத்தால் ஒருவித போதை நிலை ஏற்படும், அடிமைத்தனத்துக்கும் வழிவகுக்கும். இதனால் குழந்தைகளுக்கு இது பரிந்துரைக்கப்படாது.

ஒவ்வொரு முறையும் இதுபோன்ற மரணங்கள் நடக்கும்போது, இதில் சீர்திருத்தம் செய்வோம் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால், அதன் பிறகு சில மாதங்களில் மீண்டும் நச்சு கலந்த மருந்துகள் சந்தையில் தோன்றுகின்றன.

இது இந்தியாவின் மருந்து உற்பத்தி அமைப்பு பல துண்டுகளாகப் பிரிந்து, பலவீனமாக இயங்குவதை காட்டுகிறது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். பல சிறிய நிறுவனங்கள் அனுமதி இல்லாத, மலிவான மருந்துகளை தயாரித்து, நேரடியாக மருந்தகங்களில் விற்பனை செய்கின்றன.

சமீபத்தில் குழந்தைகள் உயிரிழந்த சம்பவங்களுக்குப் பிறகு, இந்திய சுகாதார அமைச்சகம், மருந்துகளை ''அறிவார்ந்த முறையில்'' பயன்படுத்த வேண்டும் மருத்தவர்கள் சிறிய குழந்தைகளுக்கு மருந்துகளைப் பரிந்துரைக்கும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.

மேலும், அரசு அந்த இருமல் மருந்தின் மாதிரிகளை கைப்பற்றி, விற்பனையை நிறுத்தி விசாரணைக்கும் உத்தரவிட்டது.

AFP via Getty Images 2023-ஆம் ஆண்டு, நச்சு கலந்த இந்திய இருமல் மருந்துகள் காம்பியாவில் 70 குழந்தைகளின் மரணத்துடன் தொடர்புபடுத்தப்பட்டன. மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கை

ஆனால், மருந்துகளை அதிகமாக வழங்குவதை விட இதில் ஒரு ஆழமான சிக்கல் உள்ளது. ஒவ்வொரு முறை புதிதாக ஒரு சோக சம்பவம் நிகழும்போதும் இந்திய மருந்து கண்காணிப்பு மற்றும் ஒழுங்குமுறை அமைப்பின் மோசமான நிலையையும், பலவீனத்தையும் வெளிப்படுத்துகிறது என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மார்க்கெட் ரிசர்ச் ஃபியூச்சர்(Market Research Future) எனும் நிறுவனத்தின் தரவின்படி, இந்திய இருமல் மருந்து சந்தை 2024-இல் 262.5 மில்லியன் டாலரில் இருந்து 2035-இல் 743 மில்லியன் டாலராக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது . இதன் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 9.9% ஆக உள்ளது.

இந்தியாவும் இந்தியர்களும் இருமல் மருந்து மீது வைத்துள்ள மிகைப்படுத்தப்பட்ட நம்பிக்கையை விட்டுவிட்டால், இவையெல்லாம் நடக்காது.

வழக்கமாக பல ஆண்டுகளாகவே, மருத்துவர்கள் இருமல் மருந்துகளை பரிந்துரைத்து வருகின்றனர்.

நோயாளிகளும் அதை நம்பி உட்கொள்கிறார்கள். ஆனால் உண்மையில், பெரும்பாலான இருமல் மருந்துகளால் சிறிதளவு மட்டுமே நன்மை விளைகிறது. ஆனால் சில நேரங்களில் பெரியளவில் தீங்கை ஏற்படுத்துகின்றன.

தொண்டை வலி மற்றும் வறட்டு இருமலுக்கு விரைவான நிவாரணம் தரும் மருந்தாக விளம்பரப்படுத்தப்படும் இந்த இனிப்பு சுவை கொண்ட மருந்துகளில், சர்க்கரை, நிறம், சுவை, மற்றும் ஆன்ட்டிஹிஸ்டமைன்கள் (antihistamines), டீகன்ஞ்ஜெஸ்டண்டுகள் (decongestants), எக்ஸ்பெக்டோரன்ட்டுகள் (expectorants) போன்ற மருந்துகள் கலந்து உள்ளன.

கோட்பாட்டளவில், ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு வேலை உண்டு. ஒன்று சுரப்பிகளை உலர்த்துகிறது, மற்றொன்று சளியை தளர்த்துகிறது, மூன்றாவது பொருள் இருமலை அடக்குகிறது.

ஆனால் உண்மையில், இவற்றால் விளையும் பயன்களை பட்டியலிடும் ஆதாரங்கள் மிகக் குறைவுதான். பெரும்பாலான இருமல்கள் சில நாட்களில் தானாகவே சரியாகிவிடுகின்றன.

பொதுவாக இருமல் ஏற்படுவது தொற்றால் அல்லது ஒவ்வாமையால் இருக்கலாம்.

இருமல் மருந்துகள் பொதுவாக இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

ஒன்று குழந்தைக்கு ஓய்வெடுக்க உதவும் மயக்க மருந்து, மற்றொன்று சுவாசத்தை எளிதாக்கும் மூச்சுக்குழாய் விரிவாக்க மருந்து. மருத்துவர்கள் பொதுவாக இவற்றில் ஒன்றை மட்டுமே பரிந்துரைக்கின்றனர், இரண்டையும் சேர்த்து அல்ல.

இந்தியாவின் அதிக மாசுபட்ட நகரங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் நாள்பட்ட இருமல் பெரும்பாலும் தொற்றால் அல்ல. மாறாக, தூசி, புகை போன்றவற்றால் ஏற்படும் ஒவ்வாமை மற்றும் கீழ் சுவாசக் குழாயில் ஏற்படும் எரிச்சலால்தான் வருகிறது என்கிறார் மும்பையைச் சேர்ந்த குழந்தை நல மருத்துவர் ராஜாராம் டி. காரே.

தூசி, புகை போன்றவற்றுக்கு நோயெதிர்ப்பு அமைப்பு அதிகமாக ஆட்படும்போது, அது ஒவ்வாமையை உருவாக்குகிறது. இது குழந்தைகளின் சுவாசப் பாதையில் எரிச்சலை ஏற்படுத்தி இருமலை தூண்டுகிறது.

இதனால் குழந்தைகளுக்கு மூக்கு ஒழுகுதல், சளி, இரவு அல்லது அதிகாலையில் மோசமாகும் இருமல் ஆகியவை அடிக்கடி ஏற்படும். இது ஒவ்வொரு சில வாரங்களுக்கு ஒருமுறை திரும்ப வருகிறது.

பெரிய நகரங்களில், இந்த தொடர்ச்சியான இருமல் பெரும்பாலும் தூசி மற்றும் புகைமூட்டத்தால் வருகிறது. சில சமயங்களில், இதனுடன் லேசான மூச்சுத்திணறலும் ஏற்படுகிறது என்கிறார் ராஜாராம் டி. காரே.

இந்த இருமலுக்கு, மூச்சுக்குழாய்களைத் திறக்கும் மருந்துகள் (ப்ரோன்கோடைலேட்டர்கள்) சிறப்பாக வேலை செய்யும் என்று மருத்துவர் காரே கூறுகிறார்.

இவை இன்ஹேலர் அல்லது நெபுலைசர் மூலம் கொடுக்கப்படும் போது சிறப்பாக வேலை செய்கின்றன. ஆனால், பல மருத்துவர்கள் இன்னும் குறைந்த நிவாரணம் அளிக்கும் இருமல் மருந்துகளையே பரிந்துரைத்து வருகின்றனர்.

பெரும்பாலும் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல், வைரஸ் தொற்றால் ஏற்படுகிறது. அவை ஒரு வாரத்தில் தானாகவே குணமாகிவிடும். எந்த மருந்தும் இதை விரைவாகக் குணப்படுத்தாது என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

மருந்துகள் தற்காலிக நிவாரணம் மட்டுமே தரும். அதேசமயம், மோசமான சூழலில் இந்த மருந்து ஒருவரை அடிமையாக்கலாம். நச்சுத்தன்மை கொண்ட இதனை அதிகமாக உட்கொண்டால் வேறு ஆபத்துகளையும் உருவாக்கலாம்.

NurPhoto via Getty Images இந்தியாவில் 'போதைப்பொருள் ஒழிப்பு நாள்' என்பதைக் குறிக்கும் வகையில், கைப்பற்றப்பட்ட கோடீன் கலந்த இருமல் மருந்துகளை சாலை ரோலர் மூலம் போலீசார் அழித்தனர். என்ன பிரச்னை?

"சாதாரண சளி, இருமலுக்கு நான் பொதுவாக மருந்து பரிந்துரைப்பதில்லை. சில நேரங்களில் ஆறுதலுக்காக மட்டும் கொடுப்பேன். குழந்தை இருமலால் தூங்க முடியாமல் இருந்தால், லேசான மருந்தை ஒரு முறை கொடுக்கலாம். முக்கியமாக, வறண்ட இருமல் வைரஸ் தொற்றின் ஒரு பகுதியாக இருக்கும்போது, நிவாரணம் தருவதே நோக்கம், சிகிச்சை அளிப்பது அல்ல" என்று மருத்துவர் காரே விளக்குகிறார்.

அப்படியானால், இந்தியாவில் ஏன் இருமல் மருந்துகள் இவ்வளவு பரவலாக பரிந்துரைக்கப்படுகின்றன?

இந்தியாவின் ஆரம்ப சுகாதார அமைப்பு, குறிப்பாக சிறிய நகரங்களிலும் கிராமங்களிலும் பலவீனமாக இருப்பதே அதற்கு முக்கிய காரணம்.

காற்று மாசுபாடு அதிகரிப்பதால், குழந்தைகளுக்கு தொடர்ச்சியான இருமல் மற்றும் சுவாசப் பிரச்னைகள் வருகின்றன. இதனால், சாதாரண சுவாசத் தொற்றுகளுக்கு இருமல் மருந்துகள் அதிகமாகவும், பல நேரங்களில் தவறாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

கிராமப்புறங்களில் இந்தப் பிரச்னை இன்னும் மோசமாக உள்ளது. இந்திய கிராமங்களில், 75% முதன்மை சிகிச்சைகளை முறைசாரா மருத்துவர்கள் - அதாவது, முறையான பயிற்சி இல்லாத, தாங்களாகவே கற்றுக்கொண்ட கிராம மருத்துவப் பயிற்சியாளர்கள் சிகிச்சை முறைகளைக் கையாளுகின்றனர்.

அரசு மருத்துவமனைகள் தொலைவில் இருக்கும்போதோ, பணியாளர் பற்றாக்குறையால் மூடப்பட்டிருக்கும்போதோ, இவர்களே அந்தப் பகுதியின் மருத்துவர்களாக செயல்படுகிறார்கள். இவர்களுக்கு இருமல் மருந்துகள் மிக எளிமையான, நம்பகமான மருந்தாக இருக்கின்றன.

இதுகுறித்து உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் நகரில் பணியாற்றிய குழந்தை நல மருத்துவர் கஃபீல் கான், "அங்கு எல்லா இடங்களிலும் மருந்துகள் கொடுக்கப்பட்டன. பலர் மருத்துவப் பட்டம் இல்லாமலேயே குழந்தைகளுக்கு மருந்து வழங்கினர்" என்கிறார்.

சிறிய நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள மக்கள், வழக்கமான இருமல்களுக்கு கூட மருத்துவப் பயிற்சியாளராக இருந்தாலும் சரி, ஒரு மருந்துக் கடை உரிமையாளராக இருந்தாலும் சரி, மருத்துவ அறிவு உள்ளவராகத் தோன்றும் எவரையும் நம்புகிறார்கள்.

"பல ஏழை நோயாளிகள் உள்ளூர் மருந்துக் கடைகளுக்கு ஆலோசனைக்காக செல்கின்றனர். கவுன்டரில் இருப்பவர் மருந்தாளுநர் என்று நினைக்கின்றனர். ஆனால், கிராமப்புற இந்தியாவில், 10 முறை அவ்வாறு நினைத்துக்கொண்டு சென்றால் 10 முறையும் அது தவறான எண்ணமாகத்தான் இருக்கும்" என்று மருந்து நிறுவன முன்னாள் நிர்வாகியும், இப்போது பொது சுகாதார நிபுணருமான தினேஷ் தாக்கூர் கூறுகிறார்.

"இந்தப் பிரச்னை சிறிய நகரங்களிலும் கிராமங்களிலும் மட்டுமே உள்ளதாகத் தோன்றலாம். ஆனால், இந்தச் சிக்கல் பெரிய நகரங்களிலும் உள்ளன என்பதை தரவுகள் வெளிப்படுத்துகின்றன. மேலும், சிறிய நகரங்களிலும் கிராமங்களிலும் கிடைக்கும் மருந்துகளின் தரம் பெரிய நகரங்களை விட மிகவும் மோசமாக இருக்கிறது என்பது மட்டும்தான் இதில் உள்ள ஒரே வித்தியாசம்"

குழந்தைகள் இருமல் குறித்து அவதிப்படுவதை நினைத்து கவலைப்படும் பெற்றோரின் அழுத்தமும், மருத்துவ அறிவில் உள்ள குறைபாடுகளும் இதற்கு மற்றொரு முக்கியக் காரணமாக அமைகின்றன.

"பெற்றோர்கள் எப்போதும் மருத்துவ அறிவு உள்ளவர்களாக இருப்பதில்லை. குழந்தையின் சளி அல்லது இருமல் இரண்டு நாட்களில் குணமாகவில்லை என்றால், அவர்கள் வேறு மருத்துவரை அணுகுகின்றனர். அவர் பெரும்பாலும் இருமல் மருந்து கொடுத்துவிடுகிறார்," என்று மருத்துவர் கான் கூறுகிறார்.

மருத்துவர்களிடம் உள்ள அறிவு பற்றாக்குறையும் இதற்கு ஒரு காரணமாக உள்ளது.

"சில எம்.டி. பட்டம் பெற்ற குழந்தை நல மருத்துவர்கள் கூட குழந்தைகளுக்கு அம்ப்ராக்சால் எனும் இருமல் மருந்து பரிந்துரைப்பதை பார்த்திருக்கிறேன்," என்கிறார் மருத்துவர் கான்.

"இந்த மருந்து சளியை உடைக்க உதவுகிறது. ஆனால், இரண்டு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் சளியை துப்ப முடியாது. இதனால், சளி நுரையீரலில் சிக்கி நிமோனியாவை ஏற்படுத்தலாம். ஆனாலும், இந்த மருந்து இன்னும் கொடுக்கப்படுகிறது."

இருமல் மருந்துகளை கட்டுப்படுத்த தெளிவான கொள்கையும், மருத்துவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தேசிய அளவில் விழிப்புணர்வும் தேவை என்று நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதன் தீவிரத்தை காட்டும் ஒரு உதாரணமாக, சமீபத்தில் குழந்தைகள் உயிர் இழந்த சம்பவத்தைக் குறிப்பிடலாம்.

அதற்கு காரணமான மருந்தை பரிந்துரைத்த மத்திய பிரதேச மருத்துவர் தனது செயலை நியாயப்படுத்தி, "நான் 15 ஆண்டுகளாக இந்த மருந்தை கொடுத்து வருகிறேன்," என்று கூறியிருந்தார்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.