தங்கத்தின் விலை உயர்வு என்பது ஏழை எளிய மக்களுக்கு இனி தங்கம் எட்டாக்கனியாகிவிடும் என்ற எண்ணத்தில் பொதுமக்கள் விழிபிதுங்கி தவித்து வருகின்றனர். ஆனால், தங்கத்தின் விலையோ எதைப்பற்றியும் கவலையின்றி புதிய புதிய உச்சங்களை தொட்டவண்ணம் உயர்ந்து கொண்டே போகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(அக். 9) சவரனுக்கு ₹120 அதிகரித்துள்ளது. இதனால் வரலாறு காணாத புதிய உச்சமாக 22 கேரட் தங்கம் 1 கிராம் ₹11,400-க்கும், சவரன் ₹91,200-க்கும் விற்பனையாகிறது.
கடந்த மாதம் 8-ந் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.10 ஆயிரத்து 60-க்கும், ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது. அதன்பின்னரும் தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் சவரன் ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது. நேற்று காலை ரூ.100 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 300-க்கும், ரூ.800 அதிகரித்து சவரன் ரூ.90 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது.
அடுத்து 2-வது முறையாக மதியம் தங்கம் விலை உயர்ந்தது. அதாவது மேலும் ரூ.85 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 385-க்கும், ரூ.680 அதிகரித்து சவரன் ரூ.91 ஆயிரத்து 80-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதாவது மேலும் ரூ.15 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 400-க்கும், ரூ.120 அதிகரித்து சவரன் ரூ.91 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஜனவரி மாதம் ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. ஆனால் கடந்த 10 மாதங்களில் மட்டும் ரூ.31 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்திருப்பது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
தங்கம் விலையை போன்றே வெள்ளி விலையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இன்று வெள்ளி விலை ரூ.1 அதிகரித்து கிராம் ரூ.171-க்கும், ஆயிரம் ரூபாய் அதிகரித்து கிலோ ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது. தங்கம்-வெள்ளி விலை உயர்வு பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.