கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும், வாசனையைப் புறக்கணிக்க முடியாத குறைந்தபட்சம் ஒரு ஜோடி காலணிகளாவது இருக்கும்.
இரண்டு இந்திய ஆய்வாளர்கள், இது வெறும் துர்நாற்றத்தைப் பற்றியது மட்டுமல்ல, அறிவியலைப் பற்றியது என்று முடிவு செய்தனர்.
துர்நாற்றம் வீசும் காலணிகள் ஒரு ஷூ ரேக்கைப் பயன்படுத்தும் நமது அனுபவத்தை எவ்வாறு வடிவமைக்கின்றன என்பதை அவர்கள் ஆய்வு செய்யத் தொடங்கினர். அவ்வாறு செய்ததன் மூலம், அவர்கள் கௌரவமான மற்றும் நகைச்சுவையான இக் நோபல் பரிசு (Ig Nobel Prize) அரங்கிற்குள் நுழைந்தனர். இந்த விருது, அபத்தமான ஆனால் புத்திசாலித்தனமான அறிவியல் முயற்சிக்கு வழங்கப்படுகிறது.
டெல்லிக்கு அருகே உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தில் வடிவமைப்புத் துறை உதவிப் பேராசிரியராக இருக்கும் 42 வயதான விகாஷ் குமார், 29 வயதான சார்த்தக் மிட்டலுக்கு அவரது இளநிலை நாட்களில் கற்பித்தவர். பல்கலைக்கழகத்தில் இருந்தபோதுதான், துர்நாற்றம் வீசும் காலணிகளைப் பற்றி ஆய்வு செய்யும் யோசனை அவர்களுக்குத் தோன்றியது.
மிட்டல், தனது விடுதி தாழ்வாரங்களில் இரண்டு பேர் தங்கும் அறைக்கு வெளியே காலணிகள் வரிசையாக வைக்கப்பட்டிருப்பதை அடிக்கடி கவனித்ததாகக் கூறுகிறார். ஆரம்பத்தில் ஒரு எளிய யோசனையுடன் தொடங்கினார்கள்: மாணவர்களுக்காக அழகிய, நேர்த்தியான ஷூ ரேக்கை வடிவமைத்தால் என்ன? ஆனால், ஆழமாக ஆராய்ந்தபோது, உண்மையான காரணம் வெளிப்பட்டது - அடைசல் அல்ல, காலணிகளின் துர்நாற்றமே அவற்றை வெளியே வைப்பதற்குக் காரணமாக இருந்தது.
"அது இடத்தைப் பற்றியதோ அல்லது ஷூ ரேக்குகள் இல்லாதது பற்றியதோ அல்ல – போதுமான இடம் இருந்தது. அடிக்கடி வியர்ப்பதாலும், காலணிகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதாலும் அவை துர்நாற்றம் வீசியதே பிரச்னை" என்று இப்போது ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் மிட்டல் கூறுகிறார்.
எனவே, அவர்கள் இருவரும் பல்கலைக்கழக விடுதிகளில் ஓர் இயல்பான கேள்வியைக் கேட்டு ஒரு கணக்கெடுப்பைத் தொடங்கினர். நமது காலணிகள் துர்நாற்றம் வீசினால், அது ஷூ ரேக்கைப் பயன்படுத்தும் ஒட்டுமொத்த அனுபவத்தையும் கெடுக்காதா?
149 பல்கலைக்கழக மாணவர்களிடம் (அவர்களில் 80% பேர் ஆண்கள்) நடத்தப்பட்ட இந்தக் கணக்கெடுப்பு, நம்மில் பலருக்குத் தெரிந்த, ஆனால் அரிதாகவே நாம் ஒப்புக்கொள்ளும் உண்மையை உறுதிப்படுத்தியது. பாதிக்கும் மேற்பட்டோர் தங்கள் காலணிகள் அல்லது மற்றவர்களின் வாடையால் சங்கடத்தை உணர்ந்துள்ளனர்.
கிட்டத்தட்ட அனைவரும் வீட்டிலுள்ள ரேக்குகளில்தான் காலணிகளை வைக்கின்றனர். இருப்பினும், சந்தையில் உள்ள துர்நாற்றத்தைப் போக்கும் தயாரிப்புகளைப் பற்றி யாருக்கும் அதிகம் தெரியவில்லை. டீ பேக்குகள், பேக்கிங் சோடா தூவுதல், டியோடரண்ட் தெளித்தல் போன்ற வீட்டில் செய்யப்பட்ட தற்காலிகத் தீர்வுகள் பலனளிக்கவில்லை.
அதன்பின்னர், ஆய்வாளர்கள் இருவரும் அறிவியலை நோக்கித் திரும்பினர். ஏற்கனவே உள்ள ஆய்வில் இருந்து, துர்நாற்றத்திற்குக் காரணம், வியர்த்த காலணிகளில் செழித்து வளரும் ஒரு பாக்டீரியமான கைட்டோகோக்கஸ் செடென்டாரியஸ் (Kytococcus sedentarius) என்பதை அவர்கள் அறிந்தனர். அவர்களின் சோதனைகள், சிறிது நேரம் புறஊதாக் கதிர்வீச்சு (UV light) செலுத்தினால், நுண்ணுயிரிகளைக் கொன்று துர்நாற்றத்தை விரட்ட முடியும் என்பதைக் காட்டியது.
"இந்தியாவில், கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் ஒரு ஷூ ரேக் உள்ளது. காலணிகளில் வாசனையை இல்லாமல் வைத்திருக்கும் ரேக், ஒரு சிறந்த பயனர் அனுபவத்தை அளிக்கும்," என்று ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரையில் குறிப்பிட்டனர்.
அவர்கள், "துர்நாற்றம் வீசும் காலணிகளை, சிறந்த பயனர் அனுபவத்திற்காகப் பாரம்பரிய ஷூ ரேக்கை மறுவடிவமைப்பதற்கான ஒரு வாய்ப்பாக" பார்த்தனர்.
இதன் விளைவு என்ன? வழக்கமான ஒரு சூழலியல் ஆய்வு கட்டுரை அல்ல- மாறாக ஒரு மகிழ்ச்சியளிக்கும் ஒரு விந்தையான கண்டுபிடிப்பு கிடைத்தது. ஒரு UVC ஒளிவிளக்கு பொருத்தப்பட்ட ஷூ ரேக்கின் மாதிரி உருவானது. இது காலணிகளைச் பாதுகாப்பது மட்டுமின்றி, அவற்றைத் தொற்று நீக்கம் செய்கிறது. (UV-யில் பல அலைவரிசைகள் உள்ளன, ஆனால் அதன் C பேண்டுக்கு மட்டுமே கிருமிகளைக் கொல்லும் திறன் உள்ளது.)
ஆய்வாளர்கள் பல்கலைக்கழக விளையாட்டு வீரர்கள் அணிந்த அதிக நாற்றமுடைய காலணிகளை சோதனைக்கு பயன்படுத்தினர், பாக்டீரியாக்கள் பெருக்கம் கால் பெருவிரல் அருகில் அதிகமாக இருப்பதால், UVC ஒளி அங்கு குவிக்கப்பட்டது.
துர்நாற்றத்தின் அளவு யுவி ஒளி படும் நேரத்தோடு அளவிடப்பட்டது. 2-3 நிமிட UVC ஒளி பாக்டீரியாவைக் கொன்று துர்நாற்றத்தை அகற்றப் போதுமானது என்று கண்டறியப்பட்டது. இது எளிதானது அல்ல: அதிகப்படியான ஒளி அதிக வெப்பத்தை ஏற்படுத்தியது, இது காலணியின் ரப்பரை எரித்துவிடும் அபாயம் இருந்தது.
ஆய்வாளர்கள் வெறுமனே UVC டியூப் லைட்டை காலணிகளை நோக்கி வைத்துவிட்டுச் செல்லவில்லை - ஒவ்வொரு வாடையையும் அவர்கள் அளவிட்டனர். ஆரம்பத்தில், துர்நாற்றம் "கடுமையான, வலிமையான அழுகிய-சீஸ் போன்றது" என்று விவரிக்கப்பட்டது.
இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு, அது "மிகவும் குறைவான, லேசான ரப்பர் எரியும் வாசனைக்கு" குறைந்தது. நான்கு நிமிடங்களில், துர்நாற்றம் மறைந்து, அதற்குப் பதிலாக "சராசரி ரப்பர் எரியும் வாசனை" தோன்றியது.
ஆறு நிமிடங்களுக்குப் பிறகு, காலணிகள் துர்நாற்றமின்றி, வசதியான குளிர்ச்சியுடன் இருந்தன. ஆனால், 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஒளியைச் செலுத்தினால், வாடை போய் "கடுமையான ரப்பர் எரியும் வாசனை" ஏற்பட்டதுடன், காலணிகள் சூடாகவும் ஆனது. இதன் மூலம், அறிவியலிலும் சரியான நேரம் முக்கியம் என்று நிரூபிக்கப்பட்டது.
இறுதியில், இருவரும் UVC டியூப் லைட் பொருத்தப்பட்ட ஷூ ரேக்கை முன்மொழிந்தனர். இதுகுறித்து எதுவும் நடக்காத நிலையில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட இக் நோபல் பரிசு அமைப்பினர் அதனைக் கவனித்து, அவர்களைத் தொடர்பு கொண்டனர்.
'Annals of Improbable Research' என்ற இதழால் ஏற்பாடு செய்யப்பட்டு, ஹார்வர்ட்-ராட்கிளிஃப் குழுக்களால் நிதியுதவி செய்யப்படும் 34 ஆண்டு பழமையான இக் நோபல் விருதுகள், ஆண்டுதோறும் 10 பரிசுகளை வழங்குகின்றன. இவற்றின் நோக்கம் "மக்களைச் சிரிக்க வைத்து, பிறகு சிந்திக்க வைப்பது... அசாதாரணமானதை மதிப்பது, கற்பனைத் திறன் கொண்டவர்களை கௌரவிப்பது" ஆகும்.
"அந்த விருதைப் பற்றி எங்களுக்குத் தெரியாது," என்று குமார் கூறினார். "அது 2022 ஆம் ஆண்டின் பழைய ஆய்வுக் கட்டுரை - நாங்கள் அதை எங்கும் அனுப்பவில்லை. இக் நோபல் குழுவினர் எங்களைக் கண்டுபிடித்து, அழைத்தது, அந்தச் செயலே சிரிக்க வைத்துச் சிந்திக்க வைக்கும்."
"இந்த விருது ஆராய்ச்சிகளுக்கு சான்றளிப்பது பற்றியது அல்ல, அதைக் கொண்டாடுவது - அறிவியலின் வேடிக்கையான பக்கத்தைக் கொண்டாடுவது. பெரும்பாலான ஆராய்ச்சி, ஆர்வத்தின் காரணமாகச் செய்யப்படும் எதிர்பார்ப்பற்ற வேலை. இதைப் பிரபலப்படுத்த இதுவும் ஒரு வழியாகும்."
இந்த ஆண்டு இந்த இரு இந்தியர்களுடன், ஜப்பானிய உயிரியலாளர்கள் (ஈக்களை விரட்டப் பசுக்களுக்கு வர்ணம் பூசியவர்கள்), நான்கு-சீஸ் பிஸ்ஸாவை விரும்பும் டோகோவின் வானவில் பல்லிகள், பூண்டு தாய்ப்பாலை குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமானதாக மாற்றுகிறது என்று கண்டறிந்த அமெரிக்க மருத்துவர்கள், மற்றும் மதுபானம் வெளிநாட்டு மொழித் திறன்களை அதிகரிக்கிறது (இருப்பினும் பழம் திண்ணும் வெளவால்களை தள்ளாடச் செய்கிறது) என்று கண்டுபிடித்த டச்சு ஆய்வாளர்கள் போன்றோர் பரிசு வென்றனர்.
35 ஆண்டுகளாகத் தனது கட்டைவிரல் நகத்தின் வளர்ச்சியைப் பதிவு செய்த ஒரு வரலாற்றாசிரியர், மற்றும் பாஸ்தா சாஸின் (Pasta Sauce) மர்மங்களை ஆராய்ந்த இயற்பியல் ஆய்வாளர்கள் ஆகியோரும் உள்ளனர்.
துர்நாற்றம் வீசும் காலணிகளுக்காகப் பரிசு வென்றது, இந்த இந்திய ஆய்வாளர்களுக்குக் கூடுதல் பொறுப்பைக் கொடுத்துள்ளது.
"அங்கீகாரத்தைத் தாண்டி, மக்கள் பொதுவாகச் சிந்திக்காத விஷயங்களைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்ய வேண்டும். கேள்விகளைக் கேட்க வேண்டும் என எங்களுக்கு ஒரு பொறுப்பை ஏற்படுத்தியுள்ளது," என்று குமார் கூறுகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இன்றைய துர்நாற்றம் வீசும் காலணிகள், நாளைய அற்புதமான அறிவியலாக இருக்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.