லாஸ் ஏஞ்சலிஸ் தீ: சாட்ஜிபிடி-யிடம் கேட்ட கேள்வியால் சிக்கிய உபர் ஓட்டுநர் - கைதானது எப்படி?
BBC Tamil October 10, 2025 03:48 AM
Justice department புதன்கிழமை புளோரிடா நீதிமன்றத்தில் ஆஜரான ரிண்டர்க்னெக்ட், எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை.

ஜனவரி மாதத்தில் லாஸ் ஏஞ்சலிஸில் ஏற்பட்ட பசிபிக் பாலிசேட்ஸ் தீ விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர் மற்றும் 6,000-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. அந்த தீயை பற்ற வைத்ததாக சந்தேகத்தின் பேரில் 29 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ஜோனாதன் ரிண்டர்க்னெக்ட் என்பவரின் டிஜிட்டல் சாதனங்களில் இருந்து பெறப்பட்ட ஆதாரங்களில், அவர் சாட்ஜிபிடியைப் பயன்படுத்தி உருவாக்கிய எரியும் நகரத்தின் படமும் இருந்தது என நீதித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து, ஜனவரி 7- ஆம் தேதி, கடலோர ஆடம்பர குடியிருப்பு பகுதிக்கு அருகிலுள்ள நடைபாதை அருகே உருவானது. இது லாஸ் ஏஞ்சலிஸ் வரலாற்றில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்திய தீ விபத்தாகக் கருதப்படுகிறது.

அதே நாளில், ஈட்டன் தீ எனப்படும் மற்றொரு தீ விபத்து ஏற்பட்டது. இதில் மீண்டும் 19 பேர் உயிரிழந்தனர் மற்றும் 9,400 கட்டடங்கள் முற்றிலும் எரிந்து விழுந்தன. ஆனால், அந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

பாலிசேட்ஸ் தீ 23,000 ஏக்கருக்கும் (9,308 ஹெக்டேருக்கும்) மேற்பட்ட பரப்பளவில் பரவி, சுமார் 150 பில்லியன் டாலர் மதிப்பிலான சேதத்தை ஏற்படுத்தியது.

இந்த தீ மூன்று வாரங்களுக்கு மேல் நீடித்து, முழு குடியிருப்புப் பகுதிகளை அழித்தது. டோபங்கா மற்றும் மாலிபு பகுதிகளும் தீயால் பாதிக்கப்பட்டன.

புளோரிடாவில் செவ்வாயன்று ரிண்டர்க்னெக்ட் கைது செய்யப்பட்டார். அவர் மீது, தீ பற்றவைத்து சொத்துக்களை அழித்த குற்றச்சாட்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என வழக்கறிஞர் பில் எஸ்ஸேலி லாஸ் ஏஞ்சலிஸில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

"இந்தக் கைது நடவடிக்கை, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஓரளவு நீதியை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று எஸ்ஸேலி கூறினார்.

கொலை குற்றச்சாட்டுகள் உட்பட கூடுதல் வழக்குகள் பின்னர் பதிவு செய்யப்படலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதன்கிழமை புளோரிடா நீதிமன்றத்தில் ஆஜரான ரிண்டர்க்னெக்ட், எந்த மனுவையும் தாக்கல் செய்யவில்லை.

கலிபோர்னியாவில் வசித்து வேலை செய்து வந்த ரிண்டர்க்னெக்ட், தீ விபத்துக்குப் பிறகு விரைவில் புளோரிடாவுக்கு குடிபெயர்ந்தார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Getty Images காற்றால் மேலும் பரவிய தீ

புத்தாண்டு தினத்தில் ரிண்டர்க்னெக்ட் தொடங்கியதாகக் கூறப்படும் முதல் தீ 'லாச்மேன் தீ' என அழைக்கப்பட்டது.

தீயணைப்பு வீரர்கள் தீயை விரைவாக கட்டுப்படுத்தினாலும், அது அடர்த்தியான தாவரங்களின் வேர் அமைப்பில் நிலத்தடியில் புகைந்து கொண்டிருந்தது என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

பின்னர் ஒரு புயலின் போது, அந்த புகை மீண்டும் மேற்பரப்புக்கு எழுந்து தீயாக பரவியது.

சந்தேகத்துக்குரிய அந்த நபர் பசிபிக் பாலிசேட்ஸில் முன்பு வசித்து வந்ததால், அந்தப் பகுதியை நன்கு அறிந்திருந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் ஸ்கல் ராக் டிரெயில்ஹெட்டுக்கு அருகில் வசித்து வந்தார், அங்குதான் அவர் தீயை மூட்டியதாகக் கூறப்படுகிறது.

குற்றப்பத்திரிகையின்படி, புத்தாண்டு தினத்துக்கு முந்தைய இரவில், உபர் ஓட்டுநராக தனது பணியை முடித்த பின், அவர் தீயைப் பற்ற வைத்துள்ளார்.

புத்தாண்டு தினத்தன்று இரவில் ரிண்டர்க்னெக்ட் இரு பயணிகளை அழைத்துச் சென்றதாகவும், ஓட்டுநர் ரிண்டர்க்னெக்ட் மிகவும் பதற்றமாகவும் கோபமாகவும் இருந்தார் என அந்தப் பயணிகளில் ஒருவர் புலனாய்வாளர்களிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

ஜனவரி ஒன்றாம் தேதி தீ விபத்து தொடங்கிய நேரத்தில் அவர் இருந்த இடத்தை அவரது தொலைபேசி தரவுகளை பயன்படுத்தி அதிகாரிகள் கண்டறிந்தனர். ஆனால், விசாரணையின் போது, அவர் தவறான தகவல் அளித்து மலை அடிவாரத்தில் இருந்ததாகக் கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தீ விபத்து நடந்த நேரத்தில், ரிண்டர்க்னெக்ட் உபர் செயலியை பயன்படுத்தவில்லை. ஆனால், ஜிபிஎஸ் தரவு மற்றும் பிற தகவல்களை கொண்டு, அவரது இருப்பிடத்தைத் தீர்மானிக்க, மத்திய மது, புகையிலை, துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் பணியகத்துடன் (ATF)நெருக்கமாக இணைந்து பணியாற்றினோம் என உபர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், ரிண்டர்க்னெக்ட்கும் தீ விபத்துக்கும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதும், உபர் தளத்தை அணுக அவருக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை உடனடியாக நீக்கியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Justice Department 'சாட்ஜிபிடியிடம் ஆலோசனை'

தீயை அணைக்க முயற்சிக்கும் தீயணைப்பு வீரர்களின் வீடியோக்கள் உட்பட, தொலைபேசியில் தீ விபத்துடன் தொடர்புடைய பல ஆதாரங்களை ரிண்டர்க்னெக்ட் வைத்திருந்தார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

புத்தாண்டு தின நள்ளிரவுக்குப் பிறகு, அவர் 911 என்ற அவசர எண்ணை பலமுறை அழைத்ததாகவும், ஆனால் அவரது மொபைல் இணைப்பு பலவீனமாக இருந்ததால் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், ரிண்டர்க்னெக்ட் "உங்களது சிகரெட்டால் தீப்பிடித்தால் அது உங்கள் பொறுப்பா?" என சாட்ஜிபிடியிடம் கேட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரிண்டர்க்னெக்ட், "தீயை அணைக்க முயற்சித்ததாகத் தோன்றும் ஆதாரங்களை" உருவாக்க முயன்றார் என புலனாய்வாளர்கள் கூறினர்.

"தீ விபத்து தொடர்பான வழக்கில் இருந்து தப்பித்துக்கொள்ளும் வகையிலான விளக்கத்தை உருவாக்க விரும்பினார்" எனவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது

2025 ஜனவரி 24-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில், ரிண்டர்க்னெக்ட் பதற்றமாக நடந்து கொண்டார். தீயை மூட்டியது யார் என்று கேட்கும் போதெல்லாம், அவரது கழுத்து நரம்பு துடித்தது என புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

Getty Images

2024 ஜூலை மாதத்தில், தீ வைத்ததாகக் கூறப்படுவதற்கு ஐந்து மாதங்களுக்கு முன்பு, ரிண்டர்க்னெக்ட் சாட்ஜிபிடியிடம் எரியும் காடு மற்றும் தீயிலிருந்து ஓடும் மக்கள் கூட்டத்தை உள்ளடக்கிய ஒரு படத்தை உருவாக்க கேட்டிருந்ததாக விசாரணையில் தெரியவந்தது என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

"ஓவியத்தின் நடுவில், வறுமையில் வாடும் லட்சக்கணக்கான மக்கள், பெரிய டாலர் சின்னம் கொண்ட பிரமாண்டமான வாயிலைக் கடந்து செல்ல முயல்கிறார்கள்.

வாயிலின் மறுபக்கத்தில் பணக்காரர்கள் குழுவாக கூடியிருக்கிறார்கள்.

அவர்கள் உலகம் எரிவதைப் பார்த்து மகிழ்கிறார்கள்; மக்கள் போராடுவதைப் பார்த்து ரசித்து சிரித்து,மகிழ்ந்து ஆடுகிறார்கள்" என படத்தை உருவக்கும்போது சாட்ஜிபிடியிடம் அவர் பிராம்ப்ட் கொடுத்திருந்தார் என்று புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

தீ வைத்ததாகக் கூறப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, ரிண்டர்க்னெக்ட் சாட்ஜிபிடியிடம் ஒரு செய்தியை உள்ளிட்டதாகக் கூறப்படுகிறது, அதில் "என்னிடம் இருந்த பைபிளை நான் உண்மையாக எரித்தேன். அது அருமையாக இருந்தது. நான் மிகவும் விடுதலை பெற்றதாக உணர்ந்தேன்"எனக் கூறப்பட்டிருந்தது.

கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம், இந்தக் கைது நடவடிக்கை "தீ விபத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கலிபோர்னியர்களுக்கு ஒரு தீர்வை அளிக்கும் முக்கியமான படி" என்று கூறினார்.

மேலும், தீ விபத்து தொடர்பான அரசின் விசாரணைக்கு முழுமையான ஆதரவு அளிக்கப்படுகிறது என்றும் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.