IND W – AUS W: பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுடன் மோதல்.. பதம் பார்க்குமா இந்திய அணி..?
TV9 Tamil News October 12, 2025 05:48 PM

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, இந்திய மகளிர் அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு (IND W – AUS W) எதிரான சவாலை எதிர்கொள்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று அதாவது 2025 அக்டோபர் 12ம் தேதி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மைதானத்தில் மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இந்திய மகளிர் அணி, இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்று, முதல் உலகக் கோப்பை பட்டத்தை வெல்லும் முயற்சியில் வலுவான தொடக்கத்தை ஏற்படுத்தியது, ஆனால் தென்னாப்பிரிக்காவிடம் முதல் தோல்வியை சந்தித்தது. அதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற இந்திய அணி (Indian Womens Cricket Team) இப்போது முயற்சிக்கும்.

இதற்கிடையில், இலங்கைக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்படுவதற்கு பின்பு,  ஆஸ்திரேலியா நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான 2 போட்டிகளில் வென்றது. இந்தநிலையில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணி இப்போது போட்டியில் ஹாட்ரிக் வெற்றிகளை இலக்காகக் கொண்டுள்ளது.

ALSO READ:5 வீரர்களை விடுவிக்க திட்டமிடும் சிஎஸ்கே… இந்த வெளிநாட்டு வீரரும் வெளியேறுகிறாரா..?

இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இதுவரை 59 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில், பலம் மிக்க ஆஸ்திரேலிய மகளிர் அணி அதிகபட்சமாக 48 போட்டிகளில் வென்றுள்ளது. அதே நேரத்தில், இந்திய மகளிர் அணி 11 முறை மட்டுமே வென்றுள்ளது. சமீபத்திய மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் வென்றது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் மிகப்பெரிய வரலாற்று வெற்றி 2017 உலகக் கோப்பையில் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்ததுதான். அந்தபோட்டியில் இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 115 பந்துகளில் 171 ரன்கள் எடுத்தார். இது பெண்கள் ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாகும்.

பெண்கள் ஒருநாள் உலகக் கோப்பையை பொறுத்தவரை இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் 13 முறை மோதியுள்ளன. இவற்றில் ஏழு முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 10 முறை வென்றுள்ளது, அதே நேரத்தில் இந்திய மகளிர் அணி 2017 அரையிறுதி உட்பட மூன்று மறக்கமுடியாத வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. 2017 முதல் ஒருநாள் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி தோற்கடித்ததில்லை.

ALSO READ: சர்வதேச போட்டிகளில் ஷாக்! தென்னாப்பிரிக்காவை நெம்பி வென்ற நமீபியா..!

இரு அணிகளின் முழு விவரம்: இந்திய பெண்கள் அணி:

பிரத்திகா ராவல், ஸ்மிருதி மந்தனா, ஹர்லீன் தியோல், ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி சர்மா, சினே ராணா, ரிச்சா கோஷ், ஸ்ரீ சரணி, கிராந்தி கவுட், ரேணுகா சிங் தாக்கூர், அமஞ்சோத் கவுர், உமா செத்ரி, உமா செத்ரி, அருந்தவ் ரெட்டி.

ஆஸ்திரேலிய மகளிர் அணி:

பெத் மூனி, அலிசா ஹீலி (கேப்டன்), அன்னாபெல் சதர்லேண்ட், ஆஷ்லீ கார்ட்னர், தஹ்லியா மெக்ராத், சோஃபி மோலினக்ஸ், கிம் கார்த், அலானா கிங், டார்சி பிரவுன், ஜார்ஜியா வால், ஜார்ஜியா வேர்ஹாம், மேகன் ஸ்கட், ஹீதர் கிரஹாம், ஃபோப் லிட்ச்ஃபீல்ட்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.