Biggboss Tamil 9 Day 6: பார்வதியின் ஆட்டிடியூட்.. ஆதிரையின் மரியாதையின்மை.. திவாகருக்கு அட்வைஸ்.. பிரவீன் காந்திக்கு ஒரு சாட்டையடி.. விஜய்சேதுபதியின் கலக்கல் ஃபெர்பாமன்ஸ்.. முதல் வாரமே சாட்டையை கையில் எடுத்ததால் பரபரப்பு..!
Tamil Minutes October 13, 2025 05:48 AM

பிக்பாஸ் நிகழ்வுகளில் 6வது நாளான நேற்று சனிக்கிழமை விஜய் சேதுபதி நாள் என்பதால் சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சீசனை போல் அல்லாமல், இந்த முறை விஜய் சேதுபதி முதல் நாளிலேயே கட்டுப்பாட்டை உறுதியாக பிடித்தார். போட்டியாளர்கள் பேசத் தொடங்கும்போதே ‘முன்னுரைகள்’ தேவையில்லை என்று கூறி, அவர்களை கட்டுப்படுத்தினார்.

முதலில், வீட்டில் இருக்கும் சிலரை எழுப்பி, அவர்களின் பெயர்களை வேண்டுமென்றே மாற்றி சொல்லி, யாருமே இல்லை என்று சொல்லி கேலி செய்தார். இதன் மூலம், வீட்டில் இருப்பவர்கள் வெளியே எந்த அளவுக்கு அறியப்படுகிறார்கள் என்பதை உணர்த்தினார்.

திவாகரை ‘வாட்டர் மெலன்’, ‘முந்திரி கொட்டை’ என்று கிண்டல் செய்தார். திவாகரின் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த கமருதீன் கொட்டாவி விட்டபோது, உடனே அதை பிடித்து, “எனக்குத்தான் தூக்கம் வருது கமருதீன்” என்று அவரை கலாய்த்தார். தூங்கவில்லை என்று கமருதீன் பொய் சொன்னதற்கும் பதிலடி கொடுத்தார்.

நேற்றைய ஹைலைட் பார்வதியின் ‘ஆட்டிடியூட்’ குறித்தும், அவர் சோகத்தை மறைக்க தலையை ஆட்டும் பாடி லாங்குவேஜ் குறித்தும் விமர்சித்தார். “உங்களைக் கூல் டவுன் செய்ய என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால், இந்த இடத்தின் மரியாதையை கெடுக்கும் வகையில் அடுத்தவர்களை காயப்படுத்தும் உங்கள் ரியாக்ஷன்களை நிறுத்துங்கள்” என்று அறிவுறுத்தினார்.

ஆதிரை எழுந்து நிற்காமல் உட்கார்ந்தே பெயர் சொல்ல முயன்றபோது, அவர் உடனடியாக கேள்வி எழுப்பினார். “நின்னுதான் பேசணும்னு நான் சொல்ல வரல. ஆனா, எல்லாரும் செய்யும்போது அது ஒரு நன்னடத்தை தானே?” என்று கேட்டார். இதற்கு ஆதிரை, “இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் சார்” என்று பதிலளித்தபோது, விஜய் சேதுபதியின் பதில் கூர்மையாக இருந்தது. உங்க விருப்பத்திற்காக நீங்க இந்த வீட்டுக்கு வரல!” என்றும் பதிலடி கொடுத்தார்.

அதேபோல் FJ ஒரு பெண் போட்டியாளர் மடியில் படுத்துக்கொண்டதை ரம்யா விமர்சித்தபோது, விஜய் சேதுபதி அந்த சமூகத்தின் மாரல் போலீசிங் மனநிலையை சாடினார். விஜே பார்வதி விளையாட்டாக திவாகரை எட்டி உதைத்ததை அனைவரும் சாதாரணமாக எடுத்துக்கொண்ட நிலையில், அதுவே திவாகர் விஜே பார்வதியை உதைத்திருந்தால் சமூகம் கொந்தளிக்கும் என்ற பாலின பாகுபாட்டை கேள்வி கேட்டார்.

பிரவீண் காந்தி ’நான் பெண்களுக்கு நம்பிக்கை கொடுக்கப் பேசுகிறேன்” என்று சொன்னபோது, விஜய்சேதுபது உடனே, ‘பெண்கள் பலவீனமானவர்கள் அல்லது பாதுகாப்பற்றவர்கள் என்று சொல்லும் கருத்து தவறு என்றும், பொதுவெளியில் உட்கார்ந்து கொண்டு பின்னோக்கிய கருத்துகளை திணிக்க வேண்டாம் என்றும் கூறி, பிரவீண் காந்திக்கு பதிலடி கொடுத்தார்.

திவாகருக்கு அவர் கொடுத்த அட்வைஸ் என்னவெனில் எதிராளி பேசி முடிக்கும் வரை பொறுமையாக கேட்டுவிட்டு பிறகு பேசுங்கள் என்று கூறினார்.

விஜய் சேதுபதி இந்த வாரம் உண்மையிலேயே ஆட்டத்தின் கட்டுப்பாட்டை தன் கையில் எடுத்து, போட்டியாளர்களின் போலித்தனங்களைக் கத்தரித்துவிட்டார். இனி போக போக இன்னும் சிறப்பாக நிகழ்ச்சியை கொண்டு செல்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Bala Siva

டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.

Author: Bala Siva

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.