100 வயதை எட்டிய நபர்களை அவ்வப்போது சந்திக்கும்போது அவர்களை ஆச்சர்யத்துடன் பார்க்கிறோம். ஆனால், எல்லோரும் அவ்வளவு நீண்ட காலம் வாழ்வதில்லை. எனினும், நம் ஆயுளை மேம்படுத்தவும் மற்றும் நீட்டிக்கவும் செய்வதற்கான பல வழிகள் உள்ளன.
சிலருக்கு நீண்ட ஆயுள் என்பது மரபணு ரீதியானது. ஆனால், எவ்வளவு நீண்ட காலம் வாழ்கிறோம் என்பதில் நாமும் தாக்கம் செலுத்த முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. நீண்ட காலம் வாழ்வதற்கு நாம் எல்லோருக்கும் தெரிந்த ஒரே எளிய வழி, ஆரோக்கியமான வாழ்வியலை கடைபிடிப்பதுதான். ஆரோக்கியமான வாழ்வியல் என்பது என்ன?
ஒருவரின் ஆயுளை 24 ஆண்டுகள் வரை நீட்டிக்கச் செய்வதற்கான எட்டு முக்கியமான பழக்கங்கள் குறித்து சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அவை இளம் வயதிலேயே உயிரிழக்கும் ஆபத்தை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இளம் வயதிலேயே இறப்பதை அந்த ஆய்வுக்குழு 'முன்கூட்டியே இறத்தல்' (premature mortality) என்று குறிப்பிடுகிறது.
2,76,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் வாயிலாக இந்த முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
நீண்ட ஆயுளுக்கு நம்மை அழைத்துச் செல்லும் எட்டு வழிகள் இதோ:
ஆரோக்கியமான உணவுப் பழக்கம்கலவையான மற்றும் வேறுபட்ட உணவுகளை உள்ளடக்கிய உணவுமுறையை கடைபிடிப்பதுதான் இதில் முக்கியம். துரித உணவுகள், சர்க்கரை-உப்பு அதிகம் கலந்த உணவுகள் ஆகியவை உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது நம்மில் பெரும்பாலானோர் அறிந்ததே. அதேபோன்று, வறுத்த, பொரித்த உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரத உணவுகள் ஆகியவை நாள்பட்ட நோய்களையும், அழற்சியையும் தடுக்கும் என்பதால், அவற்றை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தினசரி உடற்பயிற்சிஒட்டுமொத்தமாக நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க தினந்தோறும் மிதமான அளவு உடற்பயிற்சி செய்வது முக்கியம். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நாள்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தையும் குறைக்கிறது.
நல்ல தூக்கம்உடற்பயிற்சி செய்வது தூக்கத்தை மேம்படுத்தும், இது, பலவித வாழ்வியல் முறைகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதை காட்டுகிறது. பல ஆய்வுகள் 7-9 மணிநேரம் உறங்குவது பொதுவாக உடல்நலத்திற்கு நல்லது என்பதை பரிந்துரைக்கின்றன. உங்களின் உடலை ஆற்றுப்படுத்தி, பல்வேறு வித உடல்நல கேடுகளிலிருந்து தூக்கம் உங்களை பாதுகாக்கும்.
மது மற்றும் புகையிலையை தவிர்ப்பது, காய்கறிகளை எடுத்துக்கொள்வது, உடற்பயிற்சி, காலை உணவை தவிர்க்காமல் இருப்பது, உடலில் இரும்புச்சத்தின் அளவை கண்காணிப்பது ஆகியவை நல்ல தூக்கத்திற்கான5 வழிகள் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மன அழுத்தத்தைக் கண்காணித்தல்மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது எப்போதும் எளிதானது அல்ல, ஆனால் மன அழுத்தத்திலிருந்து எப்படி விடுபடுவது என்பதை உணர்வது நமக்கு நன்மை பயக்கும்.
மன அழுத்தம் நம் மனநலனுக்கு மட்டுமின்றி, நம்முடைய உடல்நலத்திற்கும் கேடு விளைவிக்கும். இதய நோய்கள் உள்ளிட்ட பல உடல்நல பாதிப்புகளுக்கு அது வழிவகுக்கும்.
வலுவான தனிப்பட்ட உறவுகள்குடும்பம் மற்றும் நண்பர்களிடையே நாம் கொண்டிருக்கும் நெருக்கமான நட்புறவு, ஒருவரோடு ஒருவர் தொடர்பில் நீடிப்பதற்கு முக்கியமானது, இது நாம் தனிமைக்கு ஆட்படும் வாய்ப்புகளை குறைக்கிறது. பதற்றம் மற்றும் மன அழுத்தம் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளிலிருந்து இந்த உறவுகள் நம்மை காக்கும்.
நட்புறவு குறித்த ஆராய்ச்சி நூலை எழுதியிருக்கும் அறிவியல் பத்திரிகையாளர் லிடியா டென்வொர்த், ஒருவர் தனிமையில் அடைபட்டு கிடக்கும்போது அவருடைய நோய் எதிர்ப்பு சக்தி குறைவதாகத் தெரிவிக்கிறார். தனிமையில் சிக்கிக் கிடக்கும் போது ஒருவரது உடலில் உள்ள வெள்ளை அணுக்கள் தங்களது செயல்பாட்டை மாற்றிக் கொள்வதாகவும் அதனால் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைவதாகவும் அவர் கூறுகிறார்.
மேலே சொன்ன 5 வழிமுறைகளும் நல்ல ஆரோக்கியத்திற்காக கடைபிடிக்க வேண்டியவை. அடுத்ததாக, கடைசி 3 வழிமுறைகளும் நீண்ட ஆயுளுக்கு எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்பதை கூறுகின்றன.
போதைப் பழக்கத்தை தவிர்த்தல்நல்ல உடல்நலத்திற்கு ஓபியாய்டு உள்ளிட்ட அனைத்து வகையான போதைப் பொருட்களையும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, போதைப்பழக்கம் உள்ளிட்ட அடிமைப்படுத்தும் எதுவொன்றையும் தவிர்ப்பது, நீண்ட ஆயுளுக்கான முக்கியமான ஒன்றாகும்.
அதிக மதுப் பழக்கத்தை தவிர்த்தல்அதிகமாக மது அருந்துதல் உள்ளிட்ட பழக்கங்களை தவிர்க்க வேண்டும். அதிகமாக மது அருந்தினால் கல்லீரல் செயலிழப்பு, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். மது அருந்துவதால் நாள்பட்ட கல்லீரல் சிரோசிஸ், அக்யூட் ஆல்கஹாலிக் ஹெபடைட்டிஸ் அல்லது அக்யூட் கல்லீரல் செயலிழப்பு, நாள்பட்ட கல்லீரல் நோய் போன்ற கல்லீரல் நோய்கள் ஏற்படுகின்றன.
புகைப்பிடித்தல் பலவித நோய்களுக்கு வழிவகுக்கும். புகைப் பிடிக்கும் பழக்கத்தை தவிர்க்கும் போது, அது நம் ஆயுள் நீடிக்க வழிவகுக்கும்.
"பொதுவாக 40 வயதுக்குள் ஒருவர் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டால், அவரது ஆயுள் 10 வருடங்கள் கூடும், என்று மருத்துவர்கள் சொல்வோம்," என்கிறார், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் பொதுமருத்துவத் துறைத்தலைவர் மருத்துவர் எஸ்.சந்திரசேகர்.
"அதுவே ஒருவர் 40 வயதுக்கு மேல் புகைப்பழக்கத்தைக் கைவிட்டால், அவரது உடலில் புகையால் ஏற்பட்ட பாதிப்புகள் 90% குறையும், ஆனால் அவரது ஆயுள் நீளும் என்று சொல்ல முடியாது," என்கிறார் அவர்.
இத்தகைய வாழ்வியல் முறைகளை கடைபிடித்தவர்கள் 87 ஆண்டுகள் வரை வாழ்ந்துள்ளனர் என்பதை இந்த ஆய்வு காட்டுகிறது. இது அமெரிக்காவின் சராசரி ஆயுட்காலத்தை விட 10 ஆண்டுகள் அதிகமாகும்.
நிச்சயமாக, நீண்ட ஆயுளுக்கு எதுவும் உத்தரவாதம் அளிக்க முடியாது. ஆனால், இந்த எட்டு வாழ்வியல் முறைகளும் நீண்ட ஆயுளை நோக்கி சரியான திசையில் செல்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தும்.
பிபிசி ரீல்ஸில் சுகாதார செய்தியாளர் மெலிசா ஹோகென்பூம் தயாரித்த நிகழ்ச்சியிலிருந்து தொகுக்கப்பட்ட தகவல்கள்:
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு