வாட்ஸ்அப் என்ற மாபெரும் போட்டியாளருடன் இந்தியத் தயாரிப்பு மெசேஜிங் செயலி ஒன்று போட்டியிட முடியுமா?
கடந்த சில வாரங்களாக, இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமான ஸோஹோ (Zoho) உருவாக்கிய 'அரட்டை' (Arattai) என்ற மெசேஜிங் செயலி நாட்டில் திடீர் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த வாரம் ஏழு நாட்களில் இந்தச் செயலி 70 லட்சம் பதிவிறக்கங்களைப் பெற்றுள்ளதாக நிறுவனம் கூறுகிறது.
இருப்பினும், அதற்கான தேதிகளை அது குறிப்பிடவில்லை. சந்தை ஆய்வுகளை மேற்கொள்ளும் சென்சார் டவர் (Sensor Tower) நிறுவனத்தின்படி, ஆகஸ்ட் மாதத்தில் அரட்டையின் பதிவிறக்கங்கள் 10,000க்கும் குறைவாகவே இருந்தன.
தமிழில் 'அரட்டை' என்று பொருள்படும் இந்தச் செயலி, 2021 இல் சாதாரணமாக அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், பலர் அதைப் பற்றி அறிந்திருக்கவில்லை. அமெரிக்க வர்த்தக வரிகளால் இந்தியாவில் ஏற்படும் தாக்கத்தின் விளைவாக, மத்திய அரசு தற்சார்பு இந்தியாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், அந்த செயலியின் பிரபலம் திடீரென அதிகரித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சர்கள் கடந்த சில வாரங்களாகத் திரும்பத் திரும்பச் சொல்லும் செய்தி இதுதான்: இந்தியாவில் உருவாக்குங்கள், இந்தியாவில் செலவிடுங்கள்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இரண்டு வாரங்களுக்கு முன்பு எக்ஸ் தளத்தில் அரட்டை செயலி பற்றிப் பதிவிட்டு, மக்களை "தொடர்பில் இருக்க மக்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட செயலிகளைப் பயன்படுத்தவேண்டும் என வலியுறுத்தினார். அதன் பின்னர், மேலும் பல அமைச்சர்கள் மற்றும் தொழில்துறை தலைவர்கள் அரட்டை குறித்துப் பதிவிட்டுள்ளனர்.
அரசின் இந்த முயற்சி "அரட்டை செயலியின் பதிவிறக்கங்கள் திடீரென அதிகரிக்க நிச்சயமாக உதவியது" என்று ஸோஹோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
"வெறும் மூன்று நாட்களில், ஒரு நாளைக்கான புதிய பதிவுகள் 3,000 இலிருந்து 3,50,000 ஆக அதிகரித்ததைக் கண்டோம். எங்கள் செயலில் உள்ள பயனர்களின் எண்ணிக்கை 100 மடங்கு அதிகரித்துள்ளது, அந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது," என்று ஸோஹோ தலைமைச் செயல் அதிகாரி மணி வேம்பு பிபிசியிடம் தெரிவித்தார். இது, பயனர்கள் தங்கள் தனிப்பட்ட தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்யக்கூடிய உள்நாட்டுத் தயாரிப்பைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைக் காட்டுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
செயலியில் உள்ள பயனர்கள் பற்றிய விவரங்களை நிறுவனம் வழங்கவில்லை. இருப்பினும், இந்தியாவில் 50 கோடி மாதாந்திர பயனர்களைக் கொண்டுள்ள மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப்பின் எண்ணிக்கையிலிருந்து அரட்டை செயலி இன்னும் வெகுதொலைவில் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியா வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய சந்தை. மொத்தமாக குட் மார்னிங் வாழ்த்துகளை அனுப்புவது முதல் தங்கள் வணிகங்களை நடத்துவது வரை மக்கள் இந்தச் செயலியைப் பயன்படுத்துவதால், இது கிட்டத்தட்ட ஒரு வாழ்க்கை முறையாகவே நாட்டில் உள்ளது.
அரட்டை, வாட்ஸ்அப்பைப் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. இது பயனர்கள் செய்திகளை அனுப்பவும், குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும் அனுமதிக்கிறது. இரண்டு செயலிகளும் வணிகத்திற்கான ஒரு தொகுப்பு கருவிகளை வழங்குகின்றன. மேலும், வாட்ஸ்அப்பைப் போலவே, அரட்டையும் குறைந்த விலை போன்களிலும் ,மெதுவான இணைய வேகத்திலும் சீராகச் செயல்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று அந்த நிறுவனம் கூறுகிறது.
பல பயனர்கள் சமூக ஊடகங்களில் அரட்டையைப் பாராட்டி உள்ளனர். சிலர் அதன் இன்டர்பேஸ் மற்றும் வடிவமைப்பு பிடித்திருப்பதாகக் கூறினர். மற்றவர்கள் அது பயன்பாட்டில் வாட்ஸ்அப்பை ஒத்துள்ளது என்று உணர்ந்தனர். பலர் அது இந்தியத் தயாரிப்புச் செயலி என்பதில் பெருமிதம் கொள்வதுடன், மற்றவர்களையும் அதைப் பதிவிறக்கம் செய்ய ஊக்குவித்தனர்.
அரட்டை, மிகப்பெரிய சர்வதேசப் போட்டியாளர்களை மாற்றீடு செய்யக் கனவு காணும் முதல் இந்தியச் செயலி அல்ல. கடந்த காலத்தில், கூ (Koo) மற்றும் மோஜ் (Moj) போன்ற இந்தியத் தயாரிப்புச் செயலிகள் முறையே எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் டிக்டாக்கிற்கு (2020 இல் இந்திய அரசு சீனச் செயலியைத் தடை செய்த பிறகு) மாற்றாகப் பேசப்பட்டன. ஆனால், ஆரம்ப வெற்றிக்குப் பிறகு அவை பெரிதாக வெற்றி பெறவில்லை. ஒரு காலத்தில் வாட்ஸ்அப்புக்கு மிகப்பெரிய போட்டியாளராகப் பேசப்பட்ட ஷேர்சாட்டும் (ShareChat) கூடத் தனது எதிர்பார்ப்புகளைக் குறைத்துக் கொண்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த தொழில்நுட்ப எழுத்தாளரும், ஆய்வாளருமான பிரசாந்தோ கே ராய் கூறுகையில், வாட்ஸ்அப்பின் பரந்த பயனர் தளத்தைப் பிளப்பது அரட்டை செயலிக்குக் கடினமானதாக இருக்கும். குறிப்பாக, மெட்டாவின் கீழ் உள்ள வாட்ஸ்அப் தளத்தில் அதிக எண்ணிக்கையிலான வணிகங்கள் மற்றும் அரசாங்க சேவைகள் செயல்படுகின்றன.
அரட்டையின் வெற்றி புதிய பயனர்களை ஈர்ப்பதில் மட்டுமல்ல, அவர்களை தக்கவைத்துக் கொள்வதிலும் தான் உள்ளது. இதை தேசிய உணர்வால் மட்டும் செலுத்த முடியாது என்று அவர் கூறுகிறார்.
"தயாரிப்பு நன்றாக இருக்க வேண்டும், ஆனால் அப்படி இருந்தாலும், உலகில் ஏற்கனவே கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள ஒரு செயலியை இது மாற்றுவதற்குச் சாத்தியம் அதிகமில்லை," என்று ராய் மேலும் கூறுகிறார்.
நிபுணர்கள் கவலையும் நிறுவனத்தின் விளக்கமும்அரட்டையில் உள்ள தரவு தனியுரிமை (Data Privacy) குறித்தும் சில நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தச் செயலி வீடியோ மற்றும் குரல் அழைப்புகளுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை (E2EE) வழங்கினாலும், செய்திகளுக்கு இந்த அம்சத்தை தற்போது தரவில்லை.
"பாதுகாப்புக் காரணங்களைக் கூறி, செய்திகளின் மூலத்தைக் கண்டறிய அரசாங்கம் விரும்புகிறது, இதை எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் இல்லாமல் எளிதாகச் செய்யலாம்," என்று இந்தியாவில் தொழில்நுட்பக் கொள்கை குறித்துப் பதிவிடும் இணையதளமான மீடியாநாமாவின் (MediaNama) நிர்வாக ஆசிரியர் சசிதர் கே.ஜே. கூறுகிறார். ஆனால், இது மக்களின் தனியுரிமையை அபாயத்திற்குள்ளாக்குகிறது என்றும் அவர் மேலும் கூறுகிறார்.
அரட்டை செயலி, உரைச் செய்திகளுக்கான எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை வழங்குவதற்காக தீவிரமாகச் செயல்படுவதாகத் தெரிவித்துள்ளது.
"நாங்கள் ஆரம்பத்தில் E2EE உடன் இந்தச் செயலியை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டோம், இது இன்னும் இரண்டு மாதங்களில் நடந்திருக்கும்," என்று மணி வேம்பு கூறினார். "இருப்பினும், காலக்கெடு மாற்றப்பட்டுள்ளது. மேலும், சில முக்கியமான அம்சங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆதரவை முடிந்தவரை விரைவாகக் கொண்டு வர முயற்சிக்கிறோம்."
வாட்ஸ்அப் செய்திகள் மற்றும் அழைப்புகளுக்கு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷனை வழங்குகிறது. ஆனால், அதன் கொள்கையின்படி, சட்டப்பூர்வமாகச் செல்லுபடியாகும் சூழ்நிலைகளில் அரசாங்கங்களுடன் மெட்டா தரவைப் (செய்தி அல்லது அழைப்புப் பதிவுகள் போன்றவை) பகிர முடியும்.
இந்தியாவின் இணையச் சட்டங்களின்படி, சமூக ஊடகத் தளங்கள் சில சூழ்நிலைகளில் மத்திய அரசுடன் பயனர் தரவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கோருகின்றன. ஆனால், சர்வதேச நிறுவனங்களிடமிருந்து இந்தத் தரவைப் பெறுவது கடினமானது மற்றும் நேரம் எடுக்கும் செயல்.
மெட்டா மற்றும் எக்ஸ் போன்ற உலகளாவிய பெரு நிறுவனங்கள், நியாயமற்றவை என்று அவர்கள் கருதும் அரசாங்கக் கோரிக்கைகள் அல்லது விதிகளை எதிர்த்துப் போராடுவதற்கான சட்ட மற்றும் நிதி ஆதாரங்களை கொண்டுள்ளன.
2021 இல், சமூக ஊடகம் மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களில் உள்ள உள்ளடக்கத்தைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் புதிய டிஜிட்டல் விதிகளுக்கு எதிராக வாட்ஸ்அப் இந்தியாவில் வழக்குத் தொடர்ந்தது. அவை வாட்ஸ்அப்பின் தனியுரிமைப் பாதுகாப்புகளை மீறுவதாகக் கூறியது. உள்ளடக்கத்தை முடக்குவதற்கான அல்லது நீக்குவதற்கான இந்திய அரசாங்கத்தின் அதிகாரங்களுக்கு எதிராக எக்ஸும் சட்ட சவால்களை எழுப்பியுள்ளது.
எனவே, பயனர்களின் தனியுரிமை உரிமைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய அரசாங்கக் கோரிக்கைகளை இந்தியத் தயாரிப்பு அரட்டை செயலியால் தாங்கி நிற்க முடியுமா என்று நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
தொழில்நுட்பச் சட்டம் குறித்துச் சிறப்பு கவனம் செலுத்தும் ராகுல் மத்தன் கூறுகையில், அரட்டையின் தனியுரிமைக் கட்டமைப்பு மற்றும் அரசாங்கத்துடன் பயனர் உருவாக்கிய உள்ளடக்கத்தைப் பகிர்வது குறித்த ஸோஹோவின் நிலைப்பாடு பற்றி மேலும் தெளிவு வரும் வரை, பலர் அதைப் பயன்படுத்த தயக்கம் காட்டலாம்.
மத்திய அமைச்சர்கள் இந்தச் செயலியை விளம்பரப்படுத்துவதால், ஸோஹோ அரசுக்கு கடமைப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் உணருவதற்கு வாய்ப்புள்ளது என்று ராய் கூறுகிறார். மேலும், நாட்டின் சட்டங்கள் மற்றும் சட்ட அமலாக்கக் கோரிக்கைகளுக்கு இணங்கச் சொல்லும்போது, ஒரு இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தால் அதை வலுவாக எதிர்ப்பது எளிதல்ல என்றும் அவர் கூறுகிறார்.
அத்தகைய கோரிக்கைகள் வந்தால் அரட்டை என்ன செய்யும் என்று கேட்டபோது, நிறுவனம் "நாட்டின் தகவல் தொழில்நுட்ப விதிகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்குவதோடு, தங்கள் தரவின் மீது பயனர்கள் முழு கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க வேண்டும்" என்று விரும்புவதாக மணி வேம்பு கூறுகிறார்.
"முழு எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வெளியிடப்பட்டவுடன், பயனர் உரையாடல்களின் உள்ளடக்கத்தை நாங்கள் கூட அணுக முடியாது. எந்தவொரு சட்டப்பூர்வ கடமைகளைப் பற்றியும் நாங்கள் எங்கள் பயனர்களுடன் வெளிப்படையாக இருப்போம்," என்று அவர் கூறினார்.
பழக்கத்தை உருவாக்கும் ஜாம்பவான்களான வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் ஆதிக்கம் செலுத்தும் போது, நிலைமை இந்தியச் செயலிகளுக்கு எதிராகவே உள்ளது என்று அனுபவம் காட்டுகிறது. அரட்டை செயலியால் இதில் வெற்றி பெற முடியுமா - அல்லது அதற்கு முன் இருந்த பல செயலிகள் போல மங்கிவிடுமா - என்பதைக் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு