IND W – AUS W: கடைசி வரை போராட்டம்.. ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோல்வி!
TV9 Tamil News October 13, 2025 05:48 PM

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான போட்டியில் 3 விக்கெட் வித்யாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. அக்டோபர் 13ம் தேதி நடைபெற்ற விசாகப்பட்டினத்தில் உள்ள ஏசிஏ-விசிஏ மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் அலிசா ஹீலி பவுலிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி களம் கண்டது.  அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரரான பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஆகிய இருவரும் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை சரமாரியாக விளாசி தள்ளினர். இதனால் அணியில் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.

இருவரும் அரைசதம் கடந்த நிலையில் முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மிருதி மந்தனா 80 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து பரதிகா ராவல் 75 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின்னர் களமிறங்கிய ஹர்லின் தியோல் 38 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.  கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் 22 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 33 ரன்களும், ரிச்சா கோஸ் 32 ரன்களும் எடுக்க இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 48.5 ஓவர்கள் மட்டுமே முழுமையாக விளையாடி ஆட்டமிழந்தது.

அந்த அணி 330 ரன்கள் குவித்தது. எனினும் ஆஸ்திரேலியா தரப்பில் பந்து வீசிய அனபெல் சதர்லேண்ட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மேலும் சோஃபி மோலினக்ஸ் 3 விக்கெட்டுகளும், மேகன் ஸ்கட் மற்றும் ஆஸ்லீ கார்ட்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அலிசா ஹீலி அசத்தல் சதம்

இதனைத் தொடர்ந்து 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா மகளிர் படை களம் கண்டது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான அலிசா ஹீலி தனியொரு மனுஷியாக நின்று வெற்றி இல்லை நோக்கி பயணப்பட்டார். கிட்டதட்ட 107 பந்துகளை எதிர்கொண்ட அவர் 21 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் விளாசி தள்ளினார். இறுதியாக 142 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார். அவருக்கு பந்து வீசியே இந்திய பவுலர்கள் மிகவும் சோர்வடைந்தனர்.

மறுபுறம் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஃபோப் லிட்ச்ஃபீல்ட் 40 ரன்கள் எடுத்தார். பின்னர் களம் கண்ட எலீஸ் பெர்ரி 47 ரன்களும், ஆஷ்லி கார்டனர் 45 ரன்களும் எடுக்க ஆஸ்திரேலியா அணி 49 ஓவர்கள் விளையாடி 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 331 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 3 விக்கெட் வித்யாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது.

இந்திய அணி தரப்பில் பந்து வீச்சில் நல்லபுரெட்டி செலானி அதிகப்பட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மேலும் தீப்தி சர்மா, அமன்ஜோத் கவுர் ஆகியோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா அணி 7 பாயிண்டுகளுடன் முதலிடத்திற்கு சென்றது. இந்திய அணி 4 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. மேலும் இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் அக்டோபர் 19ம் தேதி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.