கடந்த மாதம் 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், அந்த விபத்தில் உயிரிழந்தோரின் 16-ம் நாள் நினைவு இன்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, சென்னையில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலக நுழைவாயில் பகுதியில், கட்சி சார்பில் நினைவு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதில், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. புகைப்படங்களின் கீழ், “உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும்… உங்கள் எண்ணங்கள் ஈடேற சபதம் ஏற்போம்” என்ற வரிகளும் இடம் பெற்றுள்ளன.
மேலும், பலியானவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதுடன், புகைப்படம் இல்லாதோரின் இடங்களில் பூக்குடைகள் மற்றும் மெழுகுவர்த்தி எரிவதைப் போன்று வடிவமைப்பு செய்யப்பட்டு உள்ளது.
நினைவு நாளை முன்னிட்டு த.வெ.க. தலைமை அலுவலகம் அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக வெற்றி கழகத்திற்கு சாதகமாக சிபிஐ விசாரணைக்கு மாற்றி தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.