“இபிஎஸ் சாமின்னு யாரை சொல்றாரோ அவரைத்தான் நாங்கள் கும்பிடுவோம்”… கூட்டணிக்கு வந்தால் தோளில் தூக்கிக் கொண்டாடுவோம்… ஒரே போடாய் போட்ட செல்லூர் ராஜு..!!
SeithiSolai Tamil October 13, 2025 09:48 PM

மதுரை மாவட்டம் விளாங்குடியில், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “நடிகர் விஜய்க்காக குரல் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி. அதனால், அவர் வந்தபோது நாங்கள் எங்கள் கட்சிக்கொடியை காட்டினோம் என்று த.வெ.க. தொண்டர்கள் கூறுகிறார்கள். எடப்பாடி பழனிசாமியை விஜய் ரசிகர்கள் விரும்புகிறார்கள். அதனால் தன்னெழுச்சியாக அவர்கள் எஙனன கொடியை காட்டுகின்றனர்.

ஒரு பழம் கிடைக்கவில்லை என்றால் அது புளிக்கும் என்று தான் சொல்வார்கள். அதுபோல, விஜய்யின் ஆதரவு கிடைக்காததால் டி.டி.வி. தினகரன் அ.தி.மு.க. குறித்து விமர்சிக்கிறார். எங்கள் கட்சி தரம் தாழ்வதில்லை. அ.தி.மு.க. தொண்டர்கள் வேறு கட்சிக்கொடியை தூக்கிய வரலாறு இல்லை. கூட்டணி சேர்ந்தால் தோள் கொடுப்போம், தோளில் தூக்கி கொண்டாடுவோம். எங்கள் பொதுச்செயலாளர் யாரை சாமி என்று சொல்கிறாரோ அவரை நாங்கள் கும்பிடுவோம்.

வி.சி.க. தலைவர் திருமாவளவன் தன் தொண்டர்களை கட்டுப்படுத்த வேண்டும். வி.சி.க. வன்முறை இயக்கத்தோடு சேர்ந்து விட்டது. தன் கட்சியை கட்டுக்கோப்புடன் வைத்திருக்க வேண்டும். அவர் விஜய்க்கு அறிவுரை சொல்கிறார்; ஆனால் தன் தொண்டர்களை கண்டிக்கவில்லை. தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அதே போக்கில் உள்ளது.

மேலும் எம்.ஜி.ஆர். என்றால் அது ஒரு கெத்து. அவருக்கு இணையானவர் எவரும் இல்லை. சினிமாவிலும் அரசியலிலும் எம்.ஜி.ஆர். தான் ஒரே தலைசிறந்தவர்,” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.