பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், கடந்த வாரம் நந்தினி வெளியேறிய நிலையில், இதனையடுத்து நேற்று குறைந்த வாக்குகள் பெற்ற ப்ரவீன் காந்து வெளியேற்றப்பட்டார். இந்த நிலையில் தற்போது போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா ஜோ திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பிக் பாஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நந்தினி வெளியேறியதை பிக் பாஸ் லேசாக கடந்து சென்ற நிலையில், ரம்யா ஜோவும் வெளியேற நேரிட்டால், ‘சீசன் 9-ஐ இழுத்து மூட வேண்டியதுதான்’ என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
ரம்யா ஜோ மயங்கி விழுந்ததற்கு முக்கியக் காரணமாக பேசப்படுவது, இந்த சீசனில் பிக் பாஸ் நிர்வாகம் கையாளும் உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை வியூகம்தான். முந்தைய சீசன்களில் இல்லாத அளவுக்கு, இம்முறை போட்டியாளர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை தேவையான உணவு மற்றும் தண்ணீர் விஷயத்தில் பிக் பாஸ் குழுவினர் மிகவும் கறாராக இருக்கின்றனர்.
“போட்டியாளர்களுக்குச் சோற்றையும் தண்ணீரையும் அளவாக கொடுத்தால்தான் அவர்கள் சண்டையிட்டு ‘கண்டென்ட்’ கொடுப்பார்கள்; இல்லையேல் தொப்பையை நிரப்பிக்கொண்டு சோபாவில் ஓய்வெடுப்பார்கள்,” என்று பிக் பாஸ் குழு முடிவெடுத்துள்ளதாகவும், அதனால்தான் ஒரு கப் சோறுதான் அனைவருக்கும் என அளவிட்டு வழங்குவதாகவும் கூறப்படுகிறது.
இந்த உணவு பற்றாக்குறையால்தான் ரம்யா ஜோவுக்கு மயக்கம் ஏற்பட்டிருக்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் உடனடியாக கைத்தாங்கலாக கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்து செல்லப்பட்டு, மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரம்யா ஜோ, நிகழ்ச்சிக்கு வெளியே பல சர்ச்சைகள் மூலம் பிரபலமானவர். அவர் இப்போது அமைதியாக இருந்தாலும், வரும் நாட்களில் பிக் பாஸ் பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய அளவில் பொழுதுபோக்குக்கும், ‘கண்டென்ட்’ கொடுப்பதற்கும் சரியான நபர் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
நந்தினி வெளியேற விரும்பியபோது, பிக் பாஸ் அவரை சமாதானப்படுத்தாமல், “போக விரும்பினால் கதவு உள்ளது” என்று அனுப்பினார். அதேபோல, உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தை காட்டி ரம்யா ஜோ வெளியேற நேரிட்டால், இந்த சீசனில் ‘கண்டென்ட்’ கொடுக்கும் முக்கிய போட்டியாளர்கள் இல்லாமல் போய்விடுவார்கள்; பிறகு யாரை வைத்து இந்த ஷோவை நடத்துவீர்கள் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிக் பாஸ் குழுமத்தை நோக்கிச் சீறுகின்றனர்.
உணவு மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படை தேவைகளில் பிக் பாஸ் நிர்வாகம் கைவைப்பது முற்றிலும் தவறு என்று பலரும் சுட்டிக்காட்டுகின்றனர். போட்டியாளர்களை டார்ச்சர் செய்து ‘கண்டென்ட்’ எடுக்க கோடிக்கணக்கில் செலவழிக்கலாம். ஆனால், உடை, தங்குமிடம், குடிக்கத் தண்ணீர், சாப்பிட உணவு ஆகிய அத்தியாவசிய தேவைகளில் குறை வைப்பது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
ஏற்கனவே, உணவு பங்கீடு காரணமாக சபரிக்கும் திவாகருக்கும் பெரிய சண்டை வெடித்துள்ளது. சபரி, “அளவான சோறுதான் அனைவருக்கும்” என்று கம்யூனிசம் பேசுவதாகவும், ஆனால் ஒவ்வொருவரின் உணவு தேவையும் மாறுபடும் என்றும் போட்டியாளர்கள் சண்டையிடுகின்றனர்.
மேலும், தண்ணீர் பற்றாக்குறையால் வீடு முழுக்க சுகாதாரம் குன்றி கிடப்பதாகவும், கழிவறைகளை கூடச் சரியாக பயன்படுத்த முடியாத நிலை இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
உணவு, தண்ணீர் மற்றும் சுகாதாரம் பாதிக்கப்பட்டால், ரம்யா ஜோ போல மேலும் பலர் உடல்நலம் குன்றி வெளியேற நேரிடலாம். எனவே, பிக் பாஸ் குழுவினர் புதுமையான டாஸ்க்குகள் மூலம் கண்டென்ட் எடுக்க முயற்சி செய்ய வேண்டுமே தவிர, அடிப்படை தேவைகளில் கை வைக்கக் கூடாது என்று ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ரம்யா ஜோ தொடர்ந்து நிகழ்ச்சியில் நீடிப்பாரா, அல்லது இந்த மருத்துவச் சிக்கல் காரணமாக வெளியேற்றப்படுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
Author: Bala Siva