கரூரில் கடந்த மாதம் 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த நிலையில், இன்று அந்த வழக்கில் உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்ற நபர், கரூர் கூட்ட நெரிசல் மற்றும் அரசியல் கட்சிகள் நடத்தும் ‘ரோடு ஷோ’களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சம்பவத்தை விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைக்க உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். அதேபோல், கூட்ட நெரிசலில் உயிரிழந்த சிறுவன் பிருத்திக்கின் தந்தை பன்னீர்செல்வம், பாத்திமாபானுவின் கணவர் பிரபாகரன், சந்திராவின் கணவர் செல்வராஜ் ஆகியோரும் சிபிஐ விசாரணை கோரி மனுக்கள் தாக்கல் செய்தனர். இதற்கிடையில் பாஜகவும் இதே கோரிக்கையுடன் தனி மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த அனைத்து மனுக்களும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டன. இன்று விசாரணை நடைபெற்றபோது, கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், சிபிஐ விசாரணையை கண்காணிக்க ஒரு சிறப்பு குழு அமைக்கப்படும் என்றும், அந்த குழுவுக்கு ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமை தாங்குவார் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது. அந்த குழுவில் இரு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டது.
சிபிஐ விசாரணை உத்தரவை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர். இதுகுறித்து தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் (X) பக்கத்தில், “எத்தனை சோதனைகள் வந்தாலும், எத்தகைய அதிகார வலிமையை எதிர்கொண்டாலும், எத்தனை போராட்டங்களைச் சந்தித்தாலும், நீதியை நிலைநாட்டத் தொடர்ந்து பாடுபடுவோம். வாய்மையே வெல்லும்!” என்று பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து தவெக தலைவர் விஜய், தனது எக்ஸ் பக்கத்தில் சுருக்கமாக “நீதி வெல்லும்!” என பதிவிட்டுள்ளார்.
மேலும் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த பதிவுகள் அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளன.