'யார் ஹீரோ?'- திரையரங்கமோ அல்லது ஓடிடி-யோ, ஒரு திரைப்படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்வதில் இந்தக் கேள்விக்கான பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கதை- திரைக்கதை போன்ற பிற அம்சங்கள் சிறப்பாக இருந்து பெரும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் ஏராளம் என்றாலும் கூட, 'ஹீரோ' தான் ஒரு திரைப்படத்தின் அடையாளம் என்ற பொது பிம்பத்தை சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு எடுத்துக்காட்டியது.
கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு நடித்திருக்கும் 'ட்யூட்' (Dude) திரைப்படம் தீபாவளியை ஒட்டி (அக்டோபர் 17) வெளியாகி உள்ளது. இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கான விளம்பர நிகழ்ச்சி சில நாட்களுக்கு முன் ஹைதராபாத்தில் நடைபெற்றபோது, பத்திரிகையாளர் ஒருவர் பிரதீப்பிடம், "நீங்கள் 'ஹீரோ மெட்டீரியல் இல்லை'. ஆனால், இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறீர்கள். அரிதாக, இத்தனை ரசிகர்களும் இருக்கிறார்கள். இது அதிர்ஷ்டமா இல்லை கடின உழைப்பா?" எனக் கேட்டார்.
அப்போது உடனிருந்த நடிகர் சரத்குமார் அப்பத்திரிகையாளரைப் பார்த்து, "நான் இந்தத் துறையில் 170 திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். யார் 'ஹீரோ மெட்டீரியல்' என்பதை நீங்கள் சொல்ல முடியாது. 'ஹீரோவாக' இருப்பதற்கு எந்த விதிமுறையும் இல்லை" என்றார்.
இது குறித்து பின்னர் ஒரு நேர்காணலில் பதிலளித்த பிரதீப் ரங்கநாதன், "ஒல்லியாக, கருப்பாக இருக்கிறேன் போன்ற உருவக்கேலிகளை சிறு வயதிலிருந்தே கேட்டுள்ளேன். அவை பழகிவிட்டன. 'லவ் டுடே' திரைப்பட நிகழ்வுகளிலும் இதை எதிர்கொண்டேன். மக்கள் என்னை அவர்களில் ஒருவராகப் பார்ப்பதால் ஹீரோவாக ஏற்றுக்கொண்டார்கள் என நினைக்கிறேன்" எனக் கூறியிருந்தார்.
இதற்கு முன் இதேபோன்ற விமர்சனங்களை எதிர்கொண்ட தமிழ் நடிகர்கள் யார் யார்? உண்மையில் ஒரு திரைப்படத்திற்கு 'ஹீரோ மெட்டீரியல்' அல்லது 'கதாநாயக பிம்பம்' தேவையா, பிற இந்திய திரைப்படத் துறைகளில் இதை எப்படிப் பார்க்கிறார்கள்?
தியாகராஜ பாகவதர் மற்றும் பியூ சின்னப்பா"தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் என விவரிக்கப்படும் தியாகராஜ பாகவதராக இருக்கட்டும் அல்லது பிரபல நடிகர் பியூ சின்னப்பாவாக இருக்கட்டும், இருவருமே அவர்களது பாடும் திறனால் பிரபலமானவர்கள். அப்போது இந்த 'ஹீரோ மெட்டீரியல்' என்ற விஷயமே இல்லை" என்கிறார் எழுத்தாளர், தமிழ் திரைப்பட வரலாற்றாய்வாளர் தியடோர் பாஸ்கர்.
பாம்பின் கண்- தமிழ் சினிமா ஓர் அறிமுகம், திரையில் விரியும் சமூகம், சித்திரம் பேசுதடி போன்ற தமிழ் சினிமா குறித்த நூல்களை இவர் எழுதியுள்ளார்.
"இந்தி சினிமா மற்றும் ஹாலிவுட் திரைப்படத்துறையில் தொடக்கம் முதலே ஒரு ஹீரோ என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற பிம்பம் இருந்தது. காலப்போக்கில் அது தமிழ் சினிமாவிலும் பரவியது, குறிப்பாக எம்ஜிஆர் காலத்தில். ஹீரோ என்பவர் அழகாக, கட்டுமஸ்தாக இருக்க வேண்டும், படத்தின் இறுதிவரை மரணிக்கவே கூடாது, பெண்கள் பின்னால் போகக்கூடாது, பெண்கள் தான் அவர் பின்னால் வர வேண்டும் என எழுதப்படாத விதிகள். இன்றுவரை எம்ஜிஆரை நினைவுகூறுபவர்கள் அவரது 'அழகைப்' பற்றி தான் பெரும்பாலும் பேசுகிறார்கள்" என்கிறார் தியடோர் பாஸ்கர்.
இதே கருத்தை முன்வைக்கும் எழுத்தாளர் ஜா. தீபா, "எம்ஜிஆருக்குப் பிறகு 'ஒரு ஹீரோ' என்றாலே அழகாக, குறிப்பாக 'வெள்ளை தோலுடன்' இருக்க வேண்டுமென்ற பிம்பம் தமிழ் சினிமாவில் உருவானது. சிவாஜி சில திரைப்படங்களில் அதை உடைத்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்தார். அதன் பின் ரஜினியின் வருகை ஒரு மாற்றத்திற்கு வழிவகுத்தது." என்கிறார்.
சிவாஜியின் 'ஹீரோ மெட்டீரியல்' அல்லாத வித்தியாசமான முயற்சிகளுக்கு சிறந்த உதாரணம், 1954இல் வெளியான 'அந்த நாள்' எனும் திரைப்படம். அதில் படம் தொடங்கி சில நிமிடங்களில் சிவாஜியின் கதாபாத்திரம் (ராஜன்) இறந்துவிடும். யார் அந்தக் கொலையைச் செய்தார்கள் என்பதே திரைப்படத்தின் கதை.
இருப்பினும் சிவாஜியைப் போல அல்லாமல், ரஜினி தொடக்கத்தில் சில திரைப்படங்களில் இரண்டாம் கதாநாயகன், வில்லனாக நடித்து கவனம் ஈர்த்த பின்பே 'ஹீரோவாக' வெற்றி பெற்றதைக் குறிப்பிடும் ஜா. தீபா, "உருவத்தைத் தாண்டி தனக்கான திறமையை சில 'கதாபாத்திரங்களில்' நிரூபித்த பின் தான் ரஜினியால் அந்தக் கேலிகளை கடந்துவர முடிந்தது." என்கிறார்.
ஆனால், தமிழில் ஒரு கதாநாயகனாக பிரபலமான பின்பும் கூட, 1980களில் இந்தியில் அறிமுகமானபோது, உருவக்கேலிகளை எதிர்கொண்டதாக ரஜினிகாந்த் ஒரு நிகழ்வில் கூறியிருப்பார்.
"கங்வா (1984இல் வெளியான இந்தித் திரைப்படம், தமிழில் வெளியான மலையூர் மம்பட்டியான் (1983) படத்தின் மறுஆக்கம்) திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் என்னை யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். 'கருப்பு ஹீரோ' என காதுபடவே பேசுவார்கள். 'அந்தா கானுன்', 'கங்வா' திரைப்படங்கள் வெற்றி பெற்ற பிறகே, என்னை பாலிவுட்டில் 'ஹீரோவாக' மதிக்கத் தொடங்கினார்கள்" என்று ரஜினி பேசியிருப்பார்.
ரஜினி பாலிவுட்டில் எதிர்கொண்ட ஒன்றை தான், பிரதீப் தெலுங்கு சினிமாவில் எதிர்கொள்கிறார் எனக் கூறும் எழுத்தாளர் தியடோர் பாஸ்கர், "'அழகாக இல்லை' என்ற காரணத்திற்காக சினிமா ரசிகர்கள் எந்த நடிகரையும் ஒதுக்கியதில்லை. 'ஹீரோ மெட்டீரியல்' என்ற ஒன்று உருவாக சினிமாதுறையினரே காரணம். குறிப்பாக 'க்ளோஸ்-அப் ஷாட்களில்' (Close-up shot) ஹீரோ 'சிவப்பாக, அழகாக' இருந்தால் தான் மக்கள் ரசிப்பார்கள் என்ற பிம்பத்தைக் கொண்டுவந்தார்கள்." என்கிறார்.
ஹைதராபாத்தில் 'டியூட்' பட நிகழ்வில் நடந்தது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஆந்திராவைச் சேர்ந்த மூத்தப் பத்திரிக்கையாளர் மற்றும் திரைப்பட விமர்சகர் ஜி.ஆர். மகரிஷி, "அந்த நிகழ்வில் எழுப்பப்பட்ட கேள்வி நிச்சயம் கண்டத்திற்குரியது. தெலுங்கு மக்கள் மட்டுமல்ல எந்த மொழி மக்களும், உருவத்தை வைத்து ஒரு நடிகரை ஒதுக்க மாட்டார்கள். திரைப்படம் நன்றாக இருந்தால் மக்கள் ரசிப்பார்கள்" என்று கூறினார்.
பாலிவுட்டில் என்ன நிலை?நடிகர் தனுஷ் தான் எதிர்கொண்ட உருவக்கேலிகள் குறித்து பல நேர்காணல்களில் பகிர்ந்துள்ளார்.
"நடிக்க வந்த புதிதில், முகத்திற்கு நேராகவே 'இவனெல்லாம் ஹீரோவா?' எனப் பேசுவார்கள். ஒருமுறை ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் படப்பிடிப்பில் இருந்தபோது, சுற்றியிருந்தவர்கள் பேசியதைக் கேட்டுவிட்டு, என் காருக்குள் சென்று சிறிது நேரம் அழுதேன். இன்றும் கூட உருவக்கேலிகள் என்னை துரத்துகின்றன" என்று ஒருமுறை தனுஷ் பேசியிருந்தார்.
2021இல் 'லிட்டில் திங்ஸ்' என்ற இந்தி மொழி இணையத் தொடரில், 'நீ என்றாவது உன் முகத்தைப் பார்த்திருக்கிறாயா? தனுஷ் போல இருக்கிறாய்' என ஒரு கதாபாத்திரம் தனது நண்பனைப் பார்த்து கேலி செய்யும். இந்தக் காட்சிக்கு பலரும் சமூக ஊடகங்களில் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
"பாலிவுட்டில் ஒரு ஹீரோ 'வெள்ளை தோலுடன்', கட்டுமஸ்தாக இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது என்பது உண்மைதான். ஆனால், மக்கள் அப்படி எதிர்பார்க்கிறார்கள் என சொல்லிவிட முடியாது. திரைத்துறையினர் தான் அவ்வாறு காட்சிப்படுத்துகிறார்கள்" என்கிறார் டெல்லியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் சத்யம் சிங்.
"தனுஷ் பாலிவுட்டில் பிரபலமான நடிகர், ஆனால் அவர் நடித்த பெரும்பாலான பாலிவுட் திரைப்படங்களில் அவர் தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என காட்டியுள்ளார்கள். அதேபோல, ரஜினிக்கும் லுங்கிக்கும் என்ன சம்மந்தம், ஆனால் 'லுங்கி டான்ஸ்' என்று ரஜினிக்கு சமர்ப்பணம் என்ற பெயரில் ஒரு பாடல் ஷாருக்கான் நடித்த 'சென்னை எக்ஸ்பிரஸ்' படத்தில் உள்ளது. மேலும், அதில் தமிழ் பெண்ணாக நடித்த தீபிகாவின் உறவினர்களாக வரும் கதாபாத்திர சித்தரிப்புகளைப் பார்த்தால், நான் சொல்வது புரியும். எனவே இது நிறம், உருவம் சார்ந்தது மட்டுமல்ல. இந்த விஷயத்தில் பாலிவுட் செல்ல வேண்டிய தூரம் அதிகம்." என்கிறார் சத்யம் சிங்.
மலையாள சினிமாவில் என்ன நிலை?மலையாளத்தில் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் ஃபஹத் பாசில், சௌபின் ஷாஹிர் போன்ற நடிகர்கள் 'ஹீரோ மெட்டீரியல்' என்று கூறப்படும் பிம்பத்தை உடைத்தவர்களே.
"பரத் கோபி, திலகன், முரளி, கொட்டாரக்கரா ஸ்ரீதரன் நாயர், கலாபவன் மணி, சூரஜ் வெஞ்சரமூடு என மலையாளத்தில் பல முன்னணி நடிகர்கள் 'ஹீரோ மெட்டீரியல்' என்ற கட்டுப்பாட்டிற்குள் அடங்காதவர்கள். முக்கியமாக கலாபவன் மணி பிற மொழிகளில் வில்லனாக பிரபலமடைந்தாலும், மலையாளத்தில் அவர் 'ஹீரோவாக' பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார்" என்கிறார் கேரளாவின் அடூரைச் சேர்ந்த துணை இயக்குநர் மற்றும் துணை நடிகர் தாரிக் கலாம்.
தமிழில் விக்ரம் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் பாராட்டப்பட்ட காசி (2001), மலையாளத்தில் வெளியாகி, பெரும் வெற்றி பெற்ற 'வசந்தியும் லட்சுமியும் பின்னே ஞானும்' (1999) என்ற திரைப்படத்தின் ரீமேக். மலையாளத்தில் கதாநாயகனாக நடித்தவர், கலாபவன் மணி.
"நிச்சயமாக இந்த 'ஹீரோ மெட்டீரியல்' என்ற பிம்பம் மொத்தமாக உடைய வேண்டும். ஒரு நாயகன் என்பவன் 'அசகாய சூரன்' என்று திரைப்படங்களில் காட்டுவதால் தான், அதை நம்பி, அவர்களை கண்மூடித்தனமாக பின்பற்றும் ரசிகர்களும், ரசிகர் மன்றங்களும் உருவாகின்றன. நடிகர்களை அந்தந்த கதாபாத்திரங்களாக மட்டுமே பார்க்கத் தொடங்கினால், அனைத்தும் மாறும்" என்று கூறுகிறார் தியடோர் பாஸ்கர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு