தமிழ் சினிமாவில் என்றும் மறக்க முடியாத கவிஞராக , காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த கவிஞர் கண்ணதாசன் காலமாகி இன்றுடன் 44 வருடங்கள் பூர்த்தியாகின்றன.
1927ம் ஆண்டு ஜூன் மாதம் 24ம் தேதி பிறந்த கவிஞர் கண்ணதாசன், 1981ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி காலமானார்.
கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் இன்றும் மக்கள் மத்தியில் மறையா சொத்துக்களாக காணப்படுகின்றன.
அவ்வாறு மறையா சொத்துக்களாக காணப்படும் கவிஞர் கண்ணதாசனின் பாடல்கள் தொடர்பான தொகுப்பே இது.
இலங்கையின் பிரபல முன்னாள் வானொலி அறிவிப்பாளரான சந்துரு கண்ணதாசன் எழுதிய பாடல்களில், தனக்கு விருப்பமான 10 பாடல்களை பட்டியலிட்டுள்ளார்.
01. வசந்த மாளிகை – 'யாருக்காக'வசந்த மாளிகை திரைப்படம் 1972ம் ஆண்டு வெளியாகியிருந்தது. சிவாஜிகணேசன், வாணிஸ்ரீ உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் வெளியான யாருக்காக பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்ததுடன், பாடலுக்கான இசையை கே.வி.மகாதேவன் வழங்கி, பாடலை டி.எம்.சௌந்தர்ராஜன் பாடியிருந்தார்.
வலியையும் காதலையும் இணைக்கும் வரிகள், தியாகம் செய்யும் காதலரின் மனநிலை இந்த பாடலில் மிக அழகாக சொல்லப்பட்டுள்ளது.
02. ஏணிப்படிகள் – 'பூந்தேனில் கலந்து'ஏணிப்படிகள் திரைப்படமானது, 1979ம் ஆண்டு வெளிவந்தது. இந்த திரைப்படத்தில் சிவகுமார், ஷோபா, சத்தியராஜ், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் வரும் 'பூந்தேனில் கலந்து' என்ற பாடல் இந்த திரைப்படத்தில் இருவேறு இடங்களில் இடம்பிடித்துள்ளன. ஆண் பாடிய பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் பெண் பாடிய பாடலை பி.சுசிலா ஆகியோர் பாடியுள்ளனர். பாடலுக்கு கே.வி.மகாதேவன் இசையமைத்துள்ளார்.
இயற்கை, காதல், பெண்ணின் மிருதுவான மனம் மூன்றையும் ஒப்பிட்டு கலக்கும் மென்மையான காதல் பாடலாக இது அமைந்திருந்தது.
03. பாவமன்னிப்பு – 'காலங்களில் அவள் வசந்தம்'பாவமன்னிப்பு திரைப்படமானது 1961ம் ஆண்டு வெளிவந்தது. சிவாஜிகணேசன், சாவித்திரி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளிவந்த இந்த திரைப்படத்தில் ஒளிபரப்பான 'காலங்களில் அவள் வசந்தம்' என்ற பாடல் அனைவரது மனங்களில் இன்றும் ஒலிக்கும் ஒரு பாடலாகும். கவிஞர் கண்ணதாசனின் வரிகளில் உருவான இந்த பாடலை விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைக்க, பி.பி.ஸ்ரீனிவாஸ் பாடலை பாடியிருந்தார்.
இளமை காலத்தின் நினைவுகளுடன் மனித மனத்தின் ஆழத்தைக் காட்டுவதாக இந்த பாடல் அமைந்திருந்தது.
04. ஆண்டவன் கட்டளை – 'ஆறுமனமே ஆறு'ஆண்டவன் கட்டளை என்ற திரைப்படமானது, 1964ம் ஆண்டு வெளிவந்தது. சிவாஜிகணேசன், தேவிகா உள்ளிட்ட பலரது நடிப்பில் இந்த திரைப்படம் வெளிவந்திருந்தது. இந்த திரைப்படத்தில் ஒளிபரப்பான இந்த பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்ததுடன், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். டி.எம்.சௌந்தர்ராஜன் பாடியிருந்தார்.
இறை மீதான நம்பிக்கை, விதியை ஏற்றுக் கொள்ளுதல், தெய்வத்தின் ஆட்சியை ஏற்றுக் கொள்கின்ற மனிதனின் மனப்பாங்கு ஆகியவற்றை விளக்கும் விதமாக இந்த பாடல் உள்ளது.
05. கர்ணன் – 'உள்ளத்தில் நல்ல உள்ளம்'கர்ணன் திரைப்படம் 1964ம் ஆண்டு சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், தேவிகா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளிவந்த மிகப் பெரிய வெற்றித் திரைப்படமாகும். இந்த திரைப்படத்திலுள்ள உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார். பாடலுக்கு விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையமைத்திருந்தார். சீர்காழி கோவிந்தராஜன் இந்த பாடலை பாடியிருந்தார்.
நண்பனுக்காக உயிரையும் விடத் துணிந்த கர்ணனின் நட்பை விளக்கும் இந்த பாடலில், 'செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து' என்ற வரியைக் கேட்டு உருகாதவர் யாரும் இல்லை.
06. முள்ளும் மலரும் – 'செந்தாழம் பூவில்'1978ம் ஆண்டு வெளிவந்த முள்ளும் மலரும் திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஷோபா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தில் வெளிவந்த செந்தாழம் பூவில் என்ற பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்ததுடன், இளையராஜா இசையமைத்திருந்தார். கே.ஜே.யேசுதாஸ் இந்த பாடலை பாடியிருந்தார்.
ஒரு மலைச்சாலை, அதில் காற்றைக் கிழித்து செல்லும் ஒரு ஜீப் , சாலையோரத்திலிருந்து வரும் செந்தாழம் பூவின் வாசம். இந்த பாட்டைக் கேட்டால், நாம் எங்கே இருந்தாலும் அந்த மலைச்சாலைக்கு நம்மையும் அழைத்துச் சென்றுவிடும் திறன் இந்த வரிகளுக்கும் துள்ளல் இசைக்கும் இருக்கிறது.
07. தில்லுமுல்லு – 'ராகங்கள் 16'தில்லுமுல்லு திரைப்படம் 1981ம் ஆண்டு வெளிவந்தது. ரஜினிகாந்த், மாதவி, தேங்காய் சீனிவாசன் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளிவந்த மிகப் பெரிய வெற்றி திரைப்படமாகும். கவிஞர் கண்ணதாசனின் வரிகளில் உருவான இந்த பாடலை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்த பாடலை பாடியிருந்தார்.
காதலியின் வீட்டுக்கு இசை கற்றுக் கொடுப்பதற்காக செல்லும் இளைஞன், தன்னுடைய திறனை சற்று தற்பெருமையுடன் பாடத் தொடங்குவதோடு, இடையிடையே காதலியின் அழகையும் வர்ணிப்பது போன்று காதலையும் சேர்த்து கூறும் இந்த பாடல்.
08. சூர்ய காந்தி – 'பரமசிவன் கழுத்தில்'1973ம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் முத்துராமன், ஜெயலலிதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கவிஞர் கணண்தாசனின் வரிகளில் உருவான பரமசிவன் கழுத்தில் இருந்து என்ற பாடலுக்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க, டி.எம்.சௌந்தர்ராஜன் பாடியிருந்தார். இந்த பாடலில் கவிஞர் கண்ணதாசனே நடித்திருந்தமை விசேட அம்சமாகும்.
வாழ்வின் சூழலுக்கு ஏற்ப மனிதர்களின் நிலை எப்படி மாறும் என்பதை நகைச்சுவை உணர்வோடும், கூறும் பாடலாக இது அமைந்திருக்கிறது.
09. பாலும் பழமும் – 'நான் பேச நினைப்பதெல்லாம்'பாலும் பழமும் திரைப்படமானது 1961ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் சிவாஜிகணேசன், சரோஜா தேவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் உருவான நான் பேச நினைப்பதெல்லாம் பாடலுக்கான வரிகளுக்கு கவிஞர் கண்ணதாசனே சொந்தக்காரர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைக்க டி.எம்.சௌந்தர்ராஜன் மற்றும் பி.சுசிலா ஆகியோர் பாடியிருந்தனர்.
மனதால் இரண்டறக் கலந்த காதலர்களின் மொழியாகவே தொடங்கும் இந்த பாடல், இயல்பான காதல் உணர்ச்சியை எளிய சொற்களில் கூறி என்றுமே காதலுக்கான கீதமாக திகழ்கிறது.
10. மூன்றாம் பிறை – 'கண்ணே கலைமானே'மூன்றாம் பிறை திரைப்படமே கவிஞர் கண்ணதாசன் பணியாற்றிய இறுதித் திரைப்படமாகும். அதிலும் கண்ணே கலைமானே பாடலே அவர் எழுதிய இறுதிப் பாடல் என கூறப்படுகின்றது. இந்த திரைப்படத்தில் கமலஹாசன், ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 1982ம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது. இந்த பாடலுக்கான இசையை இளையராஜா வழங்கியிருந்தார். பாடலை கே.ஜே.யேசுதாஸ் பாடியிருந்தார். இந்த திரைப்படத்தில் இருவேறு இடங்களில் இந்த பாடல் ஒளிபரப்பாகியுள்ளது. கவிஞர் கண்ணதாசன் இந்த பாடலை எழுதியிருந்த போதிலும், அவரின் மறைவுக்கு பின்னரே இந்த திரைப்படம் வெளியாகியிருந்தது.
மனதால் குழந்தையாக மாறிவிட்ட காதலியை எப்படி கொஞ்சுவது. காதல், வலி, தியாகம் ,ஏக்கம் என எல்லா உணர்ச்சிகளையும் ஒரே பாடலில் கொட்டியிருப்பார் கண்ணதாசன்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு