மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஷ்வரன், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் காளமாடன் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
இந்த படம் தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.
எப்போதும் துரு துருவென இருக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வரும் துருவ் விக்ரம் இப்படத்தில் சற்று அழுத்தமான கதாபாத்திரத்தை தேர்தெடுத்துள்ளார்.
இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை படங்களைத் தொடர்ந்து மாரி செல்வராஜின் அடுத்த படமான பைசன் பற்றி ஊடக விமர்சனங்கள் சொல்வது என்ன?
"சாதி மோதலுக்கு நடுவே, ஒரு கபடி வீரரின் போராட்டமான வாழ்க்கை களமே இப்படத்தின் கதை" என தினத்தந்தி நாளிதழ் விமர்சனம் குறிப்பிட்டுள்ளது.
சிறுவயதில் இருந்து கபடி மீது மிகுந்த ஈர்ப்பு கொண்டிருப்பவர் கதாநாயகன் கிட்டன் (துருவ் விக்ரம்). இதை அறிந்துகொண்ட இவரின் பள்ளி ஆசிரியர் இவரை பள்ளியின் கபடி அணிக்குள் சேர்க்கிறார்.
இதற்கிடையில் இருபிரிவினர் இடையே ஏற்படும் சாதி மோதலால் ஊருக்குள் கலவரம் ஏற்படுகிறது. கிட்டன் மீது பல பழிகள் சுமத்தப்படுகிறது.
சொந்த குடும்பமும் இவருக்கு தடையாக நிற்கிறது. பல போராட்டங்களை எதிர்கொண்ட அவர் கபடி வீரராக மாறினாரா? தடைகளை கடந்து இந்திய அணிக்கு கிட்டன் தேர்வானாரா? என்பதே படத்தின் மீதி கதை.
பைசனில் மாரி செல்வராஜ் அழுத்தமான கதையைப் பேசியிருப்பதாக தினமணி நாளிதழ் பாராட்டியுள்ளது.
"1990-களில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சாதிக் கலவரங்களும், தீண்டாமைக் கொடுமைகளும் எந்த அளவிற்கு தலைவிரித்து ஆடின என்பதை காட்சிகளாகப் பார்க்கும்போது எத்தனை அநீதிகள் நிகழ்ந்திருக்கின்றன என்பதை தோலுரித்துக் காட்டுகிறார்.
ஒரு விளையாட்டு வீரன் தன் சொந்த ஊரை, சாதிகளை, அதிகாரங்களை, அதன் அரசியல்களை என எவ்வளவு விஷயங்களை கடந்து செல்ல வேண்டியிருக்கிறது என்பது உணர்வுப்பூர்வமாக காட்டியிருக்கிறார்" என தனது விமர்சனத்தில் தினமணி எழுதியுள்ளது.
"எளிமையான, எதார்த்தமான கதைக்களத்தில் மீண்டும் தனக்கே உரிய பாணியில் காட்சிகளை உணர்வுப்பூர்வமாக நகர்த்தி மாரி செல்வராஜ் கவனம் ஈர்த்துள்ளார்." என தினத்தந்தி நாளிதழ் விமர்சனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் தனது விமர்சனத்தில், "மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் இயக்குநரின் முத்திரையாகவே அமைந்துள்ளது. விலங்குகளை உருவகப்படுத்தும் இயக்குநரின் ஸ்டைல் இந்த படத்திலும் தொடர்கிறது." எனத் தெரிவித்துள்ளது.
"இதுவரை மாரி செல்வராஜ் இயக்கத்தில் வந்த படங்களில் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்த படமாக இருக்கும். அதே நேரத்தில் அரசியல் ரீதியாகவும் கூர்மையான கருத்தை சொல்லும் படம்." என தி இந்து நாளிதழ் விமர்சனம் கூறுகிறது.
"தனது சிறந்த படைப்பான வாழை படத்தை தொடர்ந்து, மாரி செர்வராஜ் ஒரு கொடிய உலகத்தை காட்டுகிறார். இங்கு வெறுப்பு ஆழமாக விதைக்கப்படுகிறது. இரண்டு பிரிவினர் இடையே ஒரு சாதாரண ஒன்று கூட வன்முறையைத் தூண்டும். இதை பயங்கரமாக காட்சிப்படுத்தியுள்ளார்." என தனது விமர்சனத்தில் எழுதியுள்ளது.
நடிகர் துருவ் விக்ரமின் நடிப்பு பற்றி, "சேட்டை' பிடித்த பையனாக வலம் வந்த துருவ் விக்ரம், இந்தமுறை அழுத்தமான கதாபாத்திரத்தில் கலங்கடித்துள்ளார். வலிகள் நிறைந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்தும் காட்டியுள்ளார். சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுத்துள்ளார்." என தினத்தந்தி நாளிதழ் பாராட்டியுள்ளது.
"நல்ல கதைகளை தேர்வு செய்யும் பட்சத்தில் இன்னும் பேசப்படுவார்"
"படத்தின் தலைப்பு பைசன். ஆனால் அதையும் தாண்டி, கிட்டன் ஒரு சண்டையில் ஈடுபடும்போதோ அல்லது கபடி போட்டியில் விளையாடும்போ அவரது உடல் மொழியில் உண்மையிலேயே 'பைசன்' உயிர் பெறுவதை காணமுடியும்" என டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் துருவ் விக்ரமின் நடிப்பை பாராட்டியுள்ளது.
"கிட்டானாக வரும் துருவ் விக்ரம் கவனம் பெறுகிறார். கண்களுக்குப் பின்னால் ஒரு தீப்பொறியை மறைத்து வைத்திருக்கும் நடிப்பு. துருவின் பயிற்சி பெற்ற அசைவுகளும் துணிச்சலான உடலமைப்பும், இவரை ஒரு ஒரு தொழில்முறை கபடி வீரராகவே காட்டியுள்ளது." என தி இந்து நாளிதழும் தனது விமர்சனத்தில் புகழ்ந்துள்ளது.
தினமணி தனது விமர்சனத்தில் "துருவுக்கு சிறந்த படமாக பைசன் அமைந்துள்ளது. இவர் தூத்துக்குடி இளைஞராகவே மாறியுள்ளார். படம் முடியும் வரை துருவ்வை ஒரு கபடி வீரராக மட்டுமே நினைக்க முடிகிறது." எனப் பாராட்டியுள்ளது.
இப்படத்தில் அனுபமா, ரஜிஷா விஜயனும் நடித்திருந்தனர்.
இவர்கள் பற்றி, "அனுபமாவை வித்தியாசமாக காட்டியிருந்தாலும், அவரது கதாபாத்திரத்திற்கு ஜீவன் கொடுத்திருக்கலாம், ரஜிஷா கிடைத்த கேப்பில் கிடா வெட்டியுள்ளார்" என தினத்தந்தி விமர்சித்துள்ளது.
"ரஜிஷா விஜயனுக்கு பெயர் சொல்லும் கதாபாத்திரம். சில காட்சிகளே இருந்தாலும் அனுபமா கவனல் ஈர்க்கத்தான் செய்கிறார்" என தினமணி குறிப்பிட்டுள்ளது.
மேலும் "பசுபதி தன் கதாபாத்திரத்தை முழுமையாக கட்டுக்குள் வைத்து சாதிப் பிரச்னைகள் நிறைந்த ஊருக்குள் உள்ளங்கைக்குள் வைத்து தன் குழந்தைகளை பாதுகாக்கும் தகப்பனாக அட்டகாசமான நடிப்பை கொடுத்திருக்கிறார். இப்படத்திற்காவது தேசிய விருது வரை அவர் செல்ல வேண்டும். அமீர், லால் கதாபாத்திரங்களை எழுதிய விதமும் அவர்கள் பேசும் வசனங்களும் கவனத்தை ஈர்க்கின்றன" என விமர்சனத்தில் எழுதியுள்ளது.
"எழில் அரசின் ஒளிப்பதிவும், பிரசன்னா கே.நிவாசின் இசையும் படத்தை தாங்கி பிடித்திருக்கிறது." என தினத்தந்தி விமர்சனம் குறிப்பிடுகிறது.
தினமணி விமர்சனத்தில், "ஒளிப்பதிவாளர் அரசும், இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னாவும் தூண்போல் பணியாற்றியுள்ளனர். இனி நிறைய வாய்ப்புகள் வரும் அளவிற்கு படம் முழுவதும் தன் இசையால் உயிர்ப்பை ஏற்படுத்தியுள்ளார் நிவாஸ்" எனக் குறிப்பிட்டுள்ளது.
"படத்தில் காட்டப்படும் கபடி போட்டிகள் அனைத்தும் கச்சிதமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒளிப்பதிவாளர் எழில் அரசு, கதாநாயகனின் கடுமையான வாழ்க்கையின் கிராமிய பின்னணியை அழுத்தமாக படம்பிடித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னாவின் இசை தனித்து நிற்கவில்லை, மாறாக இந்த கதையோடு ஒன்றிப்போகிறது." என டைம்ஸ் ஆப் இந்தியா விமர்சனம் கூறுகிறது.
"சாதிக் கலவரங்களுக்கான பின்னணி இசைகளும் தென்னாட்டு தேசத்தில், தீக்கொழுத்தி ஆகிய பாடல்களும் தனித்து நிற்கின்றன. ஒளிப்பதிவாளரையும், இசையமைப்பாளரையும் மாரி செல்வராஜ் முழுமையாக பயன்படுத்தியுள்ளார்" என தினமணி குறிப்பிட்டுள்ளது.
முதல் பாதி சுமாராக இருப்பதாக தினத்தந்தி நாளிதழ் விமர்சிக்கிறது.
"எனினும் சுவாரஸ்யமான இரண்டாம் பாதி காப்பாற்றி விட்டது. எதார்த்தமான காட்சிகள் என்றாலும், சில இடங்களில் திரைக்கதையின் போக்கு திசைமாறி விட்டதை உணரமுடிகிறது. ஆங்காங்கே சில 'உச்'கள் இருந்தாலும் பரபரப்பான காட்சிகள் அதை மறக்கடிக்கின்றன" என தனது விமர்சனத்தில் எழுதியுள்ளது.
"கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் என பைசன் மிக நீளமாக உள்ளது. மேலும் ஏராளமான கதாபாத்திரங்களைக் கொண்டுள்ளது. படத்தின் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படும் சில கதாபாத்திரங்கள், முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட கதாபாத்திரங்களின் அளவிற்கு நம் மனதில் நிற்கவில்லை. குறைகள் இருந்தாலும் இப்படம் அர்த்தமுள்ளதாகவும், லட்சியம் உடையதாகவும் இருக்கிறது" என டைம்ஸ் ஆப் இந்தியா விமர்சனம் கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு