அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு அமேசான் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் வர்த்தகம், கிளவுட் கம்ப்யூட்டிங், ஆன்லைன் விளம்பரம், டிஜிட்டல் ஸ்ட்ரிம்மிங், ஏஐ உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமேசன் நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தற்போது சர்வதேச அளவில் பல்வேறு துறைகளிலும் ஏஐ பயன்பாடு அதிகரித்து வருவதால் , வேலை இழப்புகள் அதிகரித்து வருகின்றன. இதற்கு அமேசானும் விதி விலக்கு இல்லை என்று சொல்வது போல, அந்த நிறுவனமும் தற்போது பணி நீக்கம் செய்ய தொடங்கியுள்ளது. எச்ஆர் பிரிவு ஊழியர்களுக்கு போன் அல்லது மெயிலில் பணி நீக்கம் தொடர்பான அறிவிப்புகளை அமேசான் நிறுவனம் கொடுத்து வருகிறது.
எச்.ஆர். பிரிவில் பணியாற்றுவோரில் 15 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய அமேசான் திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமின்றி பிற பிரிவுகளில் பணியாற்றுவோரையும் பணி நீக்கம் செய்ய அமேசான் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மொத்தம் எவ்வளவு பேர் வேலையை இழப்பார்கள் என்பது எண்ணிக்கை அடிப்படையில் இன்னும் தெரியவில்லை.