தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழை.. 58 சதவீதம் அதிக மழை பதிவு – தலைவர் அமுதா..
TV9 Tamil News October 20, 2025 03:48 PM

அக்டோபர் 19, 2025: வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தொடங்கியதிலிருந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. மேலும் அரபிக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதே சமயம் வரவிருக்கும் 21ஆம் தேதி வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த ஏழு நாட்களுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், சில மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

21 ஆம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி:

இந்த சூழலில், தென் மண்டல வானிலை மைய தலைவர் அமுதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தெற்கு அந்தமான் – தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழ்சுழற்சி நிலவுகிறது. இது 21ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும். மேலும் இது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

மேலும் படிக்க: அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள்.. பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..

இதனால் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். ஆழ்கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் 21ஆம் தேதி காலை முன்பே கரைக்கு திரும்ப வேண்டும். 24ஆம் தேதி வரை தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். மின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது மக்கள் பாதுகாப்புடன் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

58% அதிக மழை:

தீபாவளி பண்டிகையாகிய நாளை, அதாவது அக்டோபர்20, 2025 அன்று வடகிழக்கு தமிழகம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்துடன் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும் 18 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மேலும் படிக்க: பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்.. தீவிர விசாரணையில் காவல் துறையினர்..

அக்டோபர் 1, 2025 முதல் தற்போது வரை 14 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 58 சதவீதம் அதிகமாகும். குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் சுமார் 254 சதவீதம் மழை பதிவாகியுள்ளது” என தெரிவித்தார்.

18 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை:

அரபிக்கடலில் 20 அக்டோபர் 2025 அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக்கூடும் நிலையில், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.