ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையின் 20-வது கொண்டை ஊசி வளைவில் மண் சரிவு ஏற்பட்டதால் தமிழ்நாடு-கர்நாடகா இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக இன்று அதிகாலை கொண்டை ஊசி வளைவுகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. ஐந்து கொண்டை ஊசி வளைவுகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் கர்நாடக ஆகிய இரு மாநிலங்களுக்கும் செல்ல வேண்டிய போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆசனூரில் இருந்து ஒங்கல்வாடி செல்லும் சாலையில் புதிய பாலம் கட்டுவதற்காக தற்காலிகமாக தரைபாலம் ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பாலமும் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
இதேபோல் சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் செல்லும் சாலையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திம்பம் மலைப்பாதையில் தொடர்ந்து மிதமான மழை பெய்து கொண்டே இருப்பதால், நெடுஞ்சாலை துறை மற்றும் வனத்துறையினர் இன்னும் சற்று நேரத்தில் சாலையை சீரமைக்க வர உள்ளனர். இந்த போக்குவரத்து துவங்க இன்னும் 5 மணி நேரம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் முழுவதும் ஆசனூர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து கர்நாடக செல்லும் வாகனங்கள் பண்ணாரி சோதனை சாவடியில் நிறுத்தப்பட்டுள்ளது.