Crime: அதிவேகமாக சென்றவரை தட்டிக்கேட்ட நபரின் தந்தை கொலை!
TV9 Tamil News October 24, 2025 05:48 PM

மயிலாடுதுறை, அக்டோபர் 24: மயிலாடுதுறை மாவட்டத்தில் மது போதையில் அதிகமாக அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றதை தட்டிக்கேட்ட நபரின் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் ஆனைக்கோவில் கிராமம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள செட்டியார் தெருவை சேர்ந்த அமிர்தலிங்கம்  தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு சுபாஷ் என்ற மகன் உள்ளான். இவர்களது வீட்டிற்கு அருகில் ராசையன் என்பவரது மகன் ராஜமூர்த்தி வசித்து வருகிறார். நேற்று முன்தினம் (அக்டோபர் 22)  அந்தப் பகுதியின் வழியாக தனது இருசக்கர வாகனத்தில் மது போதையில் அதிவேகமாக ராஜமூர்த்தி சென்றுள்ளார்.

அப்போது சாலையில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதை கண்ட சுபாஷ் ராஜமூர்த்தியை தடுத்து நிறுத்தி ஏன் இப்படி அதிவேகமாக சென்று கொண்டிருக்கிறாய்?, குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும்போது ஏதாவது விபரீதம் நிகழ்ந்துவிட்டால் என்ன செய்வது? என கேள்வி எழுப்பியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

Also Read: வாலாஜா அருகே அதிர்ச்சி சம்பவம்.. 6 வயது மகனை கொன்று தந்தை தற்கொலை!

இதில் கடும் ஆத்திரமடைந்த ராஜமூர்த்தி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சுபாஷின் கையில் குத்தி கிழித்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத அவர் உடனடியாக இந்த சம்பவம் குறித்து கிராம பஞ்சாயத்தில் புகார்  தெரிவிப்பதாக கூறி அங்கிருந்து சென்று விட்டார். இதனைக் கேட்டு மேலும் ஆத்திரமடைந்த ராஜமூர்த்தி மிகுந்த மதுபோதையில் இருந்ததால் வீட்டின் அருகே சாலை ஓரத்தில் அமர்ந்திருந்த சுபாஷின் தந்தை அமிர்தலிங்கத்தை நோக்கி சென்று அவரது வலது பக்க மார்பில் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அமிர்தலிங்கத்தை அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக திருக்கடையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு முதலுதவி சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Also Read: தன் மகளை விட அதிக மதிப்பெண்;. எலி பேஸ்ட் வைத்து சிறுவனை கொலை செய்த தாய்க்கு ஆயுள் தண்டனை

உடனடியாக இந்த சம்பவம் குறித்து பொறையார் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் உயிரிழந்த அமிர்தலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் மதுபோதையில் இருந்த ராஜமூர்த்தியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மேலும் அசம்பாவிதம் நிகழாமல் இருப்பதற்காக மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆனைக்கோவில் கிராமத்திற்கு நேரில் வந்து கொலை நடந்த இடத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் பதற்றத்தை தணிக்க அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.