அதிரடியாகப் பறிக்கப்படும் வேலைகள், அடித்தாடும் ஏ.ஐ, ரோபோ... இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டுமா அரசுகள்?
Vikatan October 24, 2025 05:48 PM

சில மாதங்களுக்கு முன் டி.சி.எஸ் நிறுவனம், 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது. ஏற்கெனவே, புதுப்புது தொழில்நுட்பங்கள், ஏ.ஐ வருகை எல்லாம் ‘மனிதர்களிடமிருந்து வேலைகளைப் பறித்துவிடும்’ என்று பேசிக் கெண்டிருக்கும் சூழலில், இப்படி அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டது, பேசுபொருளானது.

இத்தகைய சூழலில், இன்ஃபோசிஸ் நிறுவனம் 12,000 பேரை சமீபத்தில் வேலைக்கு எடுத்திருப்பது, நம்பிக்கையை ஊட்டியது. டெக் மஹிந்திரா, விப்ரோ, ஹெச்.சி.எல் போன்ற நிறுவனங்களும் கணிசமான எண்ணிக்கையில் பணியாளர் களை வேலைக்கு எடுத்துள்ளன. மொத்தமாக, ஐ.டி துறையில் புதிதாக 20,000 வேலைவாய்ப்புகள் வந்திருக்கின்றன என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.

இந்த சந்தோஷத்துக்கு வேட்டு வைக்கும் வகையில், ‘இன்னும் ஏழு ஆண்டுகளில் சுமார் 5 லட்சம் வேலைவாய்ப்புகளை ரோபோக்கள் மூலம் மாற்றம் செய்யப் போகிறோம்’ என்று மீண்டும் அதிர வைத்துள்ளது, அமேசான் நிறுவனம். அமேசானில் தற்போது 12 லட்சம் பேர் பணிபுரிகிறார்கள். இதில் கிட்டத்தட்ட 40% வேலைவாய்ப்புகளை ரோபோக்கள் தட்டிச் செல்லப்போகின்றன.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கத் தொழிலதிபர் எலான் மஸ்க், ‘இது தவிர்க்க முடியாதது. ஏ.ஐ-யும், ரோபோக்களும் இருக்கும்போது மனிதர்கள் ஏன் வேலை பார்க்க வேண்டும்’ என்று கேட்டு, பதற்றத்தைக் கூடுதலாக்கியுள்ளார்.

ஐ.டி துறை சார்ந்த வல்லுநர்கள், ‘ஐ.டி நிறுவனங்களில் நடுத்தர நிலையில் உள்ள ஊழியர்கள் மத்தியில் மறுசீரமைப்புகள் தீவிரமாக நடந்துவருகின்றன. ஊழியர்களின் திறன், மறுமதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. மாறிவரும் சூழலுக்கு ஏற்ப, சந்தையின் தேவைகளும், தொழில் ஒப்பந்தங்களும் மாறிவருகின்றன. எனவே, வேலைக்கு ஆட்கள் எடுப்பதும், வேலையை விட்டு நீக்குவதும் இனி மாறி மாறி நடக்கும்’ என்று எச்சரிக்கிறார்கள்.

இதுஒருபுறமிருக்க, ‘ஏ.ஐ-தான் இனி எதிர்காலம்’ என்று இளைஞர்கள் பலர் அது சார்ந்த படிப்புகளில் தேடிப்பிடித்து சேர்ந்து வருகிறார்கள். இந்நிலையில், ‘ஏ.ஐ அல்ல... க்வான்டம், ஏ.ஜி.ஐ-தான் (AGI - Artificial General Intelligence) இனி எதிர்காலம்’ என்று அதற்கும்கூட அதிரடி அப்டேட் வந்து கொண்டேயிருக்கிறது.

இப்படியாக சந்தையின் தேவையும், நிறுவனங்களின் நடவடிக்கைகளும் ஒவ்வொரு நாளும் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கின்றன என்பது இளைஞர் களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஏற்கெனவே, படித்த படிப்புக்கு வேலை இல்லாமல் லட்சக்கணக்கானோர், கிக் எகானமி (Gig Economy) எனச் சொல்லப்படும் டெலிவரி, குயிக் காமர்ஸ் வேலைகளைச் செய்துவருகிறார்கள். நல்ல வேலையில் உள்ளவர்களும், எப்போது வேலை பறிபோகுமோ என்ற கவலையில் இருக்கிறார்கள். இவற்றையெல்லாம் எப்படி சமாளிக்கப் போகிறது இந்திய ஐ.டி துறை?

விடை தேடுவதும், இளைஞர்களைச் சரியாக வழிநடத்தி நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதும் மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஐ.டி தொழில்துறையினரின் கையில்தான் உள்ளது. ஆம், அரசுகள் தீவிரமாகச் சிந்திக்க வேண்டிய நேரம் இது!

- ஆசிரியர்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.