தற்போது பாகிஸ்தான் இராணுவம் இரட்டைச் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. ஒரு பக்கம், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தெஹ்ரீக்-ஏ-தாலிபான் பாகிஸ்தான் (TTP) இராணுவத்திற்கு எதிராகப் போரிடுகிறது. மறுபுறம், பலூசிஸ்தானில் உள்ள ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், பலூச் தலைவர் மீர் யார் பலூச் என்பவர் பாகிஸ்தான் மீது மிகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். பாகிஸ்தானிய இராணுவத் தலைமை ஒரு ‘இரட்டை வேடம்’ (Double Game) போடுவதாக அவர் வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், பாகிஸ்தான் இஸ்லாமிய ஒற்றுமைக்கு எதிராகச் செயல்படுவதாகவும், இஸ்லாமியரல்லாத சக்திகளுக்கு ‘ஏஜென்ட்’ ஆகச் செயல்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் பஞ்சாபி ஜெனரல்கள் மேற்கத்திய நாடுகளிடம் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடுவதாகக் காட்டிக்கொள்கின்றனர். ஆனால், அதே சமயம் இரகசியமாகத் தீவிரவாத குழுக்களுடன் நெருங்கிய தொடர்பை வைத்திருக்கிறார்கள் என்று மீர் யார் பலூச் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்துடன் போராடுவதற்குப் பதிலாக, பாகிஸ்தானிய ஜெனரல்கள் பில்லியன் கணக்கான டாலர் இராணுவ நிதியை அபகரித்து, தங்கள் அதிகாரத்தைக் காப்பாற்றவும், தெற்கில் நடக்கும் மறைமுகப் போர்களுக்கு நிதி வழங்கவும் பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார ரீதியாகவும் பாகிஸ்தான் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. 26 டிரில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வெளிநாட்டுக் கடனில் மூழ்கியுள்ள அதன் பொருளாதாரம், முழுவதுமாக சர்வதேச கடன்களைச் சார்ந்திருக்கிறது. இந்தச் சூழலில், உலக நாடுகள் பாகிஸ்தானுடனான உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டும் என்றும், அந்த நாட்டின் சர்வாதிகார இராணுவத்திற்கு நிதி வழங்குவதை நிறுத்த வேண்டும் என்றும் பலூச் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், வளங்கள் நிறைந்த பலூசிஸ்தானை ஒரு குடியரசாக அங்கீகரித்து, அதில் முதலீடு செய்ய வேண்டும் என்றும் அவர் உலக சமூகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.