கோவை அடுத்த தாளியூர் பகுதியில், அதிமுக முன்னாள் கவுன்சிலரின் மனைவி, அவரது வீட்டு ஓட்டுநரால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை பன்னிமடை ஊராட்சி முன்னாள் தலைவரும், அதிமுகவின் முன்னாள் கவுன்சிலருமான கவிசரவணகுமார் என்பவரின் 47 வயது மனைவி மகேஸ்வரிதான் இவ்வாறு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இவர்களது வீட்டில் சுரேஷ் (45 வயது) என்பவர் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.

இன்று காலை, கவிசரவணகுமார் வெளியே சென்றிருந்த நிலையில், குழந்தைகளும் பள்ளி, கல்லூரிக்குச் சென்றிருந்தனர்.வீட்டில் தனியாக இருந்த மகேஸ்வரியை, ஓட்டுநர் சுரேஷ் திடீரெனக் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார். கொலையைச் செய்த பிறகு, ஓட்டுநர் சுரேஷ் அங்கிருந்து வடவள்ளி காவல் நிலையத்திற்குச் சென்று சரண் அடைந்துள்ளார்.
ஓட்டுநர் சரண் அடைந்தது குறித்துத் தகவல் அறிந்த தடாகம் போலீசார் உடனடியாகச் சம்பவ இடமான தாளியூருக்கு விரைந்து சென்று, உயிரிழந்து கிடந்த மகேஸ்வரியின் உடலைக் கைப்பற்றினர். இந்தக் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தக் கொலைச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வீட்டின் முன்பு கூடியதால், அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.