அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;-
பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது. எஸ்.ஐ.ஆர்.-ஐ தமிழகத்தை சேர்ந்த அலுவலர்கள்தான் மேற்கொண்டு வருகிறார்கள். எஸ்.ஐ.ஆர். குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை. தேர்தலுக்கு இன்னும் காலம் உள்ளது. எங்களோடு சில கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். கூட்டணி குறித்து நாங்கள் எந்த முடிவையும் எடுக்கவில்லை. 2026 தேர்தலில் தி.மு.க - த.வெ.க இடையேதான் கடுமையான போட்டி இருக்கும் என்று நான் நினைக்கிறேன். நாட்டின் நிலவரங்கள், சர்வே நிலவரங்களை பொறுத்து, நடுநிலையாக நான் இதை கூறுகிறேன். இதுதான் எதார்த்தம்.
பழனிசாமி எங்களுக்கு துரோகம் செய்துள்ளார். எனவே, எங்களை சந்திக்க அவர் தயங்குவார். எங்களை பொறுத்தவரை துரோகத்தை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் வேட்பாளராக இருக்கும் கூட்டணிக்கு நாங்கள் செல்ல மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.