பீஹார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வரலாற்று வெற்றியை மீண்டும் பதிவு செய்துள்ளது. இந்த சட்டமன்ற தேர்தலில் நம்பிக்கை அளித்து வாக்களித்த மக்களுக்கு பிரதமர் மோடி, நிதிஷ்குமார் மற்றும் அமித்ஷா உள்ளிட்ட அனைவரும் நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், மகாகத்பந்தன் கூட்டணியில் நாங்கள் முதன்மையானவர்கள் கிடையாது என்று பீஹார் தேர்தல் தோல்வி குறித்து காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் கருத்து கூறியுள்ளார். தற்போது பீஹார் தோல்விக்கு யார் காரணம் என்ற பேச்சுகளும் இண்டி கூட்டணியில் எழ ஆரம்பித்துள்ள நிலையில், எஸ்.ஐ.ஆர் மாற்று வாக்கு திருட்டு காரணமென எதிர்க்கட்சிகள் சப்பைக்கட்டு கட்ட ஆரம்பித்துள்ளன. இதனையடுத்து, காங்கிரஸ் எம்.பி., சசிதரூர் கூறியுள்ளதாவது;

''தோல்விக்கு என்ன காரணம் என்பதை கட்சித் தலைமை ஆய்வு செய்ய வேண்டும். எங்கள் கூட்டணியின் முதன்மையான கட்சி ராஷ்டிரிய ஜனதா தளம் தான். நாங்கள் இல்லை. எனவே ஆர்ஜேடியும் தனது செயல்பாடுகளை கவனமாக ஆராய வேண்டும்.
தோல்விக்கு காரணம் என்ன என்பதை ஆராய கட்சிக்கு முழுமையான பொறுப்பு இருக்கிறது. இருப்பினும் கூட்டணியில் நாங்கள் முதன்மையானவர்கள் அல்ல. தேர்தல் பிரசாரத்தின் போது என்னை கட்சி அழைக்கவே இல்லை. எனவே தனிப்பட்ட முறையில் என்னால் வேறு எதுவும் கூறமுடியாது.
தேர்தலுக்கு முன்பாக இது போன்ற வெகுமதிகள் (மகளிருக்கு ரூ.10,000 தந்தது) வழங்கும் போக்குகள் உள்ளன. எது, எப்படி இருந்தாலும் முடிவுகளை விரிவாக பகுப்பாய்வு செய்வோம்.''என்று
சசிதரூர் கூறியுள்ளார்.