திருப்போரூரில் கீழே விழுந்து நொறுங்கிய பயிற்சி விமானத்தின் விமானி பாராசூட்டில் குதித்து உயிர் தப்பினார். விமானம் விழுந்த இடத்தை ஓட்டி தொழிற்சாலையில் வேலை செய்த 50 பேரும் உயிர்தப்பினர்.
சென்னை தாம்பரத்தில் உள்ள விமானப்படை பயிற்சி நிலையத்தில் இருந்து நேற்று பகல் 1:30 மணிக்கு பிளேட்டஸ் பி.சி-7 என்ற பெயர் உடைய ஒரு பயிற்சி விமானம் புறப்பட்டது. இவை 1330 கிலோ எடையுடன் 412 கி.மீ., வேகத்தில் பறக்கும் திறன் கொண்ட, 32 அடி நீளமுடைய விமானமாகும். இதில், இரண்டு பேர் பயணிக்க முடியும். ஆனால் நேற்று ஒருவர் மட்டும்தான் பயணித்தார். இந்த விமானத்தை விமானி சுபம்.30, என்பவர் இயக்கினார். விமானம் தாம்பரத்தை தாண்டி திருப்போரூர் பகுதியில் நேற்று பகல் 2:00 மணியளவில் வான்வெளியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. பகல் 2:15 மணியளவில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து விமானத்தை இயக்கிய விமானி சுபம் திருப்போரூர் புறவழிச் சாலையில் இறக்க முயற்சித்ததாக தெரிகிறது. அதற்குள் விமானத்தில் புகை கிளம்பியுள்ளதாக தெரிகிறது. எனவே, விபத்து ஏற்படுவதற்கு முன் உடனே விமானத்தை ஆள் நடமாட்டம் இல்லாத திருப்போரூர் பக்கிங்காம் கால்வாய் பகுதிக்கு செல்லும் வகையில் இயக்கி விட்டு, அதில் இருந்து விமானி சுபம் பாராசூட்டில் குதித்தார். இதனால் பயங்கர சத்ததத்துடன் வானில் தாறுமாராக பறந்து இயங்கிய விமானம் திருப்போரூர் - நெம்மேலி சாலையில் உள்ள தனியார் உப்பு பேக்கிங் செய்யும் தொழிற்சாலையின் பின்பக்கத்தில் சேற்றில் விழுந்து 5 அடி ஆழத்தில் புகுந்தது. உடனே வெடித்து விமான பாகங்கள் சிதறியது. அப்போது சேறு முழுவதும் கம்பெனி ஒருபக்கம் சுவற்றில் மீது 100 அடி உயரம் வரை தெளித்தது. தொழிற்சாலையின் ஒரு பகுதியும் சேதமானது.
தொழிற்சாலையின் உள்ளே வேலை செய்துக் கொண்டிருந்த 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளியே வந்து பார்த்தனர். விமானம், நொறுங்கியதால் விமானத்தின் எந்த அடையாளமும் இல்லாமல் அதன் பாகங்கள் சிதறிக்கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் தொழிற்சாலையை விட்டு சாலைக்கு ஓடினர். தகவல் அறிந்து திருப்போரூர் போலீசார், தீயணைப்பு துறையினர், தாசில்தார் சரவணன் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் அங்கு வந்து வேடிக்கை பார்க்க வந்தவர்களை அப்புறப்படுத்தினர். இதனிடையே திருப்போரூர் புறவழிச்சாலையில் தண்டலம் பகுதியில் பாராசூட் மூலம் குதித்த விமானி சுபம் என்பவரை பொதுமக்கள் மீட்க முயற்சித்தனர். அவருக்கு தமிழ் சரியாக தெரியாததால் தன்னை யாரும் தொல்லை செய்ய வேண்டாம் என்றும், தன்னைக் காப்பாற்ற விமானப்படை ஏர் ஆம்புலன்ஸ் வருவார்கள் என்றும் ஆங்கிலத்தில் கூறினார்.

இதையடுத்து தண்டலம் கிராம இளைஞர்கள் அவர் பயன்படுத்திய பாராசூட்டை குடை போல் விரித்து அவருக்கு நிழலை ஏற்படுத்தினர். இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப் பட்டது. ஆனால், அந்த ஆம்புலன்சில் ஏற விமானி மறுத்து விட்டார். தனக்கு விமானப் படை வீரர்கள் வந்து உதவுவார்கள் என்று கூறி சாலையின் நடுவிலேயே படுத்த நிலையில் இருந்தார். இதைத் தொடர்ந்து ஒரு சிறிய ரக விமானம் வந்து வானில் வட்டமடித்து விமானம் விழுந்த இடத்தை பார்வையிட்டு சென்றது.இதையடுத்து ஹெலிகாப்டரில் வந்த இரு விமானப்படை வீரர்கள் வானில் வட்டமிட்டு பின்னர் விமானி விழுந்து கிடந்த புறவழிச்சாலையின் நடுவில் ஹெலிகாப்டரை தரை இறக்கினர். பின்னர் விமானத்தில் இருந்து ஸ்ட்ரெச்சர் கொண்டு வரப்பட்டு விமானி சுபம் தாம்பரம் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.மேல் சிகிச்சைக்காக பரங்கிமலையில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
முன்னதாக புறவழிச்சாலையில் பாராசூட்டில் இறங்கிய விமானியை விமானப் படையினர் மீட்டுச் சென்றவுடன் அவர் பயன்படுத்திய பாராசூட்டை திருப்போரூர் போலீசார் எடுத்துச் சென்றனர். தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு விமானப்படையினர் விமானம் விழுந்த இடத்திற்கு 30 க்கும் மேற்பட்டோர் வந்தனர். சுற்றி 50 மீட்டர் தூரத்திற்கு தடுப்பு கயிறு கட்டினர். சிதறிய பாகங்களை விமானப்படையினர் சேகரித்தனர். வீடியோ, புகைப்படம் எடுத்தனர். மற்ற ஆய்வு பணி ஏதும் அவர்கள் செய்யவில்லை. விபத்து நடந்த இடத்தை தங்கள் பாதுகாப்பு வளைத்திற்கு கொண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று டெல்லியிலிருந்து விமானப்படை குழுவினர் வந்த பிறகுதான் ஆய்வு, விசாரணை பணியை மேற்கொள்வார்கள் என தெரிகிறது.