பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் கண்டு பயந்த தாய் ஒருவர், தனது மகளை மூன்று ஆண்டுகளாக வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் உள்ளேயே அடைத்து வைத்திருந்த கொடுமை ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் நடந்துள்ளது.
ஸ்ரீகாகுளம் மாவட்டம், இச்சாபுரத்தில் வசித்து வந்த பாக்கியலட்சுமி, கணவர் இறந்த பிறகு மகள் மவுனிகாவுடன் வசித்து வந்தார். பள்ளிப் படிப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்த மவுனிகா, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பருவ வயதை எட்டியுள்ளார்.
பருவ வயதை எட்டிய பிறகு, வெளியில் நடக்கும் வன்முறைகளைக் கண்டு பயந்த பாக்கியலட்சுமி, தனது மகளைப் பள்ளிக்கு அனுப்புவதைத் தவிர்த்து, வீட்டிற்குள்ளேயே பூட்டி வைத்துள்ளார். ஒரு நாள், இரு நாள் அல்ல; தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மவுனிகா வீட்டிற்குள் அடைக்கப்பட்டிருந்தார்.
பாக்கியலட்சுமி வெளியூர் செல்லும்போதெல்லாம், வீட்டின் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு, மகளை உள்ளே வைத்துப் பூட்டிச் செல்வார். இதனால், இருட்டுக்குள்ளேயே அச்சிறுமி தவித்துள்ளார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் கேட்டபோது, பாக்கியலட்சுமி அவர்களைக் கடுமையாகத் திட்டியுள்ளார்.
இந்த விஷயம் அங்கன்வாடி ஊழியர் மூலம் காவல்துறைக்குத் தெரியவந்தது. பாக்கியலட்சுமியின் வீட்டிற்குச் சென்ற போலீஸார், கதவைத் தட்டியபோது அவர் திறக்கவில்லை. இதனால், அதிகாரி ஒருவர் சர்வேயர் எனக் கூறிச் சென்றதும், பாக்கியலட்சுமி கதவைத் திறந்தார். உடனே உள்ளே நுழைந்த போலீஸார், அச்சிறுமியை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும், அந்தத் தாய்க்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். பெண்கள் பாதுகாப்பு குறித்த அச்சம் இப்படி ஒரு கொடூர செயலுக்குத் தாயைத் தூண்டியிருப்பது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.