Getty Images
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் முடிவடைந்து, வரைவு வாக்காளர் பட்டியலும் நேற்று (டிசம்பர் 19) வெளியாகிவிட்டது.
மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்டங்களுக்கான தேர்தல் அதிகாரிகள் வரைவுப் பட்டியலை வெளியிட, மாநிலம் முழுமைக்குமான பட்டியலை தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் நேற்று மாலை வெளியிட்டார்.
அதன்படி, தமிழ்நாட்டில் மொத்தமாக சுமார் 1 கோடி வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், தங்களது பெயர் இருக்கிறதா என்பதை உறுதி செய்வது எப்படி, பெயர் நீக்கப்பட்டவர்கள் அடுத்து என்ன செய்வது, சேர்க்கப்பட்ட பெயர்களின் விவரங்களில் பிழை இருந்தால் எப்படித் திருத்துவது, வெளியூர்களில் இருப்பவர்களுடைய நிலை என்ன, வீடற்ற நபர்கள் வாக்களிக்கும் தகுதி இருந்தும் முகவரியின்றி இருந்தால் என்ன செய்வது, எனப் பல கேள்விகள் மக்களிடையே காணப்படுகின்றன.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் அடிப்படையில், அந்தக் கேள்விகளுக்கான பதில்களை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம்.
உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை உறுதி செய்வது எப்படி?கேள்வி: வரைவுப் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்வது எப்படி?
பதில்: ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும், வரைவுப் பட்டியலின் அச்சிடப்பட்ட பிரதிகள் மற்றும் டிஜிட்டல் பிரதிகள் வழங்கப்பட்டுள்ளன. அவை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அதோடு, அவை இணையதளத்திலும் வெளியிடப்பட்டு இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அவற்றின் மூலம், தங்களது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை ஒருவர் தெரிந்துகொள்ள முடியும்.
அதாவது, ஒருவர் தமது வாக்குச்சாவடியின் வாக்காளர் பட்டியலை இணையத்தில் பதிவிறக்கம் செய்தும் தங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள முடியும்.
அதற்கு, https://voters.eci.gov.in/download-eroll என்ற இணையதளத்தில் மாவட்டம் மற்றும் தொகுதியை உள்ளிட்டு, உங்களது வாக்குச்சாவடிக்கான வாக்காளர் பட்டியலைத் தேர்வு செய்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். அந்தப் பட்டியலை வைத்து உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளலாம்.
Getty Images வாக்குச்சாவடி விவரங்களை உறுதி செய்துகொள்வது எப்படி?
கேள்வி: வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருப்பதால், பலருக்கும் வாக்குச்சாவடி மாறியிருக்க வாய்ப்புகள் உள்ளன. இந்தச் சூழலில் ஒருவர் தனது வாக்குச்சாவடி விவரங்களை உறுதி செய்துகொள்வது எப்படி?
பதில்: பல பேருக்கு வாக்குச்சாவடி மாறியுள்ளதால், தங்களது வாக்குச்சாவடி எது என்பதைத் தெரிந்துகொண்ட பிறகு, அந்த வாக்குச்சாவடியின் வாக்காளர் பட்டியலில் பெயரைத் தேடுவது வசதியாக இருக்கும்.
வாக்குச்சாவடி விவரங்களைத் தெரிந்துகொள்ள, தேர்தல் ஆணையத்தின் voter helpline செயலியில் உங்கள் எபிக் எண்ணை உள்ளிட்டு, "வாக்குச்சாவடி எண், வரிசை எண்", அதாவது எந்த வாக்குச்சாவடியில் எந்த வரிசையில் உங்கள் பெயர் உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
அதன் பிறகு, அந்த வாக்குச்சாவடிக்கு உரிய வாக்காளர் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து பெயர் மற்றும் இதர விவரங்களை உறுதி செய்துகொள்ளலாம்.
ஒருவேளை, இணையத்தில் வாக்காளர் பட்டியலைப் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டால் வாக்குசாவடி நிலை அலுவலர் மற்றும் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு உங்கள் பெயர் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.
மேலும், நீக்கப்பட்டவர்களின் பட்டியல், அதற்கான காரணத்துடன் பொதுமக்கள் பார்வைக்கு பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் அறிவிப்புப் பலகையில் காட்சிப்படுத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறுகிறது.
Getty Images பெயர் நீக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாதா?
கேள்வி: என்னென்ன காரணங்களுக்காக ஒருவரது பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன?
பதில்: எஸ்.ஐ.ஆர் பணிகள் முடிவடைந்து தற்போது வெளியாகியுள்ள இந்த வரைவுப் பட்டியலில், 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
அதுபோக, தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, உயிரிழந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள் அல்லது குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள், வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்திருப்பவர்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் வரக்கூடிய 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள தகவலின்படி, ஒருவர் பிற மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்தில் வாக்காளர்களாக இருப்பது, நேரில் காணப்படாதது, டிசம்பர் 14-ஆம் தேதிக்குள் எஸ்.ஐ.ஆர் படிவத்தைச் சமர்ப்பிக்காதது, வேறு ஏதேனும் காரணங்களால் வாக்காளர்களாகப் பதிவு செய்ய விரும்பாதது ஆகிய காரணங்களாலும் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
கேள்வி: வரைவுப் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாதா?
பதில்: அப்படியில்லை. வரைவு வாக்காளர் பட்டியல் என்பது இறுதிப் பட்டியல் அல்ல. இது, வாக்காளர்கள் தங்கள் விவரங்களைச் சரிபார்த்து, அதிலுள்ள தவறுகளைச் சுட்டிக்காட்ட தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட ஒரு தற்காலிகப் பட்டியல்.
தங்களது உரிமைகளைக் கோருவது, பெயர் நீக்கம் குறித்த ஆட்சேபனைகளைத் தெரிவிப்பவது ஆகியவற்றுக்கான காலத்தின்போது வாக்காளர்கள் கீழ்காண்பவற்றைச் செய்ய வேண்டும்:
இந்தச் செயல்முறை முழுமையாக முடிந்து, அனைத்து உரிமைகோரல்களும் சரிபார்க்கப்பட்ட பின்னரே இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரியில் வெளியிடப்படும்.
இந்த வரைவுப் பட்டியலில் இருக்கும் தவறுகளை ஒரு வாக்காளர் சரிபார்க்கத் தவறினாலோ அல்லது சரியான நேரத்தில் உரிமைகோரலைச் சமர்ப்பிக்கத் தவறினாலோ, அந்தத் தவறு இறுதிப் பட்டியலிலும் தொடரக்கூடும். அது வாக்களிக்கும் உரிமையைப் பாதிக்கலாம்.
BBC பெயர் நீக்கப்பட்டவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்?
கேள்வி: முதல் கட்ட எஸ்.ஐ.ஆர் பணியின்போது கணக்கீட்டுப் படிவம் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
பதில்: வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் முன்பாக இருந்த கடைசி வாக்காளர் பட்டியல் அடிப்படையில் பார்த்தால், சில நூறு படிவங்கள் தவிர தோராயமாக அனைத்து கணக்கீட்டுப் படிவங்களையும் விநியோகித்து விட்டதாக தேர்தல் ஆணையம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.
அதையும் மீறி படிவம் கிடைக்கப் பெறாமல் போன காரணத்தால் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள், படிவம் 6-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
அந்தப் படிவத்தை தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம் அல்லது தங்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலரைத் தொடர்புகொண்டு பெறலாம்.
கேள்வி: பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும்?
பதில்: தற்போது வெளியாகியுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வாக்காளர்கள், காலக்கெடுவுக்குள் கணக்கீட்டுப் படிவத்தைச் சமர்ப்பிக்காத வாக்காளர்கள், தங்களது பெயரை படிவம் 6-ஐ சமர்ப்பிப்பதன் மூலம் சேர்த்துக் கொள்ளலாம்.
அதேபோல, புதிய வாக்காளர்கள், கணக்கீட்டுப் படிவம் கிடைக்காதவர்கள், கிடைத்தும் சமர்ப்பிக்காதவர்கள் என அனைவருமே படிவம் 6-ஐ பயன்படுத்தி தங்களது பெயரைச் சேர்த்துக்கொள்ள முடியும்.
கேள்வி: வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்காதது பெயர் நீக்கத்திற்கு ஒரு காரணமா?
பதில்: தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்டுள்ள தகவலின்படி, வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைப்பதென்பது முற்றிலும் தன்னார்வ அடிப்படையிலானது, கட்டாயமில்லை. எனவே, அது வரைவுப் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுவதற்கான ஒரு காரணங்களில் ஒன்றல்ல.
பெயர் விடுபடுவதற்கு, இரட்டைப் பதிவுகள், முழுமையற்ற முகவரி விவரங்கள், வாக்காளரின் மரணம், இடப்பெயர்வு, சரிபார்ப்பின்போது வாக்காளர் கண்டறியப்படாதது போன்ற காரணங்கள் உள்ளன.
மற்றபடி, ஆதார் இணைக்கப்படாத காரணத்திற்காக ஒரு வாக்காளரை பட்டியலில் இருந்து நீக்க முடியாது.
BBC யாரெல்லாம் ஆட்சேபனை தெரிவிக்கலாம்?
கேள்வி: குறிப்பிட்ட முகவரியில் இருந்து இடம் மாறிச் சென்றவர்கள் என்ன செய்ய வேண்டும்?
பதில்: ஒரு குறிப்பிட்ட முகவரியில் இல்லாமல் வேறு இடத்திற்கு மாறிச் சென்றுவிட்ட காரணத்தால் பெயர் நீக்கப்பட்டவர்கள், தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு படிவம் 8-ஐ பூர்த்தி செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை, உங்களது புதிய வசிப்பிடம் அமைந்துள்ள தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
கேள்வி: பெயர் நீக்கம், சேர்த்தல் குறித்து யாரெல்லாம் ஆட்சேபனை தெரிவிக்கலாம்? எப்படி தெரிவிப்பது?
பதில்: ஒருவேளை பெயர் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் சரியில்லை என்றோ அல்லது சேர்க்கப்பட்ட பெயர்கள் குறித்தோ ஆட்சேபனைகள் இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் அதற்கான படிவம் 7-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் வழங்கப்பட்டுள்ள விளக்கத்தின்படி, சம்பந்தப்பட்ட தொகுதியில் வாக்காளராக உள்ள எந்தவொரு நபரும், அந்தத் தொகுதியில் சேர்க்கப்பட்ட நபர் குறித்தோ சேர்க்கப்படவுள்ள நபர் குறித்தோ ஆட்சேபனைகள் இருந்தால் தெரிவிக்க உரிமை உண்டு. அதற்கு, தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலருக்கு படிவம் 7-ஐ பூர்த்தி செய்து, அதனுடன் தொடர்புடைய ஆதாரங்களை இணைத்து ஆட்சேபனை தெரிவிக்கலாம்.
அதேபோல, அண்டை வீட்டார் அல்லது உறவினர் தமது வசிப்பிடத்தை வேறு இடத்திற்கு மாற்றியுள்ள போதிலும், அவர்களது பெயர் இன்னும் வாக்காளர் பட்டியலில் நீடிக்கிறதா? அவர்களது பெயரை பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமா?
அதைச் செய்வதற்கும், உயிரிழந்துவிட்ட, காணப்படாத வாக்காளரின் பெயரை நீக்குவதற்கும் படிவம் 7 மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும்.
BBC படிவம் 6-உடன் என்னென்ன ஆவணங்களை இணைக்க வேண்டும்?
கேள்வி: உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க காலக்கெடு உள்ளதா?
பதில்: வேறு முகவரிக்கு இடம் மாறிச் சென்றவர்கள், புதிதாகப் பெயர் சேர்க்கப்பட வேண்டியவர்கள், பெயர் நீக்கப்பட்டது குறித்து ஆட்சேபனை இருப்பவர்கள் என அனைவருமே அவற்றுக்கான படிவங்களை நிரப்பி சமர்ப்பிக்கும் பணிகளை டிசம்பர் 19 முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரை மேற்கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கேள்வி: ஒருவருக்கு 18 வயது ஆகிவிட்டது என்பதைத் தீர்மானிக்கப் பொருத்தமான தேதி எது? 18 வயது பூர்த்தியான நாளிலேயே வாக்காளராகப் பதிவு செய்துகொள்ள முடியுமா?
பதில்: மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950இன் பிரிவு 14(b)-இல் செய்யப்பட்ட திருத்தத்தின்படி, ஜனவரி 1 என்ற ஒரே தகுதித் தேதிக்குப் பதிலாக, ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய நான்கு தகுதித் தேதிகள் நடைமுறையில் உள்ளன.
ஆண்டின் இந்த நான்கு தகுதித் தேதிகளில் ஏதேனும் ஒன்றில், 18 வயதைப் பூர்த்தி செய்தவராக அல்லது செய்யவிருப்பவராக இருக்க வேண்டும்.
அந்தக் குடிமகன், படிவம் 6-ஐ பூர்த்தி செய்து வாக்காளராகப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பதாரர் 18 வயது என்ற தகுதியை அடைகின்ற காலாண்டில் வாக்காளராக அவரது பெயர் பதிவு செய்யப்படும்.
கேள்வி: படிவம் 6 சமர்ப்பிக்கப்படும்போது அதனுடன் என்னென்ன ஆவணங்களை இணைக்க வேண்டும்?
படிவம் 6-இல் சமீபத்திய பாஸ்போர்ட் அளவிலான புகைப்படம் ஒன்றை இணைக்க வேண்டும்.
அதனுடன் வயது மற்றும் வசிப்பிடத்திற்கான ஆவணச் சான்றுகளின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.
படிவம் 6-உடன் இணைக்க வேண்டிய பிறந்த தேதி மற்றும் வசிப்பிடத்திற்கான ஆவணச் சான்றுகளின் பட்டியல் படிவத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் வழிகாட்டுதல்கள் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
Getty Images வீடற்ற நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பது எப்படி?
கேள்வி: வரைவுப் பட்டியலில் உள்ள வாக்காளர்கள் தொடர்பான பதிவுகளில் ஏதேனும் தவறுகள் இருந்தால் எப்படி சரிசெய்வது?
பதில்: வரைவுப் பட்டியலில் உள்ள தவறுகளைத் திருத்துவதற்கு, படிவம் 8-ஐ பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அதேபோல, வாக்காளர் அடையாள அட்டையில் தவறுகள் இருந்தால், சரியான விவரங்களுடன் புதிய வாக்காளர் அடையாள அட்டையைப் பெற வேண்டுமெனில், அதற்கும் படிவம் 8 மூலமாகவே விண்ணப்பிக்கலாம். தேவையான திருத்தங்களைச் செய்து, வாக்காளர் பதிவு அலுவலர் அதே எபிக் எண்ணுடன் ஒரு புதிய வாக்காளர் அடையாள அட்டையை வழங்குவார்.
கேள்வி: சொந்த ஊரில் இருந்து வெகுதொலைவில், நீண்டகாலத்திற்கு விடுதியில் தங்கிப் படிக்கும் சூழலில் உள்ள மாணவர்கள், விடுதி முகவரியிலேயே வாக்காளராகப் பதிவு செய்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?
கல்வி நிலையங்களில் தங்கிப் படிக்கும் மாணவர்கள், கல்வி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் விடுதிகளிலோ அல்லது அருகில் வேறு இடத்திலோ நீண்டகாலத்திற்கு வசிப்பதுண்டு.
அப்படி இருப்பவர்கள், தங்களது படிப்பைத் தொடர்வதற்காகத் தற்போது வசிக்கும் விடுதி அல்லது வேறு முகவரியிலேயே வாக்காளராகப் பதிவு செய்துகொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.
அதற்கு அந்த மாணவர்கள் படிக்கும் படிப்பு, மத்திய, மாநில அரசுகள், வாரியங்கள், பல்கலைக்கழகங்கள் அல்லது நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
அத்தகைய படிப்புகள் குறைந்தபட்சம் ஓர் ஆண்டுக்கால அளவு கொண்டதாகவோ அல்லது அதற்கும் மேற்பட்ட கால அளவைக் கொண்டதாகவோ இருக்க வேண்டும்.
விடுதியிலோ அல்லது கல்வி நிறுவத்திற்கு அருகிலோ, தான் வசிக்கும் இடத்தின் முகவரியில் தன்னை வாக்காளராகப் பதிவு செய்ய விரும்பும் மாணவர், படிவம் 6-ஐ பூர்த்தி செய்து, அதனுடன் கல்வி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர், இயக்குநர், பதிவாளர் அல்லது முதல்வர் என யாராவது ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட போனாஃபைட் (Bonafide) சான்றிதழை இணைத்துச் சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த போனாஃபைட் சான்றிதழ், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் கிடைக்கும் படிவம் 6-உடன் இணைக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின் 2வது இணைப்பில் உள்ள மாதிரிப்படி இருக்க வேண்டும்.
கேள்வி: ஒருவர் வாக்காளராகப் பதிவு செய்யப்படுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளார். ஆனால், அவர் வீடற்றவர் என்பதால் அவரிடம் இதற்காக அடிப்படையில் தேவைப்படும் வசிப்பிடச் சான்றிதழ் இல்லை. இத்தகைய சூழ்நிலையில் என்ன நடக்கும்?
பதில்: வீடற்ற நபர்கள் விஷயத்தில், வாக்குச்சாவடி நிலை அலுவலர் படிவம் 6-இல் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு இரவில் சென்று, அந்த வீடற்ற நபர் தனது விண்ணப்பத்தில் முகவரியாகக் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில்தான் உண்மையில் உறங்குகிறாரா என்பதை உறுதி செய்வார்.
அவர் அங்குதான் உண்மையில் உறங்குகிறார் என்பதை வாக்குச்சாவடி நிலை அலுவலரால் சரிபார்க்க முடிந்தால், வசிப்பிடத்திற்கான ஆவணச் சான்று எதுவும் தேவையில்லை.
இந்தச் சரிபார்ப்பு முறைக்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர் ஒன்றுக்கும் மேற்பட்ட இரவுகள் அங்கு சென்று இதை உறுதி செய்ய வேண்டும்.
அவ்வாறு சரிபார்ப்பு வேலைகளை முடித்த பிறகு, வீடற்ற நபர் அனைத்து நிபந்தனைகளையும் பூர்த்தி செய்கிறார் என்று தேர்தல் பதிவு அலுவலர் திருப்தியடைந்தால், அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு