Health Tips: குளிர்காலத்தில் வாட்டி எடுக்கிறதா மூட்டு வலி..? ஏன் வருகிறது தெரியுமா..?
TV9 Tamil News December 23, 2025 09:48 PM

குளிர்காலத்தில் மூட்டு வலி (Joint Pain) என்பது பலரைப் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இந்த பருவத்தின்போது இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை பலரும் இரவில் தூங்கும்போது நன்றாக தூங்கினால், காலையில் எழுந்ததும் மூட்டு வலி பிரச்சனைகளை எதிர்கொள்கிறார்கள். இந்த பிரச்சனை ஏன் ஏற்படுகிறது..? எதனால் ஏற்படுகிறது..? என்று பலரும் புலம்பி தவிக்கிறார்கள். இதற்கான காரணத்தை தெரிந்து கொள்வது முக்கியம். பெரும்பாலும் குளிர்காலத்தில் (Winter) தாகம் குறைவாக எடுக்கும் என்பதால், பலரும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது கிடையாது. இதனால், உடலுக்கு முன்பு போலவே தண்ணீர் தேவைப்பட தொடங்கும். தண்ணீர் இல்லாததால் மூட்டுகளில் உள்ள சைனோவியல் திரவம் வறண்டு, உராய்வை அதிகரித்து வலி மற்றும் விறைப்பு ஏற்படுகிறது.

ALSO READ: இரவில் திடீரென தசை விறைப்பா..? இது மெக்னீசியத்தின் குறைபாட்டின் அறிகுறிகள்..!

மூட்டு வலியை சரிசெய்ய என்ன செய்யலாம்..?

குளிர்காலத்தில் நாள் முழுவதும் தொடர்ந்து வெதுவெதுப்பான நீரை குடிப்பது மூட்டு வலியைக் குறைக்கவும், வீக்கத்தைத் தணிக்கவும், தசைகளைத் தளர்த்தவும் உதவும் இதுமட்டுமின்றி, இந்த பருவத்தில் எள், பாதாம், வால்நட்ஸ், வேர்க்கடலை, மஞ்சள் கலந்த பால், பச்சை காய்கறிகள், சோயா மற்றும் பருப்பு போன்ற சத்தான உணவுகளை சாப்பிடுவது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து, எலும்புகள் மற்றும் மூட்டுகளை உள்ளிருந்து பலப்படுத்துகிறது.

உங்கள் உடலின் எந்தப் பகுதியிலும் வலி ஏற்பட்டால், அந்தப் பகுதியில் வெப்பத்தைப் பயன்படுத்துவதால் உடனடி வலி நிவாரணம் கிடைக்கும். ஒரு துணியை சூடாக்குவதன் மூலமோ அல்லது சூடான தண்ணீர் பாட்டிலை வலி இருக்கும் இடத்தில் வைப்பது குறைக்க உதவும்.

மூட்டுகளுக்கு ஈரப்பதம் ஏன் தேவை..?

உங்கள் சருமத்திற்கு மட்டுமல்ல, உங்கள் மூட்டுகளுக்கும் ஈரப்பதம் மிக மிக முக்கியம். குளிர்காலத்தில் ஏற்படும் வறட்சியினால் தசைகள் மற்றும் மூட்டுகளை விறைப்பாக்கும். எனவே கடுகு, தேங்காய் அல்லது எள் எண்ணெயுடன் 10 நிமிட மென்மையான மசாஜ் விறைப்பைக் குறைக்கவும், தசைகளை சூடாக வைத்திருக்கவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும்.

குளிர்காலத்தில், உடலில் வைட்டமின் டி அளவு குறையக்கூடும். இது தசை விறைப்பு மற்றும் மூட்டு வலிக்கு வழிவகுக்கும். இதைத் தவிர்க்க, உங்கள் வைட்டமின் டி அளவை அதிகரிக்க ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேரம் வெயிலில் உட்காருங்கள் அல்லது நடக்கவும். வலி தொடர்ந்தால், மருத்துவரை அணுகவும்.

அதிகமாக சாப்பிடுதல்:

குளிர்காலத்தில் மக்கள் குளிரில் இருந்து தப்பிக்க அதிகமாக சாப்பிட தொடங்குகிறார்கள். ஏனென்றால் குளிர்ந்த காலநிலையில் எடை அதிகரிப்பிற்கு வழிவகுக்கும் பல உணவுகள் உள்ளன. இவை மிகவும் மோசமான பழக்க வழக்கங்கள் ஆகும். உங்களுக்கு மூட்டு வலி இருந்தால், எடை அதிகரிப்பு இந்த பிரச்சனைகளை மோசமாக்கும். எனவே உங்கள் உணவில் கவனத்துடன் இருப்பது நல்லது.

ALSO READ: பலவீனத்தை தரும் இரும்புச்சத்து குறைபாடு.. இந்த 6 சைவ உணவுகள் சரிசெய்யும்..!

இதுமட்டுமின்றி, குளிர்காலத்தில் நீங்கள் வெளியே செல்லும் போதெல்லாம், உங்கள் உடலை முழுவதுமாக மூடுவது நல்லது. அதாவது, அடர்த்தியான ஆடைகளை அணிந்து, உடலில் வலி உணரும் பகுதிகளை நன்றாக மூடி கொள்ளுங்கள். குறிப்பாக முழங்கால்களை மூடுவதும், கைகளில் கையுறைகள் அணிவதும் மூட்டு வலி ஏற்படாமல் தடுக்கும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.