தானே மாவட்டம் திவா பகுதியில் தெரு நாய் கடித்த ஐந்து வயது சிறுமி, நான்கு முறை வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த நிஷா ஷிண்டே என்ற அந்தச் சிறுமியை தெரு நாய் ஒன்று கடித்தது.
உடனடியாக டோம்பிவிலியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு நான்கு தவணைகளாக தடுப்பூசிகள் போடப்பட்டன. இருப்பினும், நான்காவது தவணை ஊசிக்குப் பிறகு சிறுமியின் உடல்நிலை மோசமடைந்ததால் மும்பை கஸ்தூரிபா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரிழந்தார்.
சிறுமியின் இறப்பு குறித்து அவரது குடும்பத்தினர் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நாய் கடித்தவுடன் உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும், தெரு நாய்களின் தொல்லையைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து விளக்கம் அளித்த மாநகராட்சி சுகாதார அதிகாரிகள், சிறுமிக்கு உரிய முறையில் தடுப்பூசி மற்றும் நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். உயிரிழப்புக்கான துல்லியமான காரணத்தைக் கண்டறிய மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்து வருவதாகக் கூறியுள்ள அதிகாரிகள், தற்போது அப்பகுதியில் தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை செய்யும் பணிகளும், தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.