தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் விஜய்யை “புதிய அடிமை” என்று மறைமுகமாக விமர்சித்திருந்த நிலையில், அதற்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மிகக் காட்டமான பதிலடியை வழங்கியுள்ளார். “யார் மீதோ கல்லெறிவதாக நினைத்துக்கொண்டு, தங்கள் வீட்டு நிலைக்கண்ணாடி முன்பு நின்றுதான் பேசுகிறோம் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்” என்று விஜய் விமர்சித்துள்ளார்.
மேலும், நம்மால் கூட்டம் சேர்க்க முடியாது என்று எழுதியவர்களே, இப்போது கூட்டம் சேருவதைப் பார்த்து விழிபிதுங்கி நிற்பதாகவும், ‘முரசொலி’யாக இருக்கும் என்று நினைத்து அவர்கள் எழுதியது இப்போது ‘முரணொலி’யாக மாறிவிட்டது என்றும் அவர் கிண்டலடித்துள்ளார்.
திமுகவின் கடந்தகால அரசியல் வரலாற்றைச் சுட்டிக்காட்டிய விஜய், 1999 முதல் 2003 வரை பாஜகவுடன் கூட்டணியில் இருந்ததை நினைவுபடுத்தி, “யார் முதல் அடிமையாக இருந்து தாமரை மலரத் தரிசனம் செய்தார்கள் என்பது மக்களுக்குத் தெரியும்” என்று சாடியுள்ளார்.
தவெக ஒரு ராணுவக் கட்டுப்பாடு மிக்க அரசியல் போர்ப்படை என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டும் என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அவர், வரும் தேர்தலில் இளைஞர்களும் பெண்களும் தவெக பக்கமே நிற்கிறார்கள் என்பதை அறிந்து ஆளுங்கட்சி குமைச்சல் அடைவதாகவும் கூறியுள்ளார். இறுதியாக, புதிய வாக்காளர்கள் ஒருவர்கூட விடுபடாமல் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும் எனத் தனது படையினருக்கு அவர் கட்டளையிட்டுள்ளார்.