கொங்கு மண்டல அரசியலில் அதிமுகவுக்கு புதிய நெருக்கடி உருவாகி வருகிறது. அந்தப் பகுதியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பக்கம் கொண்டு வர, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தீவிரமாக செயல்பட்டு வருவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், செங்கோட்டையன் நேரடியாக விஜய்யை சந்தித்து தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து, அவருக்கு தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பும், கொங்கு மண்டல அமைப்பாளர் பொறுப்பும் வழங்கப்பட்டது. இந்த பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட பிறகு, கொங்கு மண்டலத்தில் தவெகவை வலுப்படுத்தும் பணியில் செங்கோட்டையன் முழு வீச்சில் இறங்கியுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டத்தில் விஜய்யை அழைத்து வந்து செங்கோட்டையன் நடத்திய பிரம்மாண்ட பொதுக்கூட்டம், தவெகவின் அரசியல் பலத்தை வெளிப்படுத்தியது. இந்த கூட்டத்துக்குப் பிறகு, அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் சீட் கிடைக்க வாய்ப்பில்லாத நிர்வாகிகளை தவெக பக்கம் இழுக்கும் ‘அசைன்மென்ட்’ முழுமையாக செங்கோட்டையனிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதேபோல், அமமுக மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பையும் தவெக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளையும் அவர் முன்னெடுத்து வருகிறார்.
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள், மாவட்ட நிர்வாகிகளை செங்கோட்டையன் நேரடியாக போனில் தொடர்பு கொண்டு பேசுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “தேர்தலில் செலவு செய்ய பணம் இல்லை” என்று சிலர் தயக்கம் காட்டினாலும், “என்னை நம்பி தவெகவுக்கு வாருங்கள்” என்று செங்கோட்டையன் உறுதி அளித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், அதிமுக வட்டாரங்களில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சமீப காலத்தில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பல்பாக்கி சி.கிருஷ்ணன், செங்கோட்டையன் முன்னிலையில் தவெகவில் இணைந்தது இந்த அரசியல் நகர்வுக்கு தெளிவான சான்றாக பார்க்கப்படுகிறது. இதுபோல், வரும் நாட்களில் மேலும் பல முன்னாள் எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அதிமுகவை விட்டு தவெக பக்கம் செல்லலாம் என அரசியல் கணிப்பாளர்கள் கூறுகின்றனர்.
அதிமுகவின் பாரம்பரிய கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில், செங்கோட்டையன் தொடர்ந்து ஓட்டை போட்டு வருவது, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு கடுமையான சேதாரத்தை ஏற்படுத்தக்கூடும் என மதிப்பிடப்படுகிறது. இவ்வளவு பரபரப்பான சூழ்நிலையிலும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாக எந்த எதிர்வினையும் காட்டாமல் அமைதி காக்கிறார் என்பதும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படும் முக்கிய விஷயமாக உள்ளது.