விஜய்யின் கடைசி படமாக சொல்லப்படும் ‘ஜன நாயகன்’ திரைப்படம், ஜனவரி 9-ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக உள்ளது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ள நிலையில், பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக தோன்றுகிறார். மமிதா பைஜூ, நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர்.
படத்தின் பணிகள் தொடங்கிய நாளிலிருந்தே ‘ஜன நாயகன்’ தெலுங்கில் வெளியான பாலய்யாவின் ‘பகவந்த் கேசரி’ படத்தின் தமிழ் ரீமேக்கா என்ற சர்ச்சை தொடர்ந்து பேசப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மலேசியாவில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஹெச்.வினோத், “இந்த படம் எந்த படத்திற்கும் ரீமேக் அல்ல, இது தளபதி விஜய் படம்” என்று தெளிவாக கூறினார்.
இந்த நிலையில் ‘பகவந்த் கேசரி’ படத்தை இயக்கிய அணில் ரவிபுடியிடம், ‘ஜன நாயகன்’ ரீமேக்கா என்ற கேள்வி செய்தியாளர் சந்திப்பில் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அணில் ரவிபுடி, “விஜய் சார் ஒரு ஜென்டில்மேன். அந்தப் படத்தில் எனக்கு ஏதேனும் பங்கு இருக்கிறதா இல்லையா என்பது படம் வெளியான பிறகே தெரியும்” என்று கூறி விவாதத்தை மேலும் சுவாரசியமாக மாற்றினார். மேலும், ஹெச்.வினோத் சொன்னதைப் போலவே, இதையும் முழுக்க முழுக்க விஜய் படம் என்றே கருதலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விஜய்யை இரண்டு முறை சந்தித்ததாக கூறிய அணில் ரவிபுடி, தானும் விஜய் ரசிகர் என்பதைக் குறிப்பிடும் வகையில் பேசியது கவனத்தை ஈர்த்தது. உண்மையில் ‘ஜன நாயகன்’ பகவந்த் கேசரியின் ரீமேக்கா அல்லது முற்றிலும் புதிய கதையா என்பது படம் வெளியான பிறகே தெரிய வரும். ஆனால், இது ஒரு எமோஷனல் படமாக மட்டுமல்ல, நம்பிக்கை தரும் படமாக இருக்கும் என்றும், ‘ஜன நாயகன்’ தளபதி விஜய்யின் முடிவல்ல, புதிய தொடக்கம் என இயக்குநர் வினோத் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.