மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள 29 மாநகராட்சிகளுக்கு வரும் 15ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இத்தேர்தலில் பா.ஜ.கவும், சிவசேனா(ஷிண்டே)வும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. மற்றொரு சிவசேனா(உத்தவ்) மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் இத்தேர்தலில் இணைந்து போட்டியிடுவதால் காங்கிரஸ் கட்சி உத்தவ் தாக்கரே தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிடுகிறது. துணை முதல்வர் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகி மாநிலம் முழுவதும் தனித்து போட்டியிடுகிறது.
காங்கிரஸ் கட்சி பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி என்ற கட்சியுடன் கூட்டணி வைத்து 62 வார்டுகளை அக்கட்சிக்கு ஒதுக்கி இருந்தது. ஆனால் வஞ்சித் பகுஜன் அகாடி 16 வார்டுகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
மும்பை மாநகராட்சியில் மொத்தமுள்ள 227 வார்டுகளில் 2516 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை பா.ஜ.க கூட்டணியில் கடைசிவரை நீடித்ததால் வேட்பாளர் யார் என்பது கடைசி வரை சஸ்பெண்ஸ்சாக இருந்தது.
மனுத்தாக்கலுக்கு கடைசி நாளில் மட்டும் 84 சதவீதம் பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது மனைவிகளுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வாங்குவதில் தீவிர கவனம் செலுத்தினர். இட ஒதுக்கீடு முறையில் சில வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த வார்டுகளில் அரசியல் தலைவர்கள் தங்களது மனைவிகளை வேட்பாளர்களாக நிறுத்தி இருக்கின்றனர். பா.ஜ.கவில் தனது மனைவிக்காக சீட் பெற்றுள்ள முன்னாள் கவுன்சிலர் அபிஜித் சாவந்த் இது குறித்து கூறுகையில்,'' எனது மனைவி ஆரம்பத்தில் இருந்தே எனது அரசியல் பயணத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். நான் வேறு எங்காவது புதிதாக ஒரு இடத்தில் போட்டியிடுவதை விட, எனது மனைவி எனது வார்டில் போட்டியிடுவதுதான் மிகவும் பொருத்தமானது என்று நான் உணர்ந்தேன்,” என்றும் அவர் தெரிவித்தார்.
மும்பையில் மட்டும் 43 அரசியல் தலைவர்கள் தங்களது மனைவி, மகன், மருமகள், வாரிசுகளுக்கு தேர்தலில் போட்டியிட சீட் வாங்கி இருக்கின்றனர். பாஜக எம்.எல்.ஏ ராகுல் நர்வேகர், காங்கிரஸ் எம்.எல்.ஏ அஸ்லாம் ஷேக் மற்றும் தேசியவாத காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ நவாப் மாலிக் ஆகியோர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு தலா மூன்று டிக்கெட்டுகளைப் பெற்ற நிலையில், மற்றவர்கள் தங்கள் உறவினர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு டிக்கெட்டுகளைப் பெற்றனர். இது தவிர எம்.எல்.ஏ.க்கள் தங்களது பகுதியை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக தங்களது தூரத்து உறவினர்களுக்கு சீட் வாங்கிக்கொடுத்துள்ளனர்.
நாட்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பணக்கார மாநகராட்சியை கைப்பற்றுவது என்பது பா.ஜ.கவின் நீண்ட கால கனவாகும். கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் ஒருங்கிணைந்த சிவசேனாவை விட சில வார்டுகள் குறைவாக பெற்றதால் அப்போது பதவியை பிடிக்க முடியவில்லை. எனவே இந்த முறை எப்படியும் மும்பையை பிடித்துவிட வேண்டும் என்பதில் பா.ஜ.க உறுதியாக இருக்கிறது. மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் ஏறத்தாழ ரூ.75 ஆயிரம் கோடியாகும். 20 ஆண்டுகளுக்கும் மேல் இந்த மாநகராட்சியை சிவசேனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
ஆனால் இம்முறை சிவசேனா இரண்டாக உடைந்துவிட்டது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 90 வார்டுகளில் தான் போட்டியிடுகிறது. மும்பையை விட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் உத்தவ் தாக்கரேயும், ராஜ் தாக்கரேயும் 20 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளனர். உண்மையான போட்டியென்றால் அது உத்தவ் தாக்கரேயிக்கும், ஏக்நாத் ஷிண்டேயிக்கும் தான் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.