மத்திய அரசு புகையிலை பொருட்கள் மற்றும் பான் மசாலா மீதான வரி விதிப்பில் அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. இதன்படி, வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கூடுதல் கலால் வரி மற்றும் புதிய செஸ் வரி விதிக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள 'ஜிஎஸ்டி இழப்பீடு செஸ்' முறை ரத்து செய்யப்பட்டு, அதற்கு பதிலாக இந்த புதிய வரிகள் அமலுக்கு வருகின்றன.
மத்திய அரசின் அறிவிப்பின்படி, பிப்ரவரி 1 முதல் பான் மசாலா, சிகரெட் மற்றும் புகையிலை பொருட்களுக்கு 40 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். பீடிக்கு 18 சதவீத ஜிஎஸ்டி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படை ஜிஎஸ்டி வரிக்கு மேலதிகமாக, பான் மசாலா மீது 'சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ்' வசூலிக்கப்படும். புகையிலை மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களுக்கு கூடுதல் கலால் வரி விதிக்கப்படும்.
நிதி அமைச்சகம் இது தொடர்பாக "புகையிலை, ஜர்தா மற்றும் குட்கா பேக்கிங் இயந்திரங்கள் விதிகள், 2026"-ஐயும் அறிவித்துள்ளது. இதன் மூலம் உற்பத்தி இயந்திரங்களின் அளவை கணக்கிட்டு வரி வசூலிப்பதன் மூலம் வரி ஏய்ப்பை தடுக்க அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இதற்கான மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட நிலையில், தற்போது பிப்ரவரி 1 முதல் அமல்படுத்த தேதி குறிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வரி உயர்வால் சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களின் விலை வரும் நாட்களில் கணிசமாக உயர வாய்ப்புள்ளது.
Edited by Siva