தமிழகத்தில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இணக்கமாக இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும், திரைக்குப் பின்னே திமுக – காங்கிரஸ் இடையே மோதல் போக்கு வலுத்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யுடன் காங்கிரஸ் மேலிடம் காட்டும் நெருக்கம், திமுக நிர்வாகிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான பிரவீன் சக்கரவர்த்தி, சமீபத்தில் தவெக தலைவர் விஜய்யைச் சந்தித்துப் பேசியது கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இது ஒருபுறமிருக்க, தமிழக அரசின் கடன் சுமையை உத்தரப் பிரதேச மாநிலத்துடன் ஒப்பிட்டு அவர் விமர்சனம் செய்திருந்தது திமுகவினரை கொந்தளிக்கச் செய்தது.
அவர் மீது காங்கிரஸ் தலைமை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது, “ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின் பேரிலேயே பிரவீன் சக்கரவர்த்தி இப்படிச் செயல்படுகிறாரா?” என்ற சந்தேகத்தை திமுக தரப்பில் எழுப்பியுள்ளது.
இந்தச் சூழலில், தமிழக காங்கிரஸ் எம்பி-க்கள் மற்றும் எம்எல்ஏ-க்களைச் சந்திக்க ராகுல் காந்தி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சந்திப்பு குறித்துப் பேசிய விருத்தாசலம் காங்கிரஸ் எம்எல்ஏ எம்.ஆர்.ஆர். ராதாகிருஷ்ணன், ராகுல் காந்தியைச் சந்திக்க உள்ளது உறுதி எனத் தெரிவித்துள்ளார்.
இதனையொட்டி, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, SIR பணிகளை விரைந்து முடித்து அதன் விவரங்களை மேலிடத்திற்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளார். வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு காங்கிரஸ் நிர்வாகிகள் இப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் கரூர் விவகாரத்தின் போது, தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தியே நேரடியாகத் தொலைபேசியில் அழைத்து பேசியது பெரும் விவாதமானது.
விஜய்யை பாஜக பக்கம் செல்லவிடாமல் தடுப்பது ஒரு காரணமாக இருந்தாலும், வருங்காலக் கூட்டணி கணக்குகளும் இதில் அடங்கியிருப்பதாகப் பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரத்தை ராகுல் காந்தி நேரடியாகக் கேட்டறிய விரும்புவதால், இந்தச் சந்திப்பு மிக விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தியின் இந்தத் தமிழகப் பயணம் மற்றும் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகே, திமுக – காங்கிரஸ் உறவு நீடிக்குமா அல்லது புதிய கூட்டணிக் கணக்குகள் உருவாகுமா என்பது தெளிவாக தெரியவரும்.