கடந்தாண்டு வெளியான படங்களில் எவை ஆனந்த விகடன் விமர்சனத்தில் அதிக மதிப்பெண் பெற்ற படங்கள் என்பதை பார்ப்போமா...
குடும்பஸ்தன்:
அறிமுக இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில் மணிகண்டன், சான்வி மேக்னா ஆகியோர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 'குடும்பஸ்தன்' திரைப்படம் திரைக்கு வந்திருந்தது. சாபத்துடன் தொடங்கி சுபத்துடன் முடியும் ஒரு வழக்கமான குடும்பக் கதையானாலும் திரைக்கதையில் அதை அலுப்பூட்டாமல் புதுமையாகப் பரிமாறியிருந்தார் இயக்குநர். இப்படத்திற்கு ஆனந்த விகடன் 44 மதிப்பெண்களை வழங்கியிருந்தது.
பாட்டில் ராதா:
குரு சோமசுந்தரம் நடிப்பில், அறிமுக இயக்குநர் தினகரன் சிவலிங்கம் இயக்கத்தில் கடந்தாண்டின் ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் 'பாட்டில் ராதா'. இத்திரைப்படம் திரைக்கதையில் தள்ளாடியிருந்தாலும் சொல்ல வந்த கருத்தால் மனதில் ஸ்டெடியாக இடம் பிடித்துக் கொண்டது. இப்படத்திற்கு ஆனந்த விகடன் 44 மதிப்பெண்களை வழங்கியிருந்தது.
பாட்டல் ராதா படத்தில்...
டிராகன்:
இயக்குநர் அஸ்வின் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் பெரும் வசூலை ஈட்டிய திரைப்படம் 'டிராகன்'. அறத்தின் பக்கம் நின்று கமர்ஷியல் சினிமா வழியில் பறக்கும் இந்த 'டிராகன்' நம் மனத்திலும் உயரப் பறந்தது. இத்திரைப்படத்திற்கு ஆனந்த விகடன் 44 மதிப்பெண்களை வழங்கியிருந்தது.
வீர தீர சூரன்:
இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம், துஷாரா விஜயன், சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் நடிப்பில் கடந்தாண்டு மார்ச் மாதம் வெளியான திரைப்படம் 'வீர தீர சூரன்'. முதல் பாதி திரைக்கதையில் கிழங்கென வெடித்து இரண்டாம் பாதி திரைக்கதையில் சற்று தடுமாறினாலும் ‘மதுரை வீரனாக’ எழுந்து நின்று சம்பவம் செய்தது இந்த 'வீர தீர சூரன்'. இப்படத்திற்கு ஆனந்த விகடன் 44 மதிப்பெண்களை வழங்கியிருந்தது.
டூரிஸ்ட் ஃபேமிலி:
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிகுமார், சிம்ரன் ஆகியோர் நடிப்பில் வெளியான 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் இந்தாண்டு திரையரங்க வசூலில் சக்கைப் போடு போட்டது. ‘அன்பு செய்யுங்கள்’ என்ற ஃபார்வர்டு மெசேஜ்தான் படம் உணர்த்தினாலும், நெகிழ்ச்சிதன்மைகளை திகட்டிவிடும் அளவுக்கு கோர்க்காமல் இடையிடையே காமெடியால் சிரிக்க வைத்து நம்மை ஆசுவாசப்படுத்தியது இந்த 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைக்கதை. இப்படத்திற்கு ஆனந்த விகடன் 48 மதிப்பெண்களைக் கொடுத்திருந்தது.
3 BHK:
சொந்த வீடு வாங்க நினைக்கும் ஒரு மிடில் க்ளாஸ் குடும்பத்தின் கனவைப் பற்றியதே இந்த '3 BHK'. '8 தோட்டாக்கள்' ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த், சரத்குமார் ஆகியோர் நடித்திருந்த இத்திரைப்படம் இந்தாண்டு வெளியாகி பலருக்கும் நெகிழ்ச்சியூட்டும் படைப்பாக அமைந்தது. படத்தை மிடில் க்ளாஸ் குடும்பத்தின் லட்சியப் பயணமாக விவரிக்காமல், உணர்வுப் பூர்வமான பயணமாக சொல்லி நம்மை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது '3 BHK'. இப்படத்திற்கு ஆனந்த விகடன் 47 மதிப்பெண்களை வழங்கியிருந்தது.
3 BHK
பறந்து போ:
சீரியஸ் இயக்குநர் ராமிடமிருந்து வெளிவந்திருக்கும் நகைச்சுவையான கவிதையே இந்த 'பறந்து போ'. சமகாலக் குழந்தை வளர்ப்பிலுள்ள சிக்கல்களையும், பொருளாதாரப் பின்னணி காரணமாகப் பெற்றோர்கள் அதில் கவனம் செலுத்த முடியாத அவல நிலையையும் இயல்பான நகைச்சுவை கலந்து சொல்லியது இத்திரைப்படம். இத்திரைப்படத்திற்கு ஆனந்த விகடன் 50 மதிப்பெண்களை வழங்கியிருந்தது.
மாயகூத்து:
அறிமுக இயக்குநர் ராகவேந்திரா இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்தன. தரமான ஆக்கத்தில், சமூகத்தின் மனசாட்சியைக் கேள்வி கேட்ட விதத்தில் இந்த மாயக்கூத்து நம்மை கவர்ந்தது. இப்படத்திற்கு ஆனந்த விகடன் 44 மதிப்பெண்களை வழங்கியிருந்தது.
மாரீசன்:
வடிவேலு, ஃபகத் ஃபாசில் நடிப்பில் கடந்தாண்டு வெளியான 'மாரீசன்' திரைப்படம் விமர்சனரீதியாக நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. இரண்டாம் பாதியில் வேகத்தடைகள் கொண்டு நம்மை களைப்பூட்டினாலும் அவற்றிலிருந்து தப்பி, மாயப் பொன்மானாக நம்மைக் கவர்ந்தது இந்த 'மாரீசன்'. இப்படத்திற்கு ஆனந்த விகடன் 44 மதிப்பெண்களை வழங்கியிருந்தது.
பேட் கேர்ள்:
அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான திரைப்படம் 'பேட் கேர்ள்'. பள்ளி-கல்லூரி-கரியர் என ஒரு பெண்ணின் லார்வா-டூ-பட்டர்ஃப்ளை வாழ்க்கையின் சுவாரஸ்ய பக்கங்களை ஒளிவுமறைவின்றி இப்படைப்பில் காட்டியிருந்தார் இயக்குநர். இப்படத்திற்கு ஆனந்த விகடன் 44 மதிப்பெண்களை கொடுத்திருந்தது.
பைசன்:
இயக்குநர் மாரி செல்வராஜின் 'பைசன்' தீபாவளி வெளியீடாக இந்தாண்டு திரைக்கு வந்திருந்தது. ஆசிய கபடி போட்டியில் இந்தியா தங்கம் பெறக் காரணமாக இருந்து அர்ஜுனா விருது பெற்ற வீரரின் பயோபிக்கை வைத்து யாரை நாம் ரோல் மாடலாக எடுத்துக்கொள்ள வேண்டும் எனத் தெளிவான கருத்தை இப்படைப்பின் மூலம் இளைஞர்களுக்குச் சொல்லியிருந்தார் மாரி செல்வராஜ். இப்படத்திற்கு ஆனந்த விகடன் 48 மதிப்பெண்களை வழங்கியிருந்தது.
டியூட் :
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடந்தாண்டு தீபாவளி பண்டிக்கைக்கு திரைக்கு வந்த 'டியூட்' திரைப்படம் மக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. சாதி ஆணவக்காரர்களை ‘பிராங்க்' செய்து வாயடைத்த இந்த ‘டியூட்', ராவான ராவணன்தான். இப்படத்திற்கு ஆனந்த விகடன் 45 மதிப்பெண்களைக் கொடுத்திருந்தது.
அங்கம்மாள்:
அறிமுக இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்த சினிமா எழுத்தாளர் பெருமாள் முருகனின் 'கோடித்துணி' சிறுகதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. ‘ரவிக்கை சட்டை அணிய மறுக்கும் தாயார்’ என்கிற மெல்லிய கருவில், கிராமத்தின் யதார்த்த வாழ்வியலை அழுத்தமாகப் பதிவுசெய்திருக்கிறது திரைக்கதை. இத்திரைப்படத்திற்கு ஆனந்த விகடன் 46 மதிப்பெண்களை வழங்கியிருந்தது.
சிறை படத்தில்...
சிறை:
'டாணாக்காரன்' இயக்குநர் தமிழின் எழுதிய கதையை வைத்து இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இப்படையை எடுத்திருக்கிறார். தொடக்க அத்தியாயம் முதலே பதற்றத்தின் மீட்டரை உச்சாணிக் கொம்பிலேயே வைத்திருக்கும் காட்சி அமைப்பு, வழிநெடுக வரும் திருப்பங்கள், இடையே தேவையான கேள்விகளை எழுப்பும் வசனங்கள், கதாபாத்திரங்களின் மனமாற்றங்கள், நிகழும் ஒவ்வொரு பிரச்னைக்கும் அது தொடர்பான விதைகளை முன்னரே அழுத்தமாக விதைத்தது போன்றவற்றால் 'அரசியல்' சினிமாவுக்கும், 'பொழுதுபோக்கு' சினிமாவுக்குமான பாலமாக நிற்கிறது 'சிறை'யின் திரைக்கதை. இப்படத்திற்கு ஆனந்த விகடன் 48 மதிப்பெண்களைக் கொடுத்திருக்கிறது.