தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற விழாவில், கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” என்ற பிரம்மாண்ட திட்டத்தைத் தொடங்கி வைத்தார். சுமார் 20 லட்சம் மாணவர்களுக்குப் பயன் தரும் இத்திட்டத்தின் முதல் கட்டமாக, 10 லட்சம் மடிக்கணினிகள் விநியோகம் செய்யும் பணியை அவர் தொடங்கி வைத்தார்.
விழாவில் பேசிய முதல்வர், “இந்த லேப்டாப் ஒன்றும் வெறும் பரிசுப்பொருள் அல்ல, இது நீங்கள் உலகத்தை ஆள்வதற்காகத் தரப்பட்டுள்ள ஒரு வலிமையான கருவி” என்று மாணவர்களை உற்சாகப்படுத்தினார்.
மேலும், மாணவர்கள் இந்த மடிக்கணினியை வெறும் கேம்ஸ் விளையாடுவதற்கோ அல்லது பொழுதுபோக்கிற்காகப் படம் பார்ப்பதற்கோ பயன்படுத்தாமல், தங்களது எதிர்காலத்தை வடிவமைக்கும் ஒரு ஏவுதளமாக (Launch Pad) பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
“செயற்கை நுண்ணறிவு (AI) என்பது நெருப்பின் கண்டுபிடிப்புக்கு இணையான மனிதகுலத்தின் மிகப்பெரிய முன்னேற்றம். அது மனிதர்களுக்கு உதவியாக இருக்குமே தவிர, ஒருபோதும் மனிதனை ரீப்ளேஸ் (Replace) செய்ய முடியாது” என்று கூறிய முதல்வர், மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுத் தங்களை மெருகேற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கல்விக்காகச் செய்யப்படும் இந்தச் செலவை அரசு ஒரு செலவாகப் பார்க்காமல், எதிர்காலத் தலைமுறைக்கான முதலீடாகவே பார்க்கிறது என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.