இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் தற்போது அனைத்து பணிகளையும் நிறைவு செய்து வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.
எடிட்டிங் பணிகள் முடிவடைந்துள்ள இந்த பிரமாண்ட படம், பொங்கல் பண்டிகை வெளியீடாக வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் மமிதா பைஜூ தோன்றுகிறார்.

இவர்களுடன் பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளவர் இசை உலகின் முன்னணி கலைஞர் அனிருத் ரவிச்சந்தர்.
தீவிர அரசியல் பயணத்தில் இறங்கியுள்ள விஜயின் நடிப்பு வாழ்க்கையின் கடைசி படம் இதுவாக இருக்கலாம் என்ற தகவல் வெளியாகி வருவதால், ‘ஜனநாயகன்’ திரைப்படம் சினிமா ரசிகர்களை மட்டுமின்றி அரசியல் வட்டாரங்களிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பரபரப்புக்கு மேலும் தீனி போடும் வகையில், கடந்த 3ஆம் தேதி வெளியான ‘ஜனநாயகன்’ டிரெய்லர் குறுகிய நேரத்திலேயே கோடிக்கணக்கான பார்வைகளை பெற்று, தற்போது யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், இந்த படத்தில் நடித்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பெற்ற சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகி, சினிமா உலகில் பேசுபொருளாகியுள்ளது. சுமார் ரூ.380 கோடி பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படத்தில், நடிகர் விஜய் ரூ.220 கோடி சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இயக்குநர் எச். வினோத்துக்கு ரூ.25 கோடியும், இசையமைப்பாளர் அனிருத்துக்கு ரூ.13 கோடியும் வழங்கப்பட்டுள்ளன.மேலும், நடிகர்கள் பாபி தியோல் மற்றும் பூஜா ஹெக்டே ஆகியோருக்கு தலா ரூ.3 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், நடிகை மமிதா பைஜூவிற்கு ரூ.60 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.திரையுலகைத் தாண்டி அரசியல் தாக்கத்தையும் ஏற்படுத்தும் படமாக ‘ஜனநாயகன்’ மாறுமா என்ற கேள்வியுடன், ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.