2026 ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கும் புதிய நிதியாண்டில், வருமான வரி விதிகள் மாற உள்ளன. அதற்காக, வருமான வரித்துறை வரைவு வருமான வரி விதிகள், 2026-ஐ, வரைவு வரி வருமான படிவங்களுடன் வெளியிட்டு, பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்டுள்ளது. வரி முறையை எளிமைப்படுத்துவது, அனைவரும் புரிந்துகொள்வதை எளிதாக்குவது மற்றும் அதை வெளிப்படைத்தன்மையாக்குவதே இதன் நோக்கமாகும். வரைவு வருமான வரி விதிகள் 2026, பான் கார்டு தொடர்பான சில மாற்றங்களையும் முன்மொழிகிறது.
வரைவு வருமான வரி விதிகள் 2026-ல், பான் கார்டு தேவைப்படும் பகுதிகளை அரசு பட்டியலிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ், பல பண வரம்புகள் உயர்த்தப்பட்டுள்ளன. இது சிறிய பரிவர்த்தனைகளுக்கு இணங்குவதை எளிதாக்கும் அதே நேரத்தில், பெரிய பரிவர்த்தனைகளுக்கு விதிகள் கடுமையாக மாறும். அந்த மாற்றங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.
புதிய வரைவில், மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று வங்கிகளுடனான பண பரிவர்த்தனைகளில் செய்யப்பட்டுள்ளது. வரைவு விதிகளின் கீழ், ஒரு நிதியாண்டில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வங்கிக் கணக்குகளில் இருந்து 10 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்தாலோ அல்லது எடுத்தாலோ மட்டுமே PAN எண்ணை குபிறப்பிட வேண்டியிருக்கும்.
ஆனால், தற்போது உள்ள விதிகளின்படி, ஒரு வங்கி அல்லது கூட்டுறவு வங்கியில் ஒரே நாளில் 50,000 ரூபாய்க்கும் அதிகமான ரொக்க டெபாசிட்டுகளுக்கு PAN எண்ணை குறிப்பிட வேண்டும். முன்மொழியப்பட்ட விதிகளில், அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளைக் கண்காணிக்க அரசாங்கம் பெரிய பரிவர்த்தனைகளில் கவனம் செலுத்துகிறது.
தற்போது உள்ள செயல்முறைப்படி, விலை எதுவாக இருந்தாலும் மோட்டார் வாகனம் வாங்குவதற்கு பான் கார்டு அவசியம். ஆனால், மோட்டார் சைக்கிள்கள் உட்பட நான்கு சக்கர வாகனத்தின் விலை 5 லட்சம் ரூபாயை தாண்டினால் மட்டுமே வாகனம் வாங்கும் போது பான் கார்டு வழங்கப்பட வேண்டும் என்று வரைவு விதிகள் கூறுகின்றன.
இதை விட குறைந்த விலையில் வாகனங்களை வாங்குபவர்களுக்கும், இருசக்கர வாகனங்களுக்கும் குறிப்பிட்ட விதிகள் எதுவும் இல்லை. புதிய வரம்பு, கொள்முதல் மதிப்புடன் இணக்கத்தை இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனால், குறைந்த விலையில் வாகனங்களை வாங்குபவர்கள் தேவையற்ற பான் விவரங்களை வழங்க வேண்டிய தேவையை நீக்குகிறது.
இந்த வரைவு விதிகள் அங்கீகரிக்கப்பட்டால், விருந்தோம்பல் மற்றும் நிகழ்வுத் துறையிலும் மாற்றங்கள் ஏற்படும். அதாவது, ஹோட்டல்கள், உணவகங்கள், விருந்து அரங்குகள், மாநாட்டு மையங்கள் அல்லது நிகழ்வு மேலாளர்களுக்கு 1 லட்சத்திற்கு மேல் பணம் செலுத்தினால் மட்டுமே PAN தேவைப்படும்.
தற்போதைய விதிகளின் கீழ், 50,000 ரூபாய்க்கு மேலான ஹோட்டல் அல்லது உணவக பில்களுக்கு PAN தேவைப்படுகிறது. இந்த வரம்பை இரட்டிப்பாக்குவது, வாடிக்கையாளர்கள் எந்த கூடுதல் ஆவணங்களும் இல்லாமல் சிறிய பில்களை செலுத்துவதை எளிதாக்கும்.
நீங்கள் வாங்கும், விற்கும், பரிசளிக்கும் அல்லது தொடர்புடைய எந்த ஒரு கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தத்தின் மதிப்பும் 20 லட்சம் ரூபாயைத் தாண்டினால், ஒரு பான் அட்டையை சமர்ப்பிக்க வேண்டும். தற்போது, இந்த வரம்பு 10 லட்சம் ரூபாயாக உள்ளது.
புதிய விதிகளில், காப்பீட்டுத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களும் அடங்கும். காப்பீட்டு நிறுவனத்துடன் கணக்கு அடிப்படையிலான உறவில் நுழைய PAN தேவைப்படும். ஆனால், தற்போதைய விதிகளின் கீழ், ஒரு நிதியாண்டில் ஆயுள் காப்பீட்டு பிரீமியம் 50,000 ரூபாயைத் தாண்டினால் மட்டுமே PAN தேவைப்படும்.
இந்த புதிய வருமான வரி விதிகள் இறுதி செய்யப்பட்ட பிறகு, புதிய வருமான வரிச் சட்டம், 2025, ஏப்ரல் 1, 2026 முதல் அமல்படுத்தப்பட உள்ளது.