அண்ணாமலை பல்கலை ஊழியர்கள் பணி நிரந்தரம்; திமுக வாக்குறுதி என்னாச்சு? அன்புமணி கேள்வி
க.சே.ரமணி பிரபா தேவி February 14, 2026 03:14 PM

அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு பொறியியல் உயர் கல்வி நிறுவனங்களிலும் கலை, அறிவியல் கல்லூரிகளிலும் ஏராளமான தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 

இவர்கள் நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையான கல்வித் தகுதியோடு, அதே பணியைச் செய்து வந்தாலும் அதே ஊதியம் அளிக்கப்படுவதில்லை. அதேபோல பணி நிரந்தரமும் செய்யப்படுவதில்லை. இதை எதிர்த்து அவ்வப்போது உதவிப் பேராசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்காலிக உதவிப் பேராசிரியர்களுக்கு அன்புமணி ஆதரவுக் கரம் நீட்டி உள்ளார்.  

பரிசீலிப்பதற்குக் கூட மறுப்பதா?

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேல் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 203 பணியாளர்களும் தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதற்குக் கூட அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொகுப்பூதிய பணியாளர்கள்  2011-ஆம் ஆண்டு முதல் 15 ஆண்டுகளாக இதே நிலையில் பணியாற்றி வருகின்றனர். தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி குறைந்தது ஆண்டுக்கு ஒரு முறை அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு போராட்டத்திலும் அவர்களுக்கு பா.ம.க. ஆதரவளித்திருக்கிறது.

பல முறை பணிநீக்க முயற்சி

பலமுறை அவர்களை பணி நீக்கம் செய்ய பல்கலைக்கழகம் முயன்றபோது சட்டப்பேரவையிலும், அதற்கு வெளியிலும் குரல் கொடுத்து பணி நீக்கத்தை தடுத்து நிறுத்தியிருக்கிறது. அவர்களுக்கு  பணிநிலைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை  பா.ம.க. முழுமையாக ஆதரிக்கிறது.

அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது. அவற்றை நிறைவேற்றுவதில் எந்த சிக்கலும் இல்லை. அவர்கள் அனைவரும், அவர்கள் செய்யும் பணிக்கு ஏற்ற கல்வித் தகுதியை பெற்றவர்கள் ஆவர். இவர்களின் நியமனம் முழுவதும் விதிகளின்படியும், பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு ஒப்புதலுடனும்தான் செய்யப்பட்டுள்ளது. பணி நிலைப்பு செய்வதற்கான தகுதியும், திறமையும் கொண்ட தினக்கூலி பணியாளர்களை  பணி நிலைப்பு செய்ய  திமுக அரசு மறுப்பது சமூக அநீதி ஆகும்.

வாழ்வாதாரத்துடன் விளையாடுவதா?

2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக ஆட்சிக்கு வந்தால் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தற்காலிக பணியாளர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று திமுக வாக்குறுதி அளித்திருந்தது.  ஆனால், ஐந்தாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இதுவரை ஒரே ஒரு தற்காலிக பணியாளர் கூட பணிநிலைப்பு செய்யப்படவில்லை. அப்பாவி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்துடன் தமிழக அரசு  விளையாடுவது நியாயமல்ல.  

அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பதற்கு எந்த விதமான நியாயமான காரணங்களும் இல்லை. அவர்கள் அனைவரும் விதிகளின்படி நியமிக்கப்பட்டவர்கள். அதுமட்டுமின்றி, மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே வழங்கும் அளவுக்கு அரசிடம் நிதியும் குவிந்து கிடக்கிறது.  

எனவே, இல்லாத காரணங்களை கூறிக் கொண்டிருக்காமல் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளர்களின் பணி நிலைப்பு உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.