இசுலாமியர்களை இழிவுபடுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கேரளா ஸ்டோரி இரண்டாம் பாகம் திரைப்படத்தைத் தமிழக அரசு உடனடியாகத் தடை செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இசுலாமிய மக்களைப் பயங்கரவாதிகளாகவும் கொலைகாரர்களாகவும் சித்தரிக்கும் இத்திரைப்படத்தின் நீட்சியாக இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே முதல் பாகம் வெளியானபோதே அதனை எதிர்த்துத் தங்கள் கட்சி போராடிய நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தைத் திரையிட திமு கழக அரசு அனுமதி அளித்திருப்பது வெட்கக்கேடானது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
ஒவ்வொரு தனிமனிதனின் மதம் மற்றும் வழிபாட்டு உரிமையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்றும் சகோதரத்துவத்துடன் வாழும் மக்கள் இடையே வெறுப்பு நஞ்சினை விதைப்பது ஏற்புடையதல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் எங்கும் நடக்காத நிகழ்வுகளைக் குரூர கற்பனையுடன் திரைப்படமாக எடுப்பவர்களின் நோக்கம் நாட்டில் மதக்கலவரத்தை ஏற்படுத்துவதா என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். படைப்புச் சுதந்திரம் என்ற பெயரில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரை ஒட்டுமொத்தமாகக் குற்றவாளி கூண்டில் ஏற்றுவது பொது அமைதிக்குப் பேராபத்தை விளைவிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துத் தமிழக அரசு இந்தப் படத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவ்வாறு செய்யத் தவறினால் இத்திரைப்படம் திரையிடப்படும் ஒவ்வொரு திரையரங்கையும் நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டுத் தடுத்து நிறுத்துவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் திரையரங்க உரிமையாளர்கள் மதக்கலவரத்தைத் தூண்டும் இந்தப் படத்தை வெளியிட மாட்டோம் என்று ஒருமனதாகத் தீர்மானம் எடுக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.