தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான இறுதிக்கட்டத் தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி மாநிலத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அதில் பெயர் விடுபட்டவர்களுக்கான ஒரு முக்கிய அறிவிப்பை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
தமிழக தலைமைத் தேர்தல் அலுவலர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட இறுதிப் பட்டியலின்படி, தமிழகத்தில் தற்போது 5.67 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இருப்பினும், பல காரணங்களால் விடுபட்ட தகுதியுள்ள நபர்கள் தங்களது பெயர்களைச் சேர்க்க இன்னும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

யார் விண்ணப்பிக்கலாம்?
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் ஆகியோர் அளித்துள்ள விளக்கத்தின்படி, வேட்புமனு தாக்கல் முடிவடைய 10 நாட்களுக்கு முன்பு வரை தகுதியுள்ள எவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம். 2026 ஜனவரி 1-ஆம் தேதியன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் 'படிவம் 6' (Form 6) மூலம் புதிய வாக்காளராகப் பதிவு செய்யலாம்.
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான voters.eci.gov.in அல்லது 'Voter Helpline' செயலி வாயிலாக ஆன்லைனில் மிக எளிதாக விண்ணப்பிக்கலாம்.
வயதுச் சான்று (ஏதேனும் ஒன்று), ஆதார் கார்டு / பிறப்புச் சான்றிதழ் / ஓட்டுநர் உரிமம் / பான் கார்டு, முகவரிச் சான்று (ஏதேனும் ஒன்று), மின்சார பில் / தண்ணீர் வரி ரசீது / கேஸ் சிலிண்டர் பில் / வங்கி அல்லது அஞ்சலகக் கணக்குப் புத்தகம் / வாடகை ஒப்பந்தப் பத்திரம் போன்ற ஆவணங்கள் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரைச் சேர்க்க தேவைப்படும். மேலும் சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குடும்ப உறுப்பினர்களில் ஒருவரது வாக்காளர் அடையாள அட்டை எண் (இருப்பின்) ஆகியவை தேவைப்படும்.

நீங்கள் ஆன்லைனில் பதிவேற்றிய விபரங்களை, உங்கள் பகுதியைச் சேர்ந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர் நேரில் வந்து சரிபார்ப்பார். ஆவணங்கள் சரியாக இருக்கும் பட்சத்தில், உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, புதிய பிளாஸ்டிக் வாக்காளர் அடையாள அட்டை உங்கள் முகவரிக்கே தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும்.
வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள elections.tn.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் பெயர் அல்லது EPIC எண்ணைச் செலுத்திச் சரிபார்த்துக் கொள்ளலாம். பெயர் விடுபட்டிருந்தால், தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பே விண்ணப்பிப்பது சிறந்தது.