இரண்டரை வயது குழந்தையை தூக்கில் தொங்கவிட்ட தாய்…! பிஞ்சு உயிரைக் கொன்றதும் அடுத்த நொடியே எடுத்த முடிவு…!!
SeithiSolai Tamil March 31, 2026 09:48 PM

பாளையங்கோட்டை அருகே குடும்பத் தகராறு காரணமாக இரண்டரை வயது பெண் குழந்தையைத் தூக்கிலிட்டு கொன்றுவிட்டு, இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் கந்தசாமி, கூலித்தொழிலாளி. இவரது மகள் தங்கம் (21). இவருக்கும் கோவில்பட்டி அருகே உள்ள தட்டான்குளத்தைச் சேர்ந்த மகராஜன் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது.

திருமணமான சில மாதங்களிலேயே தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த தங்கம், கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு தனது குழந்தையுடன் கணவரைப் பிரிந்து நடுவக்குறிச்சியில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு வந்துவிட்டார். இது தொடர்பாக நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. இதனால் தங்கம் கடும் மன உளைச்சலில் இருந்து வந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில், நேற்று மாலை தங்கத்தின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். வீட்டில் தனிமையில் இருந்த தங்கம், திடீரென தனது பெண் குழந்தையைத் தூக்கிலிட்டுத் தொங்கவிட்டு, பின்னர் அவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இரவு வீடு திரும்பிய பெற்றோர், மகளும் பேத்தியும் சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து கதறி அழுதனர். இவர்களது சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், பாளையங்கோட்டை போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், இருவரின் உடல்களையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களைப் பரிசோதித்த மருத்துவர்கள், இருவரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர். தங்கத்திற்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால், நெல்லை ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.