ஒரு பைசா கூட திருப்பித் தர மாட்டோம்… வட்டியும் கிடையாது, முதலும் கிடையாது..! தமிழக அரசியலை உலுக்கும் சீமானின் அதிரடி பேச்சு…!!!
SeithiSolai Tamil April 01, 2026 07:48 PM

நாநாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் வெளியிட்ட கருத்து, தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. தாம்பரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், கடந்த காலங்களில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க அரசுகள் வாங்கிய எவ்விதக் கடன்களையும் தங்களால் திருப்பிச் செலுத்த முடியாது என்று அதிரடியாகத் தெரிவித்தார்.

மேலும் மக்கள் வரிப்பணத்தைச் சரியாகப் பயன்படுத்தாமல், ஊழல் மற்றும் நிர்வாகத் திறமையின்மையால் ஏற்பட்ட இந்தக் கடன் சுமைக்குத் தற்போதைய ஆட்சியாளர்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும், புதிய அரசு அந்தப் பொறுப்பை ஏற்க வேண்டிய அவசியமில்லை என்றும் அவர் வாதிட்டார்.

இதனால் சீமானின் இந்த அறிவிப்பு பொருளாதார நிபுணர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு அரசு என்பது தொடர்ச்சியானது என்றும், முந்தைய அரசு வாங்கிய கடன்களுக்குப் பிந்தைய அரசு பொறுப்பேற்க மறுப்பது சர்வதேச மற்றும் உள்நாட்டு நிதி நடைமுறைகளுக்கு எதிரானது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இத்தகைய முடிவு மாநிலத்தின் கடன் மதிப்பீட்டைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், வருங்காலத்தில் தமிழக அரசுக்கு யாரும் கடன் வழங்க முன்வர மாட்டார்கள் என்ற எச்சரிக்கையையும் அவர்கள் விடுக்கின்றனர். இருப்பினும், ஊழல் அரசியல்வாதிகள் செய்த தவற்றுக்கு மக்கள் ஏன் வட்டியும் முதலும் செலுத்த வேண்டும் என்ற சீமானின் கேள்வி அவரது தொண்டர்களிடையே பலத்த ஆதரவைப் பெற்றுள்ளது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.