அம்மாவே 1991-ல் போட்டியிடும் போது இரண்டு தொகுதியில் நின்றார்...வழக்கப்படி தான் விஜய் செய்து இருக்கிறார் என தவெக நிர்வாகி செங்கோட்டையன் கூறியுள்ளார்.

தவெக தலைவர் விஜய் நாளை (ஏப்ரல் 2) திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளார். ஏப்ரல் 2ல் விஜய் பிரசாரம் செய்வதால் பாதுகாப்பு கோரி திருச்சி காவல் ஆணையர் காமினியிடம் செங்கோட்டையன் மனு அளித்துள்ளார். ஏப்ரல் 2ல் வேட்பு மனு தாக்கல் செய்த பின் நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள போலீசார் அனுமதி வழங்கியிருப்பதாக த.வெ.க. நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “திருச்சியில் நாளை காலையில் மனுத்தாக்கல் செய்ததற்கு பிறகு இங்கே பொதுக்கூட்டம் நடைபெறும். 51 கட்டுப்பாடுகள் இருக்கிறது. அந்த கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு நாங்கள் அந்த பணிகளை நிறைவேற்றி வருகிறோம். முழுமையாக காவல்துறை முழு ஒத்துழைப்பை தந்து அரசு நிர்வாகம் முழுமையான முழுமையாக ஒத்துழைப்பை தந்து கொண்டிருக்கிறார்கள். எங்களுக்கு என்னென்ன பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டுமோ முழுமையாக அளிப்பதாக உத்தரவாதம் தரப்பட்டிருக்கிறது” என்றார்.