நாடு முழுவதும் உள்ள 74 முக்கிய தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் 4,874 பொதுப் பயன்பாட்டு மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புதிய 'பி.எம். இ-டிரைவ்' திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இந்த மெகா திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.2,000 கோடியை மானிய நிதியாக ஒதுக்கியுள்ளது. இதில், அண்டை மாநிலங்களை இணைக்கும் தமிழகத்தின் முக்கிய நெடுஞ்சாலைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, முதற்கட்டமாக 498 அதிவேக சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இந்தியாவில் பசுமைப் போக்குவரத்தை ஊக்குவிக்க ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 'FAME' திட்டத்தைத் தொடர்ந்து, தற்போது 'PM E-Drive' திட்டத்தின் கீழ் இவி (EV) சார்ஜிங் கட்டமைப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மெகா திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள 74 வழித்தடங்களில், 50 வழித்தடங்கள் மின்சார கார்கள் மற்றும் பேருந்துகளுக்காகவும், எஞ்சிய 24 வழித்தடங்கள் கனரக இ-டிரக்குகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்காகவும் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளன. நாடு தழுவிய இந்த உள்கட்டமைப்புப் பணிகளுக்காக முதற்கட்டமாக ரூ.503 கோடி நிதிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதில், தமிழகத்தில் மின்சார வாகன உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மட்டும் ரூ.34.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி, சென்னை – பெங்களூரு, சென்னை – திருச்சி, சென்னை – நாகர்கோவில், சென்னை – தூத்துக்குடி, பெங்களூரு – கோயம்புத்தூர், கோயம்புத்தூர் – திருச்சி மற்றும் கோயம்புத்தூர் – நாகப்பட்டினம் உள்ளிட்ட மாநிலத்தின் மிக முக்கியமான 7 தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் 498 அதிவேக சார்ஜிங் பாயிண்டுகள் நிறுவப்பட உள்ளன.
இதன் மூலம் நீண்ட தூரம் பயணிக்கும் மின்சார வாகன ஓட்டிகளின் சார்ஜிங் கவலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். இதே திட்டத்தின் ஒரு பகுதியாக, அண்டை மாநிலமான கேரளாவிலும் தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி 147 புதிய சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதால், ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் மின்சார வாகனங்களின் விற்பனையும் பயன்பாடும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.