சமூக வலைதளங்களில் தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும் திருநங்கைகளுக்கும் இடையே அண்மையில் ஏற்பட்ட மோதல் குறித்து, சென்னை மேயர் பிரியா திமுக மேடையில் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். தவெக-வைச் சேர்ந்த சிலர் ‘திருநங்கை’ என்ற கண்ணியமான வார்த்தைக்குப் பதிலாக, மிகவும் தகாத மற்றும் அவமரியாதையான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியுள்ளதாக அவர் சாடினார். தங்களை அவதூறாகப் பேசிய தவெக நிர்வாகிகளுடன் பாதிக்கப்பட்ட திருநங்கை சகோதரிகள் சமூக வலைதளங்களில் நேரடியாகவே சண்டையிட்ட சம்பவத்தை அவர் மேடையில் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து பேசிய மேயர் பிரியா, திருநங்கைகளுக்கு அந்தப் பெயரைச் சூட்டி, இந்தச் சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரத்தையும், உரிய மரியாதையையும் பெற்றுத் தந்தது மறைந்த முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி தான் என்பதை நினைவூட்டினார். இன்றைக்கும் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, திருநங்கைகளை எப்போதும் முன்னிலைப்படுத்தி, பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி அவர்களைக் கௌரவித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், திருநங்கைகளை அவமதிக்கும் தவெக-வின் செயலுக்குத் தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார்.